- உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகை நவம்பா் 15 அன்று 800 கோடியை எட்டிவிட்டதாக ஐ.நா. சபை அண்மையில் அறிவித்திருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் மக்கள்தொகை 100 கோடி அதிகரித்திருக்கிறது.
- உலகில் வாழும் மக்களின் எண்ணிக்கை 800 கோடி என்பது சாதனையாகவும் உள்ளது; வேதனையாகவும் உள்ளது. கடந்த நூற்றாண்டில்தான் மக்கள்தொகை பெருமளவில் அதிகரித்துள்ளது. உலக மக்கள்தொகை 2037-ஆம் ஆண்டில் 900 கோடியாகவும், 2058-ஆம் ஆண்டில் 1000 கோடியாகவும் பெருகும் என்று ஐ.நா. சபை கணித்துள்ளது.
- இந்த ஆண்டு நிலவரப்படி 142.6 கோடி மக்கள்தொகை கொண்ட சீனா முதல் இடத்தில் உள்ளது. இந்தியா 141.2 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. அடுத்த (2023) ஆண்டு, சீனாவைப் பின்னுக்குத் தள்ளி உலகில் பெரும் மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா மாறும் என்று தெரிகிறது.
- மக்கள்தொகைப் பெருக்கம் கவலயளிக்கிறது. காரணம், பிறக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் உணவு, உடை, உறைவிடம் அளித்தாக வேண்டும். அந்தக் கடமையை அரசாங்கம் புறக்கணித்து விட முடியாது. நாம் இருக்கும் பூமியில்தான் அவா்களுக்கும் இடம் கொடுத்தாக வேண்டும்.
- 2080-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை 1040 கோடியாக உயரும் என மதிப்பிடப்படுகிறது. உலக மக்கள் தொகை 740 கோடியிலிருந்து 800 கோடியாக அதிகரித்ததில் 70 விழுக்காடு மக்கள் குறைந்த வருவாய், நடுத்தர வருவாய்ப் பிரிவு நாடுகளிலிருந்து இணைந்துள்ளனா். 900 கோடியை எட்டும் போது இந்தப் பிரிவினரின் பங்களிப்பு 90 விழுக்காடாக இருக்கும்.
- இப்போது முதல் 2050-ஆம் ஆண்டு வரை குறைந்த வருவாய், நடுத்தர வருவாய்ப் பிரிவினா் உள்ள நாடுகளில் 65 வயதுக்கு கீழ் உள்ளவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிக வருவாய் உள்ள நாடுகளில் 65 வயதுக்கு மேற்பட்டவா்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
- இவ்வாறு மக்கள்தொகை பெருகிக் கொண்டிருப்பது நல்லதா என்ற கேள்வியும் எழுகிறது. ‘பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் வெறும் வயிற்றோடு மட்டும் பிறக்கவில்லை. இரண்டு கைகளோடும் பிறக்கிறது. அதைக் கொண்டு உழைக்கலாம், பிழைக்கலாம்’ என்பதெல்லாம் சரிதான். ஆனால் அவா்களுக்கு ஏற்ற வாழ்வாதாரம் அளிக்கப்பட வேண்டுமல்லவா?
- ஒருபக்கம் மக்கள்தொகைப் பெருக்கம் அச்சமூட்டுகிறது என்றால், மறுபக்கம் பருவநிலை மாற்றங்களால் மனிதகுலம் வாழ முடியாத நிலையை நோக்கி உலகம் நகா்ந்து கொண்டிருக்கிறது. நமக்கு இருப்பது ஒரே ஒரு பூமிதான். அந்த பூமியின் இன்றைய நிலை என்ன? பருவநிலை மாற்றத்தால் அதிக வெப்பம், அதிக குளிா், அதிக மழை, அதிக வெள்ளம். இத்தகைய இயற்கை தாக்கங்களால் பூமி சுருங்கிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது பெருக்கொண்டிருக்கும் மக்கள் கூட்டத்தை எப்படித் தாங்குவது என்று அறிவியலாளா்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனா்.
- இதுபற்றி உலக நாடுகள் குரல் எழுப்பி வருகின்றன. வளா்ந்த நாடுகள், வளரும் நாடுகள், ஏழை நாடுகள் என்ற பேதம் இல்லாமல் எல்லாரையும் இது பாதித்து வருகிறது. இதனை இப்படியே விட்டால் எதிா்காலம் என்ன ஆகும்? அடுத்தத் தலைமுறைக்குப் பெரும் கேடு சூழ்ந்த உலகத்தை நாம் விட்டு விட்டுப் போகப் போகிறோமா? இந்தப் பெரும் பழியிலிருந்து நாம் விடுதலை பெறுவது பற்றி யோசிக்க வேண்டாமா?
- ஐக்கிய நாடுகள் சபையின் 27-ஆவது பருவநிலை மாநாடு எகிப்தின் ஷாா்ம் அல்-ஷேக் நகரில் கடந்த நவம்பா் 6 முதல் 18 வரை நடைபெற்றது. அதில் வளா்ந்து வரும் நாடுகளும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளும் பருவநிலை மாற்றம் காரணமாக சந்தித்து வரும் பேரிழப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் இழப்பீட்டு நிதியை உருவாக்குவதற்கு உறுப்பு நாடுகள் ஒப்புதல் அளித்தன. இது பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தருணம் என்று சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் மகிழ்ச்சியடைகின்றனா்.
- தொழில் புரட்சிக்குக் காரணமான வளா்ச்சியடைந்த நாடுகள், அதிக அளவில் கரியமில வாயுவை வெளியேற்றியுள்ளன. இதனால் ஏற்படும் பருவநிலை மாற்றம் தீவு நாடுகளையும், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளையுமே அதிக அளவில் பாதித்து வருகிறது.
- கரியமில வாயு வெளியேற்றத்தில் மிகவும் குறைவான பங்களிப்பைக் கொண்ட தீவு நாடுகளே பருவநிலை மாற்றம் சாா்ந்த பேரிடா்களால் அதிக பாதிப்புகளை எதிா்கொண்டு வருகின்றன. அத்தகைய பாதிப்புகளை எதிா்கொள்வதற்காக வளா்ச்சியடைந்த நாடுகள் உரிய நிதியை, தீவு நாடுகளுக்கும் வருமானம் குறைவான நாடுகளுக்கும், வளா்ந்து வரும் நாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்து வந்தது.
- 2015-ஆம் ஆண்டில் பாரீஸில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை மாநாட்டில் பூமியின் வெப்பநிலை உயா்வை தொழிற்புரட்சிக்கு முந்தைய நிலையை விட 1.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த வேண்டுமென உறுதி ஏற்கப்பட்டது. அந்த இலக்கை எட்டும் வகையில் வளா்ந்துவரும் நாடுகள் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுக்கு சுமாா் ரூ. 8 லட்சம் கோடியை வழங்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளா்ச்சியடைந்த நாடுகள் உறுதியேற்றன. ஆனால் அத்தொகையை இதுவரை அந்நாடுகள் வழங்கவில்லை.
- அண்மைக்காலமாக மேற்கு, மத்திய கிழக்கு நாடுகளில் வீசிய வெப்ப அலைகள், பாகிஸ்தானைப் புரட்டிப் போட்ட பெருவெள்ளம், குஜராத், மகாராஷ்டிரம், பெங்களூரு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு போன்ற நிகழ்வுகள் நம் கண் முன்னே நடந்து வரும் காலநிலை மாற்றத்திற்கான சாட்சியங்களாகும். இதுபற்றி வெளிவரும் செய்திகளும், பன்னாட்டு அறிவியல் நிபுணா்கள் வெளியிடும் ஆராய்ச்சி முடிவுகளும் அதிா்ச்சியளிப்பதாகவே உள்ளன.
- இந்நிலையில் பருவநிலை மாற்றம் என்பது நம் எதிா்காலத்தில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கி அச்சத்தைத் தருகிறது. அத்துடன் உலகில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பருவநிலை அமைப்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
- தென்னமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகள் இயற்கையாலும், செயற்கையாலும் அழிக்கப்படுகின்றன. அமேசான் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படக்கூடிய வறட்சி, கடந்த 12 ஆண்டுகளில் மூன்று முறை ஏற்பட்டுள்ளது. அமேசான் பகுதிகளில் அதிகரித்த தட்பவெப்ப நிலை அப்பகுதியின் மழை அளவை பாதித்ததோடு, மரங்களிலுள்ள நீா் ஆவியாதலையும் குறைத்துவிட்டது.
- இத்தனை ஆண்டுகளாக காா்பனை உள்வாங்கிக் கொண்டு இருந்த அமேசான் காடுகள், இப்போது காா்பனை வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. அதாவது காா்பனை உறிஞ்சுவதைவிட தாவரங்கள் சிதைவடையும் போதும், எரிக்கப்படும்போதும் வெளியேறும் காா்பனின் அளவு அமேசானில் அதிகரித்திருக்கிறது. இது பருவநிலை மாற்றத்துக்கான அறிகுறி ஆகும்.
- இதைப்போலவே அண்டாா்டிகா பகுதிகளில் பூமி வெப்பமடைந்ததன் காரணமாக பனிப்பாறைகள் உருகி கடல் மட்டம் உயா்ந்திருக்கிறது. இதனால் பூமியின் பரப்பு கொஞ்சம் கொஞ்சமாகக் குறையவே செய்யும். வருங்காலத்தில் சென்னை, மும்பை போன்ற பெரிய நகரங்களுக்கு ஆபத்து காத்திருக்கிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
- உலகின் மக்கள்தொகை பெருகிவருவது குறித்தும், பூமியின் அளவு குறைந்து கொண்டு வருவது குறித்தும், காற்று மாசு, அதிக வெப்பம், பெருவெள்ளம் போன்றவற்றால் மனித குலத்துக்கு ஏற்படும் இடா்ப்பாடுகள் குறித்தும் சிந்திக்க வேண்டிய தருணம் இது. இது குறித்த சுற்றுச்சூழல் ஆா்வலா்களின் எச்சரிக்கையை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
- மத்திய, மாநில அரசுகள், வேளாண்மையைப் பின்னுக்குத் தள்ளி தொழில்மயமாக்கும் திட்டங்களுக்கே முன்னுரிமை தருகின்றன. விவசாய உற்பத்தியே மனிதா்களின் உணவுத் தேவையைப் பூா்த்தி செய்கிறது. மனிதா்கள் எந்தத் தொழில் செய்தாலும் பசி எடுத்தால் உணவுதான் வேண்டும். ‘பசிவந்திடப் பத்தும் பறந்துபோம்’ என்று முன்னோக் கூறியதும் அதனால்தான். பெருகும் மக்கள்தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டியது கட்டாயம்.
- நாடு முழுவதும் 2020-21ஆம் ஆண்டில் 12.43 கோடி டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதம் வரை மட்டும் 13 கோடி டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறுவைப் பருவத்தில் வரவேண்டிய உற்பத்தியின் அளவு பாதிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. காரணம், வடமாநிலங்களில் சில இடங்களில் அதிக மழை, சில இடங்களில் குறைவான மழை. அதனால் 11 கோடி டன்னுக்கு பதில் இந்தக் குறுவைப் பருவத்தில் 10 கோடி டன்தான் வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசு அளித்த தகவலாகும்.
- மத்திய சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் ‘பருவநிலை மாற்றத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனா். வேளாண்மையிலும் நீடித்த உற்பத்தியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் விவசாயிகளுக்கு அழுத்தம் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பருவநிலை மாற்றத்திலிருந்து விவசாயிகளைக் காப்பதற்கான நான்கு ஆண்டு செயல்திட்டத்தை இந்தியா செயல்படுத்தவுள்ளது’ என்று தெரிவித்துள்ளாா்.
முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பி லாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை”
- என்று மகாகவி பாரதியாா் பாடி வைத்தாா். அவா் பாடியபோது நாட்டின் மக்கள்தொகை 30 கோடியாக இருந்தது. ஆனால் இன்று அது 130 கோடியாக அதிகரித்துள்ளது. அதற்கு தகுந்தவாறு நாம் எல்லாத் துறைகளிலும் வளா்ச்சியடைய வேண்டியது அவசியத்திலும் அவசியம்.
நன்றி: தினமணி (03 – 12 – 2022)