TNPSC Thervupettagam

மாசில்லா சுற்றுச்சூழல் படைப்போம்

August 3 , 2023 474 days 679 0
  • ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் சுமார் 70,000 டன் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் காரணமாக நீர்நிலைகளைப் பாதிக்கின்றன என்று "நேச்சர்' இதழில் வெளியான பூச்சிக் கொல்லி பயன்பாடு பற்றிய ஆய்வறிக்கை கூறுகிறது. பூச்சிக்கொல்லிகளில் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் விவசாய மண் மற்றும் அந்த நிலத்தை சுற்றியுள்ள தண்ணீரை மாசுபடுத்துவது மட்டுமன்றி, நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளையும், மனித ஆரோக்கியத்தையும், நன்னீர் ஆதாரங்களையும், கடல் நீரையும் மாசடையச் செய்கின்றன.
  • 1962-ஆம் ஆண்டு ரேச்சல் கார்சன் எழுதி வெளியான "சைலண்ட் ஸ்பிரிங்' (மெளன வசந்தம்) என்ற புத்தகம் பூச்சிக்கொல்லிகளின் கண்மூடித்தனமான பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் தீங்குகளை இவ்வுலகுக்கு எடுத்துரைத்தது. இப்புத்தகம் வெளியான பின்புதான் சுற்றுச்சூழல் மற்றும் அதன் பாதுகாப்பு பற்றிய அவசியத்தை மனித சமூகம் உணரத் தொடங்கியது.
  • உலகில் முதல் முறையாக அமெரிக்கா 1970-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தை நிறுவி, மாசைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை இயற்றியது. 1972-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் குறித்த முதல் மாநாட்டை ஸ்டாக்ஹோமில் ஐ.நா. சபை நடத்தியது. உலகின் பல நாடுகளில் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் உருவாக்கிய ஸ்டாக்ஹோம் மாநாடு இந்தியாவில் 1985-ஆம் வருடம் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் உருவாகக் காரணமாக அமைந்தது.
  • இந்தியாவில் 1974-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட "தண்ணீர் சட்டம்', 1976- ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்களால் செயல்படுத்தப் பட்டது. நம் நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட முதல் சட்டமான இந்த தண்ணீர் சட்டத்துக்கு பின்னர், 1981-ஆம் ஆண்டு காற்று சட்டம் உருவாக்கப்பட்டது. 1984-ஆம் வருடம் டிசம்பர் மாதம் போபாலில் நிகழ்ந்த உலகின் மிக மோசமான தொழில்துறை விபத்து 1986-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உருவாகக் காரணமாக அமைந்தது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டு 37 ஆண்டுகள் ஆன நிலையில், சட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அமைப்பு நம்மிடம் இல்லை என்றும், தொழில்துறை மற்றும் தொழில் கூட்டாண்மை (கார்ப்பரேட்) குழுக்களின் அரசியல் ரீதியான செயல்பாடுகளே இதற்குக் காரணம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
  • 47 சதவீத இந்திய மக்கள் இன்னும் காற்றின் தர கண்காணிப்பு வலையமைப்புக்கு வெளியே வாழ்கின்றனர் என்றும், 62 சதவீகத்தினர் தங்கள் பகுதி காற்றின் தரம் குறித்த எச்சரிக்கைகள் குறித்து தெரியாமல் இருக்கின்றனர் என்றும் தரவுகள் கூறுகின்றன.
  • 2022- இல் நச்சுத்தன்மை வாய்ந்த காற்று மாசுபடுத்தி துகள்மப் பொருளின் (பார்ட்டிகுலேட் மேட்டர் பி.எம்.2.5) தாக்கம் இந்திய நகர்ப்புறங்களைப் போலவே கிராமப்புறத்திலும் மோசமாக இருந்தது என்று தரவுகள் கூறுகின்றன. தில்லியை மையமாகக் கொண்டு செயல்படும் சுற்றுச்சூழலுக்கான அறிவியல் மையம் நடத்திய ஆய்வு நச்சு மாசுபாடு காரணமாக நகர்ப்புற மக்களைவிட கிராமப்புற மக்கள் தங்கள் ஆயுள்காலத்தை இழக்கின்றனர் என்று கூறுகிறது.
  • காற்று மாசின் காரணமாக இந்திய கிராம மக்கள் சராசரியாக 62 மாத கால ஆயுள்காலத்தை இழக்கிறார்கள் என்றும், இந்திய நகரவாசிகள் 53 மாத ஆயுள்காலத்தை இழக்கிறார்கள் என்றும் சுற்றுச்சூழலுக்கான அறிவியல் மையம் கூறுகிறது. உத்தரபிரதேச மாநில கிராமவாசிகள் 8 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்நாள் இழப்பை எதிர்கொள்வதும், பிகார் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் கிராமவாசிகள் 7 ஆண்டுகள் வாழ்நாளை இழப்பதும் கண்டறியப்பட்டுள்ளது
  • தில்லி இந்திய தொழில்நுட்பக் கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் அடிப்படையிலான தரவுகளைக் கொண்டு காலநிலை போக்கு (கிளைமேட் ட்ரெண்ட்) என்ற நிறுவனம் மேற்கொண்ட பகுப்பாய்வு அடிப்படையில் 2022- ஆம் ஆண்டில் துகள்மப் பொருள் 2.5-இன் சராசரி அளவு கிராமப்புற இந்தியாவில் 46.4 மைக்ரோகிராம்களாகவும், நகர்ப்புறத்தில் 46.8 மைக்ரோகிராம்களாகவும் இருந்தன.
  • உலக சுகாதார நிறுவனத்தின்படி, 5 மைக்ரோகிராம்கள் என்று இருக்க வேண்டிய இந்தக் காற்று மாசடைந்து நுரையீரலுக்குள் ஊடுருவி, உயிருக்கு ஆபத்தான நோய்களை ஏற்படுத்த காரணமாக அமைகிறது.
  • 2017 } முதல் இந்திய கிராம மற்றும் நகர்ப்புறங்களில் காற்றில் துகள்மப்பொருள் 2.5-இன் மாசு செறிவு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்த சூழலில் 2019-ஆம் ஆண்டு இந்திய அரசால் சுத்தமான காற்றுக்கான தேசிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின்படி 2024-ஆம் ஆண்டுக்குள் துகள்மப்பொருள் 2.5 மற்றும் துகள்மப்பொருள் 10 ஆகிய காற்று மாசுபடுத்திகளின் செறிவு 20 முதல் 30 சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற தேசிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
  • சுத்தமான காற்றுக்கான தேசிய திட்டத்தின் கீழ் இதுவரை 131 இந்திய நகரங்களுக்கு 9,000 கோடி ரூபாயை செலவழித்த நிலையிலும், காற்றில் உள்ள மாசு இந்தியாவில் தொடர்ந்து அதிகமாக உள்ளது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் பெரும்பாலான கிராமப்புறங்களில் காற்றில் மாசினை அளவிட கருவிகள்கூட இல்லை.
  • தில்லி (87.7 மைக்ரோகிராம்கள்), பிகார் (74.5 மைக்ரோகிராம்கள்), ஹரியாணா (67.8 மைக்ரோகிராம்கள்), உத்தர பிரதேசம் (62.3 மைக்ரோகிராம்கள்), ராஜஸ்தான் (60.4 மைக்ரோகிராம்கள்) மற்றும் மேற்கு வங்கம் (58.3 மைக்ரோகிராம்கள்) போன்ற மாநிலங்களின் கிராமப்புறங்களில் துகள்மப்பொருள் 2.5-இன் செறிவு காற்றில் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • கிராமப்புற மாசை சமாளிக்க எதுவும் செய்யப்படாத நிலையில் நகர்ப்புற காற்று மாசை எதிர்த்துப் போராடுவதற்கான மத்திய அரசின் முதலீடு பலனளிக்காமல் உள்ளது என்பது நிபுணர்களின் கருத்து. மாசு அளவைக் கண்காணித்து அதற்கேற்ப ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பலனளிக்கும் வகையில் கொள்கைகளை உருவாக்குவது அவசியம்.
  • காற்று மாசைக் கண்காணிக்க புத்திசாலித்தனமான உயர் செயல்திறன் கொண்ட காற்று விரிவாக்க முறையில் இயற்பியல் கொள்கையின் கீழ் செயல்படும் ஏர்ஷேட் முறையை செயல்படுத்தலாம் என்கின்றனர் வல்லுநர்கள். மக்கள்தொகை அடர்த்தி காரணமாக காற்று மாசைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய நகரங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது என்றாலும், இந்திய கிராமப்புறங்களுக்கான காற்று மாசு கொள்கை மற்றும் அதைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உருவாக்குவதற்கான சரியான நேரம் இது.

நன்றி: தினமணி (03 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்