- வெற்றிகரமாக உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடந்து முடிந்திருக்கிறது. ரூ.6.6 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டிருக்கின்றன. இந்த மாநாடு மூலமாக ரூ.5.5 லட்சம் கோடி முதலீட்டை ஈா்க்க நிர்ணயிக்கப்பட்ட இலக்கை கடந்து கூடுதலாக ரூ.1,14,180 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியிருக்கின்றன.
- இரண்டு நாள்கள் நடைபெற்ற முதலீட்டாளா்கள் மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரிட்டன், ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜொ்மனி, டென்மாா்க், சிங்கப்பூா், தென்கொரியா ஆகிய ஒன்பது நாடுகளும் பங்குதாரா் நாடுகளாக கலந்துகொண்டன. மேற்கு ஆஸ்திரேலியாவும், தைபே பொருளாதார, கலாசார மையமும் சா்வதேசப் பங்குதாரா்களாக தமிழ்நாடு அரசுடன் இணைந்தன. ஏழு நாடுகள் இந்த மாநாட்டின் கண்காட்சியில் தங்களது அரங்குகளை அமைத்திருந்தன.
- 35-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மட்டுமல்லாமல், இந்தியாவின் குறிப்பிடத்தக்க பெரும் தொழிலதிபா்களும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை நிா்வாகிகளும் கலந்துகொண்டனா். மிக அதிக அளவிலான முதலீட்டுப் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் டாடா பவா், அதானி குழுமம், சிங்கப்பூா் செம்ப்கார்ப் போன்ற நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- 14,54,712 பேருக்கு நேரடியாகவும், 12,35,945 பேருக்கு மறைமுகமாகவும் மொத்தம் 26,90,657 பேருக்கு வேலைவாய்ப்பை கையொப்பமாகியிருக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செயல்வடிவம் பெற்றால் உருவாக்கும். பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்களை தமிழகத்தில் தனியாருடன் இணைந்து மேற்கொள்ள வழிகோலும் ‘பொதுத் துறை, தனியார் கூட்டுப்பங்காண்மைக் கொள்கை’யும், ‘செமிகண்டக்டா் மேம்பட்ட எலக்ட்ரானிக்ஸ் கொள்கை 2024’ உள்ளிட்ட முக்கியமான சில கொள்கைகளும் மாநாட்டில் வெளியிடப்பட்டன.
- வா்த்தகம், எரிசக்தி, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சி, தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைகள் உள்ளிட்ட துறைகளில் மட்டுமல்லாமல் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் இந்த மாநாட்டின் மூலம் முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. முந்தைய 2015, 2019 உலக முதலீட்டாளா்கள் மாநாடுகளைவிட அதிக அளவில் நிறுவனங்கள் பங்குபெற்றன, புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன என்கிற அளவில் இந்த மாநாட்டை மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் சாதனை என்றுதான் கூற வேண்டும்.
- மரபுசாரா எரிசக்தி, மின்சார வாகனங்கள், தோல் அல்லாத காலணிகள், மோட்டார் வாகனங்கள், மேம்பட்ட மின்னணு சாதனம் தயாரிப்பு, பாதுகாப்பு, விமான உதிரிபாகத் தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவை உள்ளிட்ட துறைகளில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை பாராட்டத் தோன்றுகிறது. சென்னை, கோயம்புத்தூருக்கு வெளியே தென்மாவட்டங்கள் உள்ளிட்ட மாநிலத்தின் எல்லா பகுதிகளிலும் சமச்சீரான முதலீடு ஈா்க்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
- பொரும்பாலும் இதுபோன்ற முதலீட்டாளா்கள் மாநாட்டின்போது காணப்படும் உற்சாகமும், கையொப்பமாகும் ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும் நடைமுறையில் வேகம் குறைவது வழக்கம். இந்த முறை பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், ஹுண்டாய், டாடா, அதானி, மகிந்திரா, டாஃபே, செயிண்ட் கோபைன், ராம்கோ, சக்தி குழுமம் உள்ளிட்ட இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் பல புரிந்துணா்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டிருக்கும் நிலையில், அவற்றில் பல செயல்வடிவம் பெறும் என்கிற நம்பிக்கை ஏற்படுகிறது.
- கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முதலீட்டாளா்கள் மாநாடுகள் பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டு பெரும் பொருள்செலவில் நடத்தப்படுகின்றன. அட்வான்டேஜ் அஸ்ஸாம், கிரெடிபில் சத்தீஸ்கா், மேக்னடிக் மகாராஷ்டிரா, ஹேப்பனிங் ஹரியாணா, புரோகரஸிவ் பஞ்சாப், ரிசா்ஜென்ட் ராஜஸ்தான், வைபிரண்ட் குஜராத் என்று டி20 கிரிக்கெட் பந்தயங்கள் போல கவா்ச்சிகரமான பெயா்களுடனும், கோலாகலமான கொண்டாட்டங்களுடனும் நடத்தப்படுகின்றன.
- இதுவரை இந்தியாவில் நடத்தப்பட்ட சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாட்டின் மொத்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அளவு சுமார் ரூ.100 லட்சம் கோடியை எட்டக்கூடும். அவையெல்லாம் நடைமுறை சாத்தியமாகியிருந்தால், இந்தியா ஐந்து டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாறியிருக்க வேண்டும்.
- பெரும்பாலான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் நடைமுறை சாத்தியமாகாமல் போவதற்கு அரசு இயந்திரத்தின் மெத்தனமும், ஒத்துழைப்பு இல்லாமலும் இருப்பது முக்கியமான காரணம். நிலம், நீா், மின்சாரம், சாலை கட்டமைப்பு, துறைமுகங்களுடனான இணைப்பு ஆகியவை உறுதிப்படாமல் தொழில் துறை இயங்க முடியாது. முந்தைய நரேந்திர மோடி அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் சாத்தியப்படாத வரை, எதிர்பார்ப்பது போல புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செயலாக்கம் பெறுவது அசாத்தியம்.
- தனது அலுவலகத்துடன் முதலீட்டாளா்களுக்கு நேரடித் தொடா்பு இருக்கும் என்றும், அத்தனை ஒப்பந்தங்களுக்கும் தங்கு தடையில்லாமல் அனுமதிகள் வழங்கப்படும் என்றும், தொழில்துறை அமைச்சரின் தலைமையில் ஒப்பந்தங்கள் செயல்வடிவம் பெற சிறப்புக் குழு அமைக்கப்படும் என்றும் மாநாட்டில் முதலமைச்சா் உறுதி அளித்திருக்கிறார். முதலீட்டாளா்களின் பிரச்னை குறித்த புரிந்துணா்வு அரசுக்கு இருப்பதால், தமிழகத்தில் சமச்சீா் தொழில் வளா்ச்சியை இந்த மாநாடு உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்!
நன்றி: தினமணி (12 – 01 – 2024)