TNPSC Thervupettagam

மழைக்கால நோய்கள்:மக்களும் அரசும் செய்ய வேண்டியவை

July 15 , 2020 1472 days 730 0
  • தமிழகத்தில் சென்ற வாரம் பருவ மழை தொடங்கிவிட்டது. அதனால், பருவச் சூழல் மாறிவிட்டது.

  • வழக்கமாகப் பருவநிலை மாறும்போது, கரோனாவைப் போல் அதிகமாக மக்களைப் பாதிக்கும் நோய்கள் பலவும் பரவுவது இயல்பு.

  • ஆனால், கடந்த 4 மாத காலமாகக் காய்ச்சல் என்றாலே அது கரோனா தொற்றாகத்தான் இருக்கும் என்ற பயம் எல்லோரிடத்திலும் காணப்படுகிறது.

  • எனவே, கரோனாவை ஒழிக்கும் நடவடிக்கைகளுக்குத்தான் அரசும் மருத்துவர்களும் முன்னுரிமை தருகின்றனர். மற்ற காய்ச்சல் நோயாளிகளைப் புறக்கணித்துவிடுகின்றனர். இது இன்னொரு பேரிடருக்குத்தான் வழிவகுக்கும்.

  • உதாரணமாக, இந்தியாவில் சென்ற ஆண்டில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 1,36,422 பேர், பன்றிக் காய்ச்சலுக்கு உள்ளானவர்கள் 28,798 பேர் என்கிறது தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம்.

  • இதே நிலைமை இந்த ஆண்டும் திரும்புமானால், இந்திய சுகாதாரத் துறைக்கு அதை எதிர்கொள்வது பெரும் சவாலாகவே இருக்கும்.

  • மழைக் காலத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் தவிர, ஃபுளூ காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, வாந்தி, வயிற்றுப்போக்கு, சீதபேதி எனப் பலதரப்பட்ட நோய்கள் பரவும் அபாயமும் அதிகரித்துவருவதை மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

  • நீண்ட கால ஊரடங்கால் ஏற்பட்டுள்ள விரக்தியும், பழைய வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கமும் சுமந்துள்ள சமூகத்துக்கு மற்றொரு இடர்ப்பாடாக இந்த நோய்கள் தலையெடுப்பதைத் தடுக்க வேண்டிய அவசியமும் அவசரமும் அரசுகளுக்கு உள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரசுகளின் கவனம்

  • தற்போது அரசுகளின் முழுக் கவனமும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மட்டுமே இருக்கிறது.

  • கரோனாவைப் போலவே டெங்கு காய்ச்சலுக்கும் மருந்து இல்லை. கொசுக்களைக் கட்டுப்படுத்துவதன் மூலமே டெங்குவைக் கட்டுப்படுத்த முடியும்.

  • வழக்கமாகத் தெருக்களில் கொசு மருந்து தெளிக்கும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவரும் தற்போது கரோனா நோய்த்தடுப்புப் பணிக்குச் சென்றுள்ளனர்.

  • தெருப் பராமரிப்பு மற்றும் கொசு ஒழிப்புக்கான நிதிகள் எல்லாம் கரோனா ஒழிப்புக்குச் சென்றிருக்கும். அதனால், நாட்டில் பல பகுதிகளில் சுற்றுப்புறச் சூழல் கெட்டிருப்பதைக் காண்கிறோம்.

  • ஆரோக்கியம் கெடுக்கும் இந்தச் சூழலை மழைக் காலம் இன்னும் அதிகப்படுத்தவே செய்யும். அப்போது எந்தவொரு தொற்றுப் பரவலும் அதிகரிக்கும்.

  • அடுத்ததாக, நாட்டில் கரோனா ஒழிப்புக்குப் போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லை என்பதுதான் உண்மையான களச் செய்தி. இப்போது அந்தப் பணியில் முன்களத்தில் நிற்கும் அரசு மருத்துவர்களுக்கும் மருத்துவ உதவியாளர்களுக்கும்கூட போதிய ஓய்வு கிடைப்பதில்லை.

  • இப்படியொரு நிலையில், டெங்கு உள்ளிட்ட மற்ற நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அழுத்தமும் அரசு மருத்துவர்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது.

  • கரோனா தொற்றாளர்களைப் போல டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்த முடியாது.

  • மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைதான் கொடுக்கப்பட வேண்டும். ஊரடங்கால் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில், அரசு மருத்துவமனைகள் கூடுதல் நெருக்கடியை எதிர்கொள்கின்றன.

  • ஏற்கெனவே கரோனா நோயாளிகளால் அரசு மருத்துவமனைகள் நிரம்பிவிட்டன. இதனால், மற்ற காய்ச்சல் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கவும் வாய்ப்பிருக்கிறது.

  • இதையும் சொல்ல வேண்டும். ஊரடங்கால் வாகன வசதி இல்லாமல் இருப்பதும், மருத்துவமனைக்குச் சென்றால் கரோனா பரவிவிடுமோ என்ற அச்சமும் காய்ச்சல் நோயாளிகளை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறது.

  • இவர்கள் நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வரும்போது உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றுவிடுவதால் அவர்களுக்குச் சிகிச்சை கொடுப்பதும் சவாலாக உள்ளது. அப்போது சிகிச்சை பலனளிக்காமல் பலரும் பலியாகிவிட வாய்ப்பு உண்டு.

  • அதனால்தான், கரோனாவோடு இந்தப் பிரச்சினைகளை அவசரமாக அணுக வேண்டியது அவசியமாகிறது.

  • அதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாகச் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி, மருத்துவக் கட்டமைப்புகளை விரிவுபடுத்த வேண்டும்.

  • கரோனாவுக்காகப் பரிசோதிக்கும்போதே மற்ற காய்ச்சல்களுக்கும் சேர்த்துப் பரிசோதித்துவிட்டால் நோயாளிகளை எப்படி அணுகுவது என்பது தெளிவாகிவிடும்.

  • மேலும், கரோனாவையும் மற்ற நோய்களையும் எப்படிப் பிரித்தறிவது, அவற்றை எப்படித் தடுப்பது போன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மக்களுக்குக் கொண்டு செல்வது மிகுந்த பலனளிக்கும்.

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

  • ஊரடங்கால் இப்போது பெரும்பாலான மக்கள் வீடுகளில் முடங்கியிருக்கின்றனர். டெங்கு காய்ச்சல் கொசுக்கள் பகலில்தான் கடிக்கும்.

  • இதனால், டெங்கு பரவுவது எளிதாகிறது. மழைக் காலத்தில் ஏற்படும் மற்ற காய்ச்சல்கள் உடனடியாக அடுத்தவர்களுக்குப் பரவ இப்போதுள்ள வீட்டுச் சூழலும் உதவுகிறது.

  • மக்கள் மனது வைத்தால், கரோனாவை மட்டுமல்ல மற்ற மழைக் கால நோய்களையும் தவிர்க்கலாம்.

  • முதலில் கைச் சுத்தம், வீட்டுச் சுத்தம், கழிப்பறைச் சுத்தம் காக்கப்பட வேண்டும்.

  • குடிநீரைக் காய்ச்சி ஆறவைத்துக் குடிக்க வேண்டும். வெந்நீரில் கொப்பளிக்க வேண்டும். நீராவி பிடிப்பது நல்லது. இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ளுங்கள்; முகக்கவசம் அணியுங்கள்.

  • தெருக்களிலும் பொது இடங்களிலும் துப்பாதீர்கள். சுற்றுப்புறத்தில் எந்த இடத்திலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். கொசுக்கள் தங்கும் பழைய தட்டுமுட்டுச் சாமான்களை வெளியேற்றிவிடுங்கள்.

  • கொசுக்கடியிலிருந்து தப்பிக்க இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் கொசுவலையைப் பயன்படுத்துங்கள்.

  • உடல் முழுவதும் மறைக்கும் ஆடைகளை அணியுங்கள்; கொசுக்களை விரட்டும் புகைக்கருவிகளையும் களிம்புகளையும் பயன்படுத்துங்கள்.

  • மழைக் காலத்தில் அச்சமும் வேண்டாம், அலட்சியமும் வேண்டாம். நாம் வாழ்வதற்கு மழை அவசியம்; அதை மகிழ்ச்சியாக எதிர்கொள்ளப் பழகிக்கொள்வதும் அவசியமே!


 

நன்றி: தி இந்து (15-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்