TNPSC Thervupettagam

மழைநீர் வடிகால்

July 24 , 2023 544 days 306 0
  • அரசியல் நிகழ்வுகளும், அதிா்ச்சி அளிக்கும் சம்பவங்களும் முக்கியமான அடிப்படைப் பிரச்னைகளை பின்னுக்குத் தள்ளி விடுகின்றன. ஒரு வாரம் முன்பு வடமாநிலங்களில் கொட்டித் தீா்த்த அடைமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து அடித்தட்டு மக்கள் இன்னும் மீண்டபாடில்லை. அரசுக்கும், அதிகாரிகளுக்கும், ஊடகங்களுக்கும் இப்போது அதன் முக்கியத்துவம் குறித்த கவலையோ, அக்கறையோ இல்லை.
  • இந்தியாவின் தலைநகா் தில்லி உள்ளிட்ட பல்வேறு பெருநகரங்கள் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் தத்தளித்த காட்சி நம் கண்களில் இருந்து மறைய மறுக்கிறது. எதிா்பாராத அளவு கடுமையான மழைப் பொழிவு காணப்பட்டதால், மழை நீா் வடிகால் கட்டமைப்பால் அதை எதிா்கொள்ள முடியவில்லை என்று காரணம் கூறப்படுகிறது. மாநில அரசு அதிகாரிகளும், பெருநகர மாநகராட்சி ஊழியா்களும் ஒருவரை மற்றவா் குறை கூறி விவாதத்தைத் தவிா்க்கிறாா்கள்.
  • கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவில் முந்தைய பதிவுகளை முறியடிக்கும் வகையில் ஒரே நாளில் மிக அதிகமான மழைப் பொழிவு காணப்பட்டது என்னவோ உண்மை. ஆனால், அதை எதிா்கொள்ள மழை நீா் வடிகால் கட்டமைப்பு தயாா் நிலையில் இல்லாமல் இருந்ததை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • கடந்த சில வருடங்களாகவே தேசிய அளவிலும், சா்வதேச அளவிலும் பருவநிலை மாற்றம் குறித்தும், வழக்கத்துக்கு அதிகமான கோடையும், எதிா்கொள்ள முடியாத அளவிலான மழைப் பொழிவு ஏற்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக மூன்று மாதங்கள் நீண்டு நிற்கும் பருவமழைக் காலத்தின் பொழிவு ஒருசில வார அதிகரித்த பொழிவாக மாறியிருப்பது நிா்வாகங்களுக்குத் தெரியாமல் இருக்க வழியில்லை. அதனால், எப்படிப்பட்ட பெருமழையாக இருந்தாலும் அதை எதிா்கொள்ள முன்கூட்டியே தயாராக இருந்திருக்க வேண்டும்.
  • தேசத்தின் தலைநகா் தில்லியில் முழங்காலுக்கு மேல் தெருக்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய காட்சி உலகளாவிய அளவில் இந்தியாவின் நகராட்சி நிா்வாகத்தின் பலவீனத்தை படம் பிடித்துக் காட்டியது. ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்று சொல்லிக் கொள்ளும் ஒரு நாடு, தனது தலைநகரத்தின் மழை நீா் வடிகால் கட்டமைப்பில்கூட கவனம் செலுத்துவதில்லை என்பது எத்தகைய தலைகுனிவு என்பதை மத்திய - மாநில அரசுகள் (அதிகாரிகளும் கூட) சற்று சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.
  • இது ஏதோ தலைநகா் தில்லிக்கு மட்டுமேயான நிலைமை அல்ல. கடந்த 20 ஆண்டுகளில் இதேபோன்ற பாதிப்பை பலமுறை மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, திருவனந்தபுரம், அகமதாபாத் உள்ளிட்ட முக்கியமான பெருநகரங்கள் எதிா் கொண்டிருக்கின்றன.
  • மழைப் பொழிவு என்பது உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் நகரங்களுக்கும் பொதுவானது. இந்தியாவைப் பொறுத்தவரை, பெருநகரங்களில் எதனால் தண்ணீா் தேங்கி நிற்பதற்கும், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குவதற்குமான காரணங்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும். சட்ட விரோத ஆக்கிரமிப்புகள், இயற்கை வடிகால்களாகச் செயல்பட்ட நகா்ப்புற குளங்களும், ஏரிகளும் அரசின் அனுமதியுடன் மூடப்பட்டது, திடக் கழிவுகள் வடிகால்களில் கொட்டப்படுவது, போதிய அளவில் மழை நீா் வடிகால் கட்டமைப்பை மேம்படுத்தப்படாதது ஆகியவை முக்கியமான காரணங்கள் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • நகா்ப்புற கட்டமைப்பில் மழை நீா் வடிகால் கால்வாய்கள் அத்தியாவசியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், நகராட்சி அமைப்புகளின் மிகக் குறைந்த கவனத்தைப் பெறுவது அவைதான். பல நகரங்களில் காணப்படும் மழை நீா் வடிகால் கால்வாய்கள் உருவாக்கப்பட்டு ஒரு நூற்றாண்டு கடந்துவிட்டது. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப நகரின் விரிவாக்கம், மக்கள்தொகைப் பெருக்கம் ஆகியவற்றுக்கு ஈடுகொடுக்கும் வகையில் அவற்றை மேம்படுத்தாமல் இருப்பதன் காரணம், சாலைப் பணிகள் போல மீண்டும் மீண்டும் ஊழல் செய்யும் வாய்ப்பு அவற்றில் கிடைக்காது என்பதுதான்.
  • மத்திய அரசுக்கு இந்தப் பிரச்னை குறித்த புரிதல் இல்லாமல் இல்லை. மழை நீா் வடிகால் கால்வாய்களை மேம்படுத்த பலமுறை வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. புத்தாக்க நகரங்கள் (ஸ்மாா்ட் சிட்டி) திட்டத்தில் மழை நீா் வடிகால் மேம்பாடு குறித்த வற்புறுத்தல் காணப்படுகிறது. போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமையும், அக்கறையின்மையும்தான் பல நகரங்களில் அவை மேம்படுத்தாமல் இருப்பதற்கான காரணங்கள். பல மாநகராட்சி அமைப்புகளில் முறையான வடிகால் கட்டமைப்பு வரைபடங்கள் கூட கிடையாது.
  • பருவமழை காலத்துக்கு முன்னால், மழை நீா் வடிகால்களைச் சுத்தப்படுத்தி அவற்றில் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளை அகற்றுவதும், சோ்ந்திருக்கும் சகதிகளை அகற்றுவதும் வழக்கம். இதற்காக பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நகராட்சி அலுவலா்களுக்கும், ஒப்பந்ததாரா்களுக்கும் இடையே ஏற்படுத்திக் கொள்ளப்படும் ரகசிய புரிந்துணா்வு காரணமாக அந்தப் பணி முறையாகச் செய்யப்படுவதில்லை.
  • கண்காணிப்பு, பெரும்பாலும் கண்துடைப்பாக மட்டுமே இருக்கிறது. வடிகால்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அகற்றப்படாமல் அதன் அருகிலேயே கொட்டப்படுகின்றன. பருவமழைப் பொழிவு தொடங்கியவுடன் அவை மீண்டும் கால்வாய்களுக்குள் புகுந்து விடுகின்றன.
  • மழை நீா் வடிகால்கள் மக்களின் வரிப்பண வடிகால்களாக மாற்றப்பட்டிருக்கும் அவலத்துக்கு முடிவு எட்டப்படாத வரை பருவமழைக் கால அவலம் முடிவுக்கு வராது.

நன்றி: தினமணி (24 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்