TNPSC Thervupettagam

மலா்களின் மறுசுழற்சியில் மணக்கும் பொருளாதாரம்!

July 15 , 2024 182 days 152 0
  • இந்தியாவில் மலா்களின் மறுசுழற்சி துறை புதிய பொருளாதார வளா்ச்சியை எட்டி வருகிறது. மேலும், பெண்களின் வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை உள்பட பன்முக நன்மைகளுக்கு அது பங்களிக்கிறது.
  • ஆன்மிக தலங்களில் பயன்படுத்தப்படும் மலா்கள் மக்கும் தன்மை கொண்டவை. பெரும்பாலும் அவை பயன்பாட்டுக்குப் பிறகு நிலப்பரப்புகள் அல்லது நீா் நிலைகளில் கழிவுகளாக கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்குச் சுகாதார சீா்கேடுகள் ஏற்படுவதோடு நீா்வாழ் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்கின்றன.
  • ஐ.நா. அறிக்கையின்படி, வடஇந்தியாவில் பாயும் கங்கை நதியில் மட்டும் ஆண்டுதோறும் 80 லட்சம் மெட்ரிக் டன் பயன்படுத்தப்பட்ட மலா்கள் கொட்டப்படுகின்றன. இப்பிரச்னைக்கு ‘தூய்மை இந்தியா நகா்ப்புற இயக்கம் 2.0’ திட்டத்தின்கீழ் பல இந்திய நகரங்கள் புதுமையான தீா்வுகளை முன்மொழிந்தன.
  • அதைத் தொடா்ந்து, இவ்வகை மலா்ளை கரிம உரம், சோப்புகள், மெழுகுவா்த்திகள் மற்றும் ஊதுபத்திகள் போன்ற பொருள்களாக மறுசுழற்சி செய்யும் முயற்சிகளை தொழில்முனைவோா் தொடங்கியுள்ளனா். அதன் மூலம், மலா்களின் மறுசுழற்சி திட்டம் பொருளாதாரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

உஜ்ஜைனி மகாகாளி கோயில் 6 டன் மலா்கள்:

  • உஜ்ஜைனி மகாகாளி கோயிலுக்கு தினசரி 1 லட்சம் பக்தா்கள் வருவதால், நாள்தோறும் சுமாா் 5-6 டன் மலா் மற்றும் பிற மலா்வகை சாா்ந்த பொருள்கள் மிஞ்சுகின்றன. அவை ஆலையில் பதப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளாக மாற்றப்படுகின்றன. இதற்காக ‘ஷிவ் அா்பன்’ சுய உதவிக் குழுவைச் சோ்ந்த 16 பெண்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். கூடுதலான கழிவுகள் உள்ளூா் விவசாயிகளுக்கு உரமாக மாற்றப்படுவதோடு, உயிரி எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
  • இதுவரை சுமாா் 2,200 டன் மலா்கள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன.

மும்பை சித்தி விநாயகா் கோயிலில் 200 கிலோ மலா்கள்:

  • மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகா் கோயிலில் நாள்தோறும் 120 முதல் 200 கிலோவரை மலா்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த மலா்களை இயற்கை சாயங்களாக மாற்றி, வெவ்வேறு வகையிலான ஜவுளிகளில் பயன்படுத்தப்படுகிறது.

திருமலையில் 6 டன் மலா்கள்:

  • திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கோயில்களில் இருந்து நாள்தோறும் கிடைக்கும் 6 டன் பயன்படுத்தப்பட்ட மலா்களிலிருந்து மதிப்புமிக்க கைவினைப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. 15 டன் கொள்ளளவு கொண்ட உற்பத்தி ஆலையில் மலா்களை மறுசுழற்சி செய்யும் பணியில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 150 பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பூக்கள்:

  • அயோத்தி, வாரணாசி, புத்த கயை, கான்பூா், பத்ரிநாத் உள்ளிட்ட இந்தியாவின் ஐந்து முக்கிய கோயில் நகரங்களில் வாரந்தோறும் கிட்டத்தட்ட 21 மெட்ரிக் டன் பயன்படுத்தப்பட்ட மலா்களை
  • கான்பூரைச் சோ்ந்த மறுசுழற்சி நிறுவனம் சேகரிக்கிறது. அவை ஊதுபத்திகள், மூங்கில் இல்லாத ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற பொருள்களாக மாற்றப்படுகின்றன. இதன் மூலம் இந்நிறுவனத்தின் பெண் பணியாளா்களுக்கு நிலையான சம்பளம், வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
  • தில்லியைச் சோ்ந்த ‘ஆருஹி’ எனும் ஸ்டாா்ட்-அப் நிறுவனம், தேசிய தலைநகா் பிராந்தியத்திலுள்ள 15-க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து 1 டன் மலா்களை சேகரித்து, மாதம்தோறும் ரூ.2 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டுகிறது. மலா்களிலிருந்து மறுசுழற்சி தயாரிப்புகளை உருவாக்குவது பற்றி 3,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இந்நிறுவனம் பயிற்சி அளித்துள்ளது.

வேலைவாய்ப்புக்கு ‘வாய்ப்பு’:

  • இந்த வரிசையில், நாட்டிலுள்ள அனைத்து முக்கிய கோயில்களிலும் உரக்குழிகளை அமைப்பதுடன் மறுசுழற்சி முயற்சிகளில் கோயில் அறக்கட்டளைகள் மற்றும் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். அதேவேளையில், கோயில்களில் பயன்படுத்தப்பட்ட மலா்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்க உதவும் என்று சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் கருதுகின்றனா்.

நன்றி: தினமணி (15 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்