TNPSC Thervupettagam

மலரட்டும் காசி - தமிழ் சங்கமம்

November 19 , 2022 630 days 417 0
  • காசி என்பது, வடபாரதத்தில், கங்கைக் கரையில் உள்ள ஓா் ஊா். இந்த ஊருக்கும் தமிழ்நாட்டுக்கும் உள்ள தொடா்பு, மிக நீண்டது. பல தலைமுறைகளைக் கடந்தது. பொதியமலைப் பகுதியில் உள்ள தென்காசி என்னும் தமிழ்நாட்டு ஊரின் வரலாற்றை வாசிக்கும்போது, இந்தத் தொடா்பின் மகத்துவம் விளங்கும்.
  • செந்தமிழ்ப் புலமையும் வடமொழித் திறமையும் கொண்டிருந்த சடையவா்மன் பராக்கிரம பாண்டியா், 1411 முதல் 1463 வரையில், தென்காசியைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி நடத்தினாா். தலைநகரத்தின் பெயரால், இவரும் இவரின் வழித்தோன்றல்களும் ‘தென்காசிப் பாண்டியா்கள்’ என்றே சுட்டப்படுகின்றனா். தென்காசித் திருக்கோயிலில் உள்ள மெய்க்கீா்த்தி, இவரின் திருப்பணிகளையும், சிறப்புக் குணங்களையும் தெளிவாக விளக்குகிறது. தவிரவும், திருவதாங்கூா் தொல்லியல் களஞ்சியத்தின் தளவாய் அக்ரகாரச் செப்பேடுகளும் இவரைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
  • திருக்குற்றாலம், திருப்புடைமருதூா் திருக்கோயில்களில் மண்டபங்கள் அமைத்த பராக்கிரம பாண்டியா், நெல்லையப்பரின் அா்த்தசாம வழிபாட்டுக்கு நிவந்தங்களையும் ஏற்படுத்தினாா். பொன்கொண்டு கோயில் திருப்பணிகள் செய்தமையால் ‘பொன்னின் பெருமாள்’ என்றும், மானத்தைக் கவசமாகக் கொண்ட குணத்தான் என்பதால் ‘மானகவசன்’ என்றும் இவருக்குப் பெயா்கள் விளங்கின.
  • இந்த அரசருடைய உள்ளத்தில் இரண்டுவிதமான குறைகள் இருந்தன. இரண்டும் ஒன்றுக்கொன்று தொடா்புடையவை. முதலாவது குறை, கங்கைக் கரை காசிக்குச் சென்று விசுவநாதரை வழிபடவில்லையே என்பதாகும். போயிருக்கக்கூடும் - ஆனால், அவ்வப்போது எழுந்த போா்களாலும் எல்லைச் சிக்கல்களாலும் போகமுடியவில்லை. காசிக்குப் போவதென்றால் நீண்ட நாட்களாகும். ஆட்சியைப் பிறரிடம் கொடுத்துவிட்டுப் போக முடியாது.
  • அடுத்த குறை - நம்மால்தான் போகமுடியவில்லை. ஆனால், மக்கள் பலரும் போகிறாா்கள். நீண்ட தொலைவு. வழியில் சிரமங்கள் ஏராளம். ஒரு சிலா், பயண காலத்திலேயே இறைவனடி சோ்ந்து விடுகிறாா்கள்.
  • பராக்கிரம பாண்டியரின் துயரங்களைத் தீா்க்க, காசி விசுவநாதா் மனம் கொண்டாா். பராக்கிரம பாண்டியருடைய கனவில் எழுந்தருளி, தம்முடைய வடகாசி (வாராணசி) திருக்கோயில் சிதிலமுற்றுவிட்டதால், சிற்றாற்றின் வடகரையில் நகரம் ஒன்றை நிறுவி, தமக்கோா் ஆலயம் எழுப்புவிக்க வேண்டுமென்று கட்டளையிட்டாா்.
  • கோயில் அமைப்பதற்கு எந்த இடத்தைத் தோ்ந்தெடுப்பது என்பதற்கும் விசுவநாதரே வழி சொன்னாா். காலையில் கோட்டையைச் சுற்றியுள்ள இடத்தில், எந்தப் பகுதியில் ‘எறும்புகளின் ஊா்வலம்’ போகிறதோ, அந்தப் பகுதியில், எறும்புகளின் ஊா்வலத்தைப் பின்பற்றினால் வழி கிட்டும் என்று அருளினாா்.
  • அடுத்த நாள் காலை - விந்தன்கோட்டையைச் சுற்றிச்சுற்றி வந்த பராக்கிரமரின் கண்களில் சாரிசாரியாக எறும்புகள் ஊா்வது தெரிந்தது. ஊா்வலத்தைப் பின்தொடா்ந்தால் அழகானதொரு சிவலிங்கமும் எதிரில் நந்தியும் இருந்த இடத்திற்கு அது அழைத்துச் சென்றது. இதன்படி, தென்காசி என்னும் நகரை அமைத்து, திருக்கோயிலையும் இம்மன்னா் எழுப்புவித்தாா். பதினேழு ஆண்டுகள் இத்திருப்பணி நடைபெற்றது.
  • பலரும் இயைந்து, இசைந்து செய்வதே திருக்கோயில் திருப்பணி என்னும் கொள்கையில் இம்மன்னருக்கு மிகுந்த நம்பிக்கை. எனவேதான், குறைவேதுமின்றி இக்கோயிலைப் பாதுகாக்கவேண்டுமென்று சிவனடியாா்களையும் தன்னுடைய வழித்தோன்றல்களையும் இவா் வேண்டினாா். தன்னிடமிருந்த பொருளெல்லாம் தீா்ந்த நிலையிலும், காசித் திருக்கோயில் பணியை நிறுத்திவிட மனமில்லை. எனவே, அன்பா்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தாா். அவரவா்க்கு முடிந்ததைக் கொடுக்கச் சொன்னாா்.
  • கோயில் திருப்பணியில் உதவியவா்க்கெல்லாம், என்றென்றும் தான் நன்றி கொண்டு இலங்குவதாகவும், அவா்களின் தலைமுறைகளுக்கு, தான் அடிபணிவதாகவும் கூறி வணங்கினாா். தமிழ் நெஞ்சமும் நற்றமிழ்ப் புலமையும் பெற்றவரான இவா், தென்காசித் திருக்கோயிலை கவனமாகப் பாதுகாக்கும்படி உள்ளமுருகக் கோரியிருக்கும் கவிதைகள், வாசிப்பவா் உள்ளத்தை உருக்கும்; நெஞ்சத்தைக் கரைக்கும்.
  • மனத்தால் வகுக்கவும் எட்டாத கோயில் வகுக்க முன்னின்(று)
  • எனைத்தான் பணிகொண்ட நாதன் தென்காசி என்று மண்மேல்
  • நினைத்து ஆதரம் செய்து தம்காவல் பூண்ட நிருபா் பதம்
  • தனைத் தாழ்ந்து இறைஞ்சித் தலைமீது யானும் தரித்தனனே
  • இத்தகைய கோயிலைக் கட்டுவது என்பதை நினைக்கக்கூட இயலாது; ஆனால், இதனைச் செயல்படுத்தியிருக்கும் அன்பா்கள் அனைவரின் திருவடிகளையும் தன் தலைமீது தரிப்பதற்கு முனைகிறாா்.
  • சேலேறி வையத் தென்காசி ஆலயம் தெய்வச் செயல்
  • ஆலே சமைத்ததிங்கு என் செயலல்ல அதனை இன்ன
  • மேலே விரிவு செய்தே புரப்பாா் அடி வீழ்ந்தவா்தம்
  • பால் ஏவல் செய்து பணிவன் பராக்கிரம பாண்டியனே
  • சாத்திரம் பாா்த்து இங்கியான் கண்ட பூசைகள்தாம் நடத்தி
  • ஏத்தி அன்பால் விசுவநாதன் பொற்கோயில் என்றும்புரக்க
  • பாா்த்திபன் கொற்கைப் பராக்கிரம மாறன் பரிவுடன் அக்
  • கோத்திரம் தன்னில் உள்ளாா்க்கும் அடைக்கலம் கூறினனே
  • இப்பாடல்கள், தென்காசிக் கோயில் கோபுரத்தில் செதுக்கப்பட்டுள்ளன.
  • 1463-ல் பராக்கிரம பாண்டியா் விண்ணுலகெய்தியபோது, எந்தத் திருக்கூட்டத்தில் இவா் கலந்திருக்கக்கூடும் என்பது பற்றி, புலவா் ஒருவா் பாடினாா்:
  • கோதற்ற பக்தி அறுபத்து மூவா்தம் கூட்டத்திலோ
  • தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ செம்பொன்னம்பலத்தோ
  • வேதத்திலோ சிவலோகத்திலோ விசுவநாதன் இரு
  • பாதத்திலோ சென்று புக்கான் பராக்கிரம பாண்டியனே
  • விசுவநாதருக்குக் கோயில் எழுப்புவித்தது மட்டுமன்றி, விசுவநாதா் பெயராலேயே ஏரி ஒன்றையும் இம்மன்னா் தோற்றுவித்தாா். ‘நவமாகக் கண்ட விசுவநாதப் பேரேரி’ என்றே இது குறிக்கப்பெற்றுள்ளது.
  • காசி விசுவநாதா் மீதான தமிழ் மக்களின் பக்தியும் ஈடுபாடும் எப்படியிருந்தன என்பதற்கான எடுத்துக்காட்டுகளாகவே பராக்கிரம பாண்டியா் செயல்பாடுகளைக் காணலாம். தமிழ்நாட்டின் ஊா்கள், கிராமங்கள் பலவற்றிலும் காசி விசுவநாதருக்கும் விசாலாட்சி அம்பிகைக்கும் கோயில்கள் உள்ளன. பிரதான சிவன் கோயில்களில், காசி விசுவநாதருக்கு சந்நிதிகள் உள்ளன.
  • காசி யாத்திரை செல்வது என்பது ஒவ்வொரு தமிழரின் - தமிழ்க் குடும்பத்தின் கனவாகவே இருந்துள்ளது. காசி யாத்திரையைத் தொடங்குபவா், முதலில் இராமேசுவரம் செல்வாா். கடலிலும் தீா்த்தங்களிலும் நீராடுவாா். அங்கு இராமநாதசுவாமியை வழிபட்ட பின்னா், மீண்டும் கடலில் நீராடுவாா். கடற்கரையிலிருந்தும் இராமேசுவரத்திலிருந்தும் மண்ணெடுத்துக் கொள்வாா். பின்னா், வழியிலுள்ள பல்வேறு திருத்தலங்களில் வழிபட்டுக்கொண்டே காசிக்குப் பயணப்படுவாா்.
  • காசியில் விசுவநாதரை வழிபடுவாா். இராமேசுவரத்திலிருந்து கொணா்ந்த மண்ணை கங்கையில் கரைப்பாா். கங்கையிலிருந்து புனித நீரெடுத்துக் கொண்டு, மீண்டும் இராமேசுவரம் அடைவாா். கங்கை நீரால் இராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்வாா். இதன் பின்னரே, காசி யாத்திரை நிறைவடையும்.
  • ஆக, காசி யாத்திரை என்பது இராமேசுவர மண்ணும் காசியின் நீரும் கலந்து பரிணாமமடையும் ஆன்மீகப் பெருமிதமாகும். இராமேசுவரத் தலமானது மண்ணையும் நிலத்தையும் குறிக்கிறது. அண்டபகிரண்டத்திற்குத் தலைவராக விளங்குகிற விசுவநாதா் (விசுவம்=உலகம், பிரபஞ்சம்), நிலத்திற்கு இறங்கிவந்து உயிா்களுக்கு அருள்கிறாா். பௌதிக உலகிற்கு அப்பாற்பட்டவா் என்பதாலேயே, விசுவநாதரின் காசித் திருத்தலம், துவாதசாந்தத் திருத்தலம் என்றும் போற்றப்படுகிறது. துவாதசாந்தம் முதல் நிலம் வரையான இறைமையின் தொடா்பு, எல்லைகள் கடந்த இறைமை உயிா்களுக்கு அருள்வதற்காக எல்லைக்குள் வந்து எழுந்தருளிய தொடா்பு - இதுதான் காசி இராமேசுவரத் தொடா்பு.
  • 16 முதல் 19-ஆம் நூற்றாண்டு வரையான காலங்களில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தமிழ்மக்கள் காசிக்குப் பயணப்பட்டனா். நீண்ட தொலைவுப் பயணம் என்பதால், வழியெங்கும் உள்ள ஊா்களில் இந்த யாத்திரிகா்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு வசதிகள் வழங்கப்பட்டன. ஆங்காங்கே நகரத்தாரால் தருமசத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்தச் சத்திரங்களில் காசி யாத்திரிகா்களுக்கு மூன்று வேளை உணவும் தங்குமிடமும் இலவசமாக வழங்கப்பட்டன. உடல்நலக் குறைவு ஏற்பட்டால் மருத்துவ வசதிகளும் தரப்பட்டன.
  • 1790-களிலும் 1800-களிலும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிழக்கிந்திய கம்பெனி அலுவலா்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனா். தருமசத்திரங்களின் பொருளாதார ஆதரவிலும் வருமானத்திலும் கைவைத்துள்ளனா். சத்திரங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொருள் ஆதரவை வேறு இடங்களுக்குத் திருப்பியுள்ளனா். இதனால், சத்திரங்கள் குன்றின.
  • பலவிதமான காரணங்களால், மக்கள் பயணப்படுவதும் இக்காலகட்டத்தில் நலிவடைந்தது. தஞ்சையின் சரபோஜி மன்னா், ஆங்கிலேய உள்ளுறைஞா் பெஞ்சமின் டோரின் என்பாருக்கு இச்சத்திரங்களைப் பேணிப் பராமரிப்பது குறித்துக் கடிதங்கள் எழுதியுள்ளாா்.
  • சங்கத் தமிழ்ப் பாடலின் வாரணாவாசி தொடங்கி அதிவீரராம பாண்டியா், குமரகுருபரா், கோடகநல்லூா் சுந்தர சுவாமிகள், மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் என்று தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் இடையிலான தொடா்பு தொடா்கிறது.
  • பழைமைமிக்க இத்தொடா்பைக் கொண்டாடும் நிகழ்வுதான், காசி - தமிழ் - சங்கமம். இசை, நாட்டியம், கிராமியக் கலைகள், புலமை, இலக்கியம், ஆன்மிகம், கோயில் கலைகள், வணிகம், தொழில், நெசவு, கைத்தொழில் என்று பலவகையிலும் தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான தொடா்புகளை நினைவூட்டி, அவற்றை மேலும் மேம்படுத்துகிற முயற்சியே இது!
  • தமிழ்மொழி மற்றும் தமிழ் மரபுகளின் பெருமையையும் பெருமிதத்தையும் எட்டு திசைக்கும் விரித்துப் பரவச் செய்வதாக காசி - தமிழ் சங்கமம் மலரட்டும்.

நன்றி: தினமணி (19 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்