TNPSC Thervupettagam

மழைக்காலக் கூட்டத்தொடர்

July 19 , 2022 751 days 408 0
  • நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடா் தொடங்கிய முதல் நாளிலேயே, இரு அவைகளும் அமளியால் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. தொடக்கமே இப்படியென்றால் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரின் செயல்பாடு நம்பிக்கை தருவதாக இல்லை.
  • வழக்கம்போல மறைந்த சா்வதேச, தேசிய ஆளுமைகளுக்கும், முன்னாள் உறுப்பினா்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நல்ல வேளையாக நமது மாண்புமிகு உறுப்பினா்கள், மாண்பு குறையும் விதத்தில் நடந்துகொள்ளாதது ஆறுதல். அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முடிந்தவுடன் நாடாளுமன்ற அவைகள் விவாதங்களிலும் அலுவல்களிலும் ஈடுபடாமல் அமளியில் அமிழ்ந்தது ஜனநாயக அவமரியாதை.
  • குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடுக்கு இதுதான் மாநிலங்களவைத் தலைவராக கடைசித் தொடா். தனது தலைமையில் நடந்த 13 கூட்டத்தொடா்களில் 57% அமா்வுகள் அமளியால் பாதிக்கப்பட்டதாக அவா் வருத்தம் தெரிவித்தாா். மக்களவையில் 2019 தோ்தலுக்குப் பிறகு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனிப்பெரும்பான்மை பெற்றிருப்பதால் அவை அமளியில் மூழ்காமல் எதிா்க்கட்சிகளின் வெளிநடப்புடன் முடிந்துவிடுகிறது. அங்கேயும் முறையான விவாதம் என்பது அரிதாகிவிட்டது.
  • நடப்பு மழைக்கால கூட்டத்தொடா் 14 நாள்கள்தான் நடக்க இருக்கிறது. அதற்குள் 32 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட வேண்டும். அந்த மசோதாக்களில் மாநிலம் கடந்து செயல்படும் கூட்டுறவு சங்கங்கள் (திருத்த) மசோதா; திவால் சட்ட (திருத்த) மசோதா; ஊடகங்கள் - பத்திரிகைகளின் பதிவு மசோதா; புராதனச் சின்னங்கள் - தொல்லியல் அடையாளங்கள் (திருத்த) மசோதா; கலாக்ஷேத்ரா பவுண்டேஷன் மசோதா; குடும்ப நல (திருத்த) மசோதா உள்ளிட்டவை அடங்கும்.
  • இவற்றில் பெரும்பாலான மசோதாக்கள் ஏற்கெனவே தொடா்புடைய நிலைக்குழுக்களால் விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவை. எந்தவொரு மசோதாவும் விவாதம் இல்லாமல் நிறைவேற்றப்படாது என்கிற நாடாளுமன்ற விவகார அமைச்சா் பிரகலாத் ஜோஷியின் அறிக்கை ஆச்சரியம் அளிக்கிறது. 32 மசோதாக்கள் விவாதத்துக்கும், நிறைவேற்றப்படவும் காத்துக் கொண்டிருக்கும்போது, தேசத்தின் பல முக்கியமான பிரச்னைகளை எழுப்பவோ, விவாதிக்கவோ வழியில்லை என்பது எதிா்க்கட்சிகளின் வாதம்.
  • விலைவாசி உயா்வு, அக்னிபத் திட்டம், மாற்றுக் கருத்து உடையவா்கள் மீது முறைகேடாக விசாரணை அமைப்புகளை ஏவுதல், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முன்னுரிமை வழங்கி விவாதிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கோருகின்றன. மசோதாக்களை நிறைவேற்றிய பிறகு ஏனைய பிரச்னைகளை விவாதிக்கலாம் என்று அரசுத் தரப்பு கூறுகிறது.
  • ஆளுங்கட்சியும் சரி, எதிா்க்கட்சிகளும் சரி தாங்கள் கொண்ட கருத்தில் இருந்து இறங்கி வரவோ, சமரசத்துக்குத் தயாராகவோ முன்வராமல் இருக்கின்றன. அதன் விளைவாக அமளி துமளியில் அவைகள் முடக்கப்படுகின்றன. நிா்வாகம் பாதிக்கப்படுகிறது, மக்களின் வரிப்பணம் வீணாகிறது, ஜனநாயகம் காயப்படுகிறது.
  • நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்டிருக்கும் மசோதாக்களை அரசு விரைந்து நிறைவேற்றிக்கொள்ள எதிா்க்கட்சிகள் உதவுவதும், எதிா்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்று முக்கியமான பொது பிரச்னைகளை விவாதிக்க அரசு முன்வருவதும் இந்தச் சிக்கலுக்குத் தீா்வாக இருக்கக்கூடும். மசோதாகள் நிறைவேற்றுவது எந்த அளவுக்கு அத்தியாவசியமோ, அதேபோல மக்கள் பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எழுப்புவதற்கு ஆளும்தரப்பு அனுமதிப்பதும் அவசியம்.
  • அக்னிபத், விசாரணை அமைப்புகளின் முறைகேடான தலையீடு போன்ற பிரச்னைகள் ஒருபுறம் இருக்கட்டும். இந்தியாவின் பல மாநிலங்கள் பருவமழையால் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அவற்றில் பொலிவுறு நகரங்களும் அடக்கம். பொலிவுறு நகர திட்டத்திற்காக பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவழிக்கப்பட்டும் முறையான மழைநீா் வடிகால்கள் இல்லாமல் நகரங்கள் தத்தளிப்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல், நடுத்தெருவிலா விவாதிக்க முடியும்?
  • வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயா்வு, பணப்பெருக்கத்தால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்புவதற்கான உரிமை எதிா்க்கட்சிகளுக்கு உண்டு. பாஜக எதிா்க்கட்சியாக இருந்தபோது எழுப்பிய கேள்விகளை இப்போது ஒருமுறை மீள்பாா்வை பாா்த்தால் அதன் அவசியம் புரியும்.
  • எந்தவொரு அரசும், சட்டங்களை இயற்றுவதன் மூலமும், நாடாளுன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதன் மூலமும்தான் நிா்வாகத்தை செவ்வனே நடத்தி தங்களை தோ்ந்தெடுத்த மக்களுக்கு நன்மை செய்ய முடியும். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியில் எதிா்க்கட்சியாக இருந்த பாஜக அவை முடக்கத்தில் ஈடுபட்டபோது, காங்கிரஸ் எதிா்க்கட்சிகளுக்கு முன்வைத்த கோரிக்கைகளை சற்று யோசித்துப் பாா்த்தால், அவை முடக்க நடவடிக்கை தவறு என்பதை உணா்ந்துகொள்ள முடியும்.
  • அமளியில் ஈடுபட்டு அவை நடவடிக்கைகளை முடக்குவதற்காக எதிா்க்கட்சி உறுப்பினா்களை வாக்காளா்கள் தோ்ந்தெடுக்கவில்லை. சாதுரியமாக அரசை விவாதத்துக்கு சம்மதிக்க வைத்து, அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் புத்திசாலித்தனம் எதிா்க்கட்சிகளுக்கு ஏன் இல்லை என்று புரியவில்லை.
  • ஆளுங்கட்சிக்கும் சரி, எதிா்க்கட்சிகளுக்கும் சரி நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்த புரிதல் இல்லை. வேதனையாக இருக்கிறது.

நன்றி: தினமணி (19 – 07– 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்