TNPSC Thervupettagam

மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களின் தொடர் துயரங்கள்

July 3 , 2024 192 days 171 0
  • மாஞ்சோலையை உள்ளடக்கிய பொதிகை மலையின் அடிவாரத்தில் நான் பிறந்து வளர்ந்த ஊர் அமைந்திருந்தாலும், மாஞ்சோலைக்குச் செல்லும் வாய்ப்பு இந்த 76 வயது வரையிலும் வாய்க்கவில்லை. பணி நிறைவுக்குப் பிறகு ஓரிரு முறைகள் முயன்றும் முடியாமல் போய்விட்டது. மணிமுத்தாறு அணை, அருவி கடந்துதான் மாஞ்சோலை செல்ல வேண்டும். படிக்கிற பருவத்தில் பலமுறை மணிமுத்தாறு அணைக்கும், அருவிக்கும் சென்றிருந்தாலும் அதற்குமேல் செல்ல வாய்ப்பு கிட்டாமலே போய்விட்டது. அருகிலிருந்தும் நான் பார்க்காத மாஞ்சோலை பற்றி எழுதவேண்டிய சூழலைக் காலம் கையளித்திருக்கிறது.
  • எங்கள் பகுதியில் (அம்பாசமுத்திரம்) உள்ளவர்கள் அனைவருமே மாஞ்சோலையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பார்கள். என்றாலும் ஒருசிலரே அங்குச்சென்று வந்திருப்பார்கள். முதன்முறையாக மாஞ்சோலை பற்றி தமிழகத்தின் அனைத்துப் பகுதியினரும் அறியும் வாய்ப்பினைக் கொடுத்தது 1999-ஆம் ஆண்டில் நிகழ்ந்த தாமிரபரணி படுகொலை. அடுத்து இப்போது தேயிலை, காப்பித்தோட்டத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் மாஞ்சோலையைக் காலிசெய்து விட்டு, சமவெளிக்குத் திரும்பும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும் வலிமிகுந்த செய்தி மீண்டும் மாஞ்சோலைபற்றி பேசவைத்திருக்கிறது.

மாஞ்சோலையின் இருப்பு

  • முண்டந்துறை-களக்காடு புலிகள் காப்பகம் அமைந்திருக்கும் மேற்குத்தொடர்ச்சி மலையில், மணிமுத்தாற்றிலிருந்து 24 கி.மீ. தொலைவில் 3,500 அடி உயரத்தில் எழில் கொஞ்சும் மாஞ்சோலை அமைந்திருக்கிறது. மாஞ்சோலைக்கு மேலே சென்றால், மறுபுறம் கன்னியாகுமரி மாவட்டத்தின் ‘மேல்-கோதையாறு’ அணை வந்துவிடும். திருநெல்வேலி மாவட்டத்தில், திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் செல்லும் நெடுஞ்சாலையில் கல்லிடைக்குறிச்சி ஊரில் தெற்கில் திரும்பி மணிமுத்தாறு அணை, அருவியைக் கடந்து மலையில் ஏறிச்செல்ல வேண்டும். தினமும் கல்லிடைக்குறிச்சியிலிருந்து மாஞ்சோலைக்கு அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. முன்பு பாபநாசத்திலிருந்தும் மாஞ்சோலைக்குப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இப்போதும்கூட வனத்துறையின் அனுமதி பெற்று தனியார் பேருந்துகளிலும் சென்று வரலாம்.
  • மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்கள் மூன்று தொகுதிகளாக உள்ளன. 1. மூன்று பிரிவுகளை கொண்ட சிங்கம்பட்டித் தொகுதி. 2. மூன்று பிரிவுகளைக் கொண்ட மாஞ்சோலைத் தொகுதி. 3. இரண்டு பிரிவுகளைக் கொண்ட மணிமுத்தாறு தொகுதி. தேயிலை, காப்பி, மிளகு, ஏலக்காய் போன்ற பணப்பயிர்கள் இங்குப் பயிரிடப்படுகின்றன.

மாஞ்சோலை தேயிலை, காப்பித்தோட்ட வரலாறு

  • திருவிதாங்கூர் வரலாறு அறிந்தவர்கள், ‘எட்டுவீட்டுப் பிள்ளைமார் கலகம்’ பற்றியும் தெரிந்திருப்பார்கள். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் செல்வாக்கு மிகுந்து விளங்கிய எட்டு வீட்டுப் பிள்ளைமார் (நாயர்கள்), இளம் வயதில் அரியணை ஏறிய மன்னன் மார்த்தாண்டவர்மாக்கு எதிராகக் குழப்பம் விளைவித்து ஆட்சியைக் கைப்பற்றக் கலகம் செய்தனர். மார்த்தாண்டவர்மா சிங்கம்பட்டி அரசரின் உதவியை நாடுகிறார். சிங்கம்பட்டி இன்றைய திருநெல்வேலி மாவட்டத்தில், கல்லிடைக் குறிச்சியிலிருந்து மாஞ்சோலைச் செல்லும் வழியில் மணிமுத்தாற்றுக்கு அருகில் உள்ள ஊர். இன்றும் சிங்கம்பட்டியில் ஜமீன் பரம்பரையினர் வசித்துவந்த அரண்மனையைக் காணலாம். ‘அரசர்’ பட்டத்துடன் வாழ்ந்த நாட்டின் கடைசி வாரிசான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி, 2020 மே 25-இல் காலமானார்.
  • சிங்கம்பட்டி அரசுக்கு உள்பட்ட மறவர்கள், சிங்கம்பட்டி சிறுதாலிக்கட்டி மறவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். சிங்கம்பட்டி அரசரிடம் வில், அம்போடு கொரில்லாப் போரிலும், குதிரையேற்றத்திலும் பயிற்சிபெற்ற மறவர் படை இருந்திருக்கிறது. சிங்கம்பட்டி அரசர், மார்த்தாண்டவர்மாக்கு எதிரான கலகத்தை அடக்குவதற்கு மறவர் படையை அனுப்பிவைக்கிறார். கலகம் அடக்கப்படுகிறது. கலகம் அடக்கப்பட்ட பிறகு, மறவர் படையினர் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளான கடுக்கரை முதல் கன்னியாகுமரி வரையிலும் தங்கிவிட்டனர். அப்படித்தங்கிய மறவர்களுக்கும் மன்னன் மார்த்தாண்டவர்மா குடியிருக்க வீட்டுமனைகளையும், வேளாண்மை செய்ய நிலங்களையும் அளித்திருக்கிறார். இப்படி எல்லையில் தங்கிய மறவர்கள் காலப்போக்கில் மாவட்டத்தின் உட்பகுதிக்கும், குறிப்பாக நாஞ்சில் நாட்டில் வந்து தங்களது குடியிருப்புக்களை அமைத்துக்கொண்டு, அவற்றையே தங்கள் வாழ்விடங்களாகவும் மாற்றிக்கொண்டனர் என்பது வரலாறு.
  • எட்டுவீட்டுப் பிள்ளைமாருக்கு எதிரான போரில், சிங்கம்பட்டி அரசு வாரிசுகளில் ஒருவரான நல்லபுலிக்குட்டி என்பவர் உயிரிழக்கிறார். அந்த இழப்புக்காகவும், திருவிதாங்கூர் ஆட்சியைத் திரும்பப்பெற்றதற்கு உதவியமைக்காகவும் நன்றிக் கடனாக, மார்த்தாண்டவர்மா மன்னன் சிங்கம்பட்டி அரசருக்கு, மேற்குத்தொடர்ச்சி மலையின் கிழக்குப்பகுதியில் தங்களுக்குச் சொந்தமாக இருந்த 74,000 ஏக்கர் காடுகளைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.
  • ஆங்கிலேயர்கள் படையெடுப்பிற்குப் பிறகு சிங்கம்பட்டி அரசு வீழ்கிறது என்றாலும் அதனை சிங்கம்பட்டி ஜமீனாக்கி, வரி வசூல் செய்து கொடுக்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைக்கிறது, காலனி அரசு. அந்தவகையில் மார்த்தாண்டவர்மா கொடுத்த 74,000 ஏக்கர் மலைக்காடுகளும் சிங்கம்பட்டி ஜமீன்வசமே இருந்து வந்தது. 1918-இல் சிங்கம்பட்டி ஜமீனின் ஆண் வாரிசு ஒரு கொலை வழக்கில் சிக்கிக்கொள்கிறார். அந்த வழக்கை நடத்துவதற்கு பெரிய அளவில் நிதி தேவைப்படுகிறது
  • அந்தவேளையில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ‘பாம்பே பர்மா வணிக நிறுவனம்’ தேயிலைத்தோட்டம் அமைக்க இடம்தேடிக் கொண்டிருந்தது. நிதி நெருக்கடியில் இருந்த சிங்கம்பட்டி ஜமீன் 8,374 ஏக்கர் பரப்புகொண்ட மணிமுத்தாறு மலைக்காடுகளைப் பாம்பே பர்மா வணிக நிறுவனத்திற்கு’ 99 ஆண்டுகளுக்குக் குத்தகைக்கு விடுகிறார். இடம் கைமாறிய பிறகு ‘மாஞ்சோலைத் தோட்டங்கள்’ என்று அழைக்கப்படலாயிற்று. மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய மலைப்பகுதிகளில் அமைந்திருக்கும் தேயிலைத் தோட்டங்களும், தேயிலை தொழிற்கூடங்களும் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது. இன்றைய திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பட்டியலின மக்களும், கேரளத்திலிருந்து ஈழ மக்களும் மாஞ்சோலைக்குக் கூலித்தொழிலாளர்களாகக் கங்காணிகளால் அழைத்துவரப்பட்டனர். அவர்களது உழைப்பில், வியர்வையில், குருதியில் உருவானதுதான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள். மாஞ்சோலைத் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்த அதிகாரிகள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாகவும், மேலதிகாரிகள் கர்நாடகா, பஞ்சாப் போன்ற பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
  • இந்தியா விடுதலைபெற்ற பிறகு, 1948-இல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமாக இருந்த 74.000 ஏக்கர் மலைக்காடுகளும் தமிழ்நாட்டு அரசுக்குச் சொந்தமாயின. அதன் தொடர்ச்சியாக 1952-இல் பாம்பே பர்மா வணிக நிறுவனம், 8.374 ஏக்கர் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்திற்கான குத்தகை ஒப்பந்தத்தை அன்றைய காங்கிரஸ் அரசுடன் புதுப்பித்துக்கொண்டது.
  • மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு காலகட்டங்களில், பலவகையான சலுகைகள் வேண்டி பலவிதமான போராட்டங்களை நடத்தி அதில் வெற்றியும் கண்டனர். 1998-இல் நடைபெற்ற தேர்தலில் வேட்பாளராக நின்ற புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி, வாக்கு சேகரிப்பதற்காக மாஞ்சோலைத் தோட்டக் குடியிருப்புகளுக்கு வந்திருக்கிறார். அவரிடம் தொழிலாளர்கள் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்லியிருக்கின்றனர். தேர்தல் முடிந்தபிறகு மீண்டும் மாஞ்சோலை வந்த டாக்டர் கிருஷ்ணசாமி, தோட்டத் தொழிலாளர்களின் 33 கோரிக்கைகளை முன்வைத்து பாம்பே பர்மா வணிக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். 20-08-1998க்கு முன்பாக கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால், தனது தலைமையில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் என்றும் எச்சரித்திருந்தார்.
  • அந்த எச்சரிக்கையை பாம்பே பர்மா வணிக நிறுவனம் கண்டுகொள்ளாமல் இருக்கவே, 20-08-1998-இல் டாக்டர் கிருஷ்ணசாமியின் தலைமையில் தோட்டத்தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 03-09-1999 அன்று டாக்டர் கிருஷ்ணசாமி மாஞ்சோலைக்கு வந்தார். தோட்டங்களுக்கான நுழைவு வாயில்கள் மூடப்படும் என்றும் தொழிற்சாலையைத் தங்கள் வசமாக்கிவிடுவோம் என்றும் அறிவித்தார். அதுவரையிலும் இருந்துவந்த தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க, சி.பி.ஐ, சி.பி.எம் தொழிற்சங்கங்கள் அனைத்தும் கலைக்கப்பட்டு, புதிய தமிழகம் தொழிற்சங்கத்தின்கீழ் தொழிலாளர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டனர்.
  • 03-09-1998 இரவு, ஊத்து பகுதியில் அமைந்திருந்த தேயிலைத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டிருந்தத் தேயிலைத்தூளை ஆலை நிர்வாகம் தனியார் வாகனத்தில் விற்பனைக்காக எடுத்துச்செல்லும் செய்தி தொழிலாளர்களுக்கு எட்டியது. தொழிலாளர்கள் அனைவரும் திரண்டுவந்து தொழிற்சாலையின் நுழைவு வாயிலை மறித்து அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மறுநாள் 04-09-1998 காலையில் நிர்வாகம் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் கலைந்துசென்றனர். அதன்பிறகு நிர்வாகம் காவல்துறையை அழைத்தது. மாவட்ட காவல் அதிகாரி தலைமையில் வந்த காவல்துறையினர் வீடுகளில் இருந்தவர்கள், சாலைகளில் நடந்துகொண்டிருந்தவர்கள் என்று தோட்டத் தொழிலாளர்களை அடித்து, உதைத்து 127 பேரைக் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். அந்த நிகழ்வு தொழிலாளர்களிடம் கோபத்தை மூட்டியது. போராட்டம் தீவிரம் அடைந்தது.

தாமிரவருணி படுகொலை

  • ஐந்தரை மாதங்கள் வரையிலும் நீடித்த வேலைநிறுத்தம் தொழிலாளர்களுக்குச் சாதகமாக எதையும் கொண்டுவரவில்லை. விரக்தியடைந்த தொழிலாளர்கள் 1999 ஜனவரியில் வேலைக்குத் திரும்பினர். அதிகாரம் அதன் கோர முகத்தைக் காட்டியது. போராட்டங்களில் கலந்துகொண்டதற்காக ஏன் பணி நீக்கம் செய்யக்கூடாது என்று தற்காலிகத் தொழிலாளர்களிடம் விளக்கம் கேட்டது. அவர்களுக்கு ஆதரவாக நிரந்தரத் தொழிலாளர்கள் அரை நாள் வேலைநிறுத்தம் செய்தனர். அதற்காக அவர்களது ஊதியம் பிடிக்கப்பட்டது.
  • வேறுவழி தெரியாமல் திகைத்துநின்ற தொழிலாளர்கள் 07, 08-06-1999 ஆகிய இரு நாள்களில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் இல்லத்தை முற்றுகையிட்டனர். 198 பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 653 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். 47 நாள்களாகத் திருச்சி சிறையில் வாடிக்கொண்டிருந்த 653 மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களை விடுவிக்கவேண்டும் என்னும் கோரிக்கையுடன், 23-07-1999 அன்று புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், ஐக்கிய ஜமாத், சி.பி.ஐ. சி.பி.எம். கட்சிகளும் இன்னும் பல அமைப்புக்களும் இணைந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப் பேரணியாகச் சென்றனர்.
  • திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தாமிரபரணி ஆற்றங்கரையில் கொக்கிரகுளம் என்னும் பகுதியில் அமைந்திருந்தது. அதனால் பேரணியினர் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்திருந்த சாலைவழியாக நடந்து சென்றனர். மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒடுக்கப்பட்ட சாதியினர் ஒருங்கிணைந்ததையும், பேரணி சென்றதையும் விரும்பாத அப்போதைய தி.மு.க. அரசு காவல்துறையைக் கொண்டு அரசியல் தலைவர்கள் மீதும், அப்பாவி மக்கள் மீதும் அரசப்பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. அமைதியாகப் பேரணி சென்றவர்கள் இதனைக் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை. கூட்டம் சிதறி ஓடியது. ஆனாலும் காவல்துறையினர் அவர்களை விடாமல் துரத்தியது, தாக்கியது.
  • ஓடித் தப்பிப்பதற்கு வேறு எங்குமே வழி இல்லாததால் பலரும் தாமிரபரணி ஆற்றங்கரையின் ஓரமாக ஆற்றில் குதித்துத் தப்பிக்க முயன்றனர். காவல்துறையின் நோக்கம் அவர்களைக் கலைப்பது மட்டுமே அல்ல என்பது அவர்களது மிருகத்தனமான வெறிச்செயலில் வெளிப்பட்டது. ஆற்றிற்குள் குதித்த அப்பாவிகளைத் தொடர்ந்துசென்று காவல்துறை தாக்கியதில் விக்னேஷ் என்னும் ஒன்றரை வயது சிறுவனும், பல்வேறு சாதி, மதம், சமூகப்படி நிலையைச் சேர்ந்த 17 பேர்கள் தாமிரபரணியில் மூழ்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். காவல்துறையினரின் திட்டமிட்ட தாக்குதலில் அரசு அலுவலர்களும், ஊடகங்களில் பணியாற்றியவர்களும் அடங்குவர். காவல்துறையினர் தாக்குதலைப் படம்பிடித்த நக்கீரன் செய்தியாளர் தாக்கப்பட்டார் என்றும், அவரது காமராக்கள் காவல்துறையினரால் உடைக்கப்பட்டன என்றும் செய்திகள் கூறுகின்றன.
  • இத்தனைக் கொடுமைகளையும் அப்பாவி மக்களுக்கு இழைத்த அன்றைய தமிழக அரசு 52 நாள்களுக்குப் பிறகு 653 தோட்டத் தொழிலாளர்களை விடுதலை செய்தது. தங்களுக்கு நியாயம் கிடைக்காமல் 17 பேருடைய உடல்களை வாங்க மறுத்தார்கள் உறவினர்கள். அப்போதும்கூட துளியும் நேர்மையின்றி அந்த உடல்களைப் பல்வேறு இடங்களில் புதைத்தது அன்றைய தி.மு.க. அரசு. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மோகனை ஒரு நபர் உண்மை அறியும் குழுவாக நியமித்து நியாயம் கேட்ட குரல்களின் குரல்வளையையும் நெறித்தது.
  • 11 மாதங்களுக்குப் பிறகு , ஓய்வுபெற்ற நீதிபதி மோகன் 27-06-2000த்தில் தனது அறிக்கையை வெளியிட்டார். இரண்டு காவல் இணை-கண்காணிப்பாளர்களையும், ஒரு தாசில்தாரையும் பணிநீக்கம் செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தார். அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்களா என்பது தெரியவில்லை. அ.தி.மு.க. அரசுக் காலத்தில் நிகழ்ந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்குக் காரணமானவர்களை அடையாளம் கண்டு, பெயர்களைக் குறிப்பிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி அருணா ஜெகதீசன் பரிந்துரை செய்திருந்தபோதும் நடவடிக்கை எடுக்காத மு.க.ஸ்டாலின் தலைமையிலான இப்போதைய தி.மு.க. அரசு, ஒருவருக்குப் பதவி உயர்வும் கொடுத்திருப்பதை நாம் அறிவோம். அப்படி இருக்க தி.மு.க. அரசுக்காலத்தில் நடத்தப்பட்ட காவல்துறை வன்முறைக்கு, தி.மு.க. அரசே நடவடிக்கை எடுத்திருக்குமா என்னும் ஐயம் இயல்பாகவே எழுகிறது.
  • அந்த அறிக்கையில் அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு ஒன்றையும் கூறியிருக்கிறார், ஓய்வுபெற்ற நீதிபதி மோகன். போராட்டக்காரர்கள் ஒருவர் மீது மற்றவர் வீழ்ந்ததால், தாமிரபரணி ஆற்றில் விழுந்து இறந்தார்கள் என்பதால் அது ஒரு தற்செயல் நிகழ்வு என்றும் அதற்கும் காவல்துறைக்கும் தொடர்பில்லை என்றும் கூறியிருந்தார். அனைத்து விதங்களிலும் கைவிடப்பட்ட மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பினர். வேலைக்குத் திரும்பிய தோட்டத்தொழிலாளர்கள், பாம்பே பர்மா வணிக நிறுவனத்தினரால் பலவகையாக துன்புறுத்தப்பட்டனர். பலரும் வேலைதேடி கேரளத்துக்கும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் சென்றனர். மண்ணின் மைந்தர்கள் அநாதைகளாக அலைய வேண்டிய நிலையை ஆலை நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், தமிழக அரசு இணைந்து உருவாக்கின என்றே சொல்லலாம்.

குத்தகை ஒப்பந்தம் முடிவும், தொழிலாளர் வெளியேற்றமும்

  • இன்னும் இரண்டு ஆண்டுகளில் குத்தகை ஒப்பந்தம் முடிவுக்கு வர இருக்கும் சூழலில் பாம்பே பர்மா வணிக நிறுவனம் தொழிலாளர்களை வெளியேற்றும் செயலில் ஈடுபட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டில் தமிழக வனத்துறையிடம் தோட்டங்களை ஒப்படைக்க வேண்டும். இத்தனை ஆண்டுகளாக மலைகளில் வாழ்ந்துவந்தவர்கள் குஞ்சு குறுமானோடு சமவெளிக்கு வந்தால் அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாகத்தான் இருக்கமுடியும். ஏறத்தாழ 600 குடும்பங்கள் ஏதுமற்று நடுத்தெருவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.
  • தாங்களாகவே முன்வந்து ஓய்வுபெற்றுச் செல்லுமாறு தொழிலாளர்களைத் தோட்ட நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் அவரவர் பணிசெய்த காலத்தைக் கணக்கிலெடுத்து உரியத் தொகையை வழங்க நிறுவனம் ஒத்துக்கொண்டிருக்கிறது. என்றாலும் அந்தத் தொகையைக்கொண்டு சமவெளிப்பகுதியில் நிலமோ, வீடோ வாங்குவதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. மாத்திரமல்ல, வேலைதேடி அலையவேண்டிய அவலமும் உருவாகும். மூன்றாம், நான்காம் தலைமுறையினருக்குச் சொந்த ஊர் என்று எதுவும் இருப்பதற்கு வாய்ப்பில்லை.
  • இந்தச்சூழலில், தேயிலைத் தோட்டங்களை தமிழக வனத்துறையிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக தமிழக அரசே தோட்டங்களைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்து இப்போதுபோலவே தொழிற்சாலைகளை நடத்தவேண்டும் என்பதுதான் தோட்டத் தொழிலாளர்களின் வேண்டுதலாக உள்ளது. அதில் நியாயமும் இருக்கிறது, தீர்வும் இருக்கிறது. வேறு சிக்கல் எதுவும் அதில் இருப்பதாகவும் நமக்குத் தெரியவில்லை. தேயிலைத் தோட்டங்களைத் தமிழக அரசு எடுத்து நடத்தும்போது, அரசுக்கு வருவாய் வருவதோடு நூற்றுக்கணக்கிலான தோட்டத் தொழிலாளர்கள் புலம்பெயரவேண்டிய அவசியமும் இல்லாமல் ஆகிவிடும்.
  • மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களில் 80 சதவீதம் தாழ்த்தப்பட்ட பட்டியலின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்கள் தங்கள் இருப்பிடங்களைக் காலி செய்யவேண்டிய கடைசி நாள் ஜூன் 30.
  • டாஸ்மாக்கை மூடச்சொல்லும்போது, கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காகவே நல்ல சாராயத்தை அரசு விற்பதாகச் சொல்லும் ஆட்சியாளர்களால் அப்படி ஒழிக்கமுடியவில்லை என்பதற்கு இப்போதைய கள்ளக்குறிச்சியின் கூட்டு மரணங்களே சான்று. கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிக அளவிலான இழப்பீடுகளை அரசு கொடுப்பது கள்ளச்சாராயத்தை ஊக்குவிக்கவே செய்யும் என்றாலும், கள்ளச்சாராயத்தைத் தடுக்கத்தவறிய குற்ற உணர்ச்சியிலும், கள்ளச்சாராயம் குடித்து மரணித்தாலும் அவர்களது குடும்பம் நடுத்தெருவிற்கு வந்துவிடக்கூடாது என்னும் நல்லெண்ணம் காரணமாகவும் தமிழக அரசு ரூ.10 லட்சம் வரையிலும் இழப்பீடு வழங்குகிறது என்பதை ஏற்கலாம். அதேவேளையில், பல பத்தாண்டுகளாக உழைப்பைக் கொடுத்தது தவிர வேறு பாவம் அறியாத, ஆதரவற்ற, சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினரான மாஞ்சோலைத் தோட்டத்தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் கருணை உள்ளத்தோடு ஏற்று அவர்களுக்கு வாழ்வளிப்பதும் சமூகநீதி பேசும், பேணும் தமிழக அரசின் கடமை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
  • மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பதைப் பார்த்தால், இப்போதிருக்கும் தொழிலாளர்களை முற்றாக வெளியேற்றிவிட்டு மாஞ்சோலைத் தோட்டங்களை வேறு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் நோக்கம் இருக்குமோ என்னும் ஐயம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. கனிமவளக்கொள்ளையர்களின் வேட்டைக்காடாக மாஞ்சோலை மாறிவிடக்கூடாது என்னும் கவலையும் எழுகிறது.
  • தி.மு.க. கட்சியிலும், ஆட்சியிலும் கருணாநிதியின் வாரிசாகும் நல்வாய்ப்புப் பெற்றவர் இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். தந்தைக்கு சிலை வைப்பது மட்டுமே ஒரு தனயனின் கடமை அல்ல. தந்தை செய்த தவற்றுக்கு வருந்தி அதற்கு நீதி வழங்குவதும் அவரது கடமை ஆகும். வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வளிப்பதனால் தங்கள்மீது விழுந்த ரத்தக்கறையையும் துடைத்தெறியலாம். கருணாநிதி அன்று செய்த அதே தவற்றை, மு.க.ஸ்டாலின் இன்று செய்யமாட்டார் என்று நேர்மறையாக நம்புவோம்.
  • தேர்தல் காலங்களில் சமூக நீதி பேசுவதும், வெற்றிபெற்ற பிறகு நேர்மாறாக செயல்படுவதும் ஒரு நல்ல மக்கள் நல அரசுக்கு அழகல்ல. மாஞ்சோலைத் தோட்டத்தொழிலாளர்களில் 80 சதவீதத்தினர் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட சாதியினர், பொருளாதாரத்தில் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பக்கம் நின்று சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதே சமூகநீதி பேசுபவர்களின் வேண்டுதலாகவும் இருக்கமுடியும். தமிழகத்தில் சமூகநீதியை நிலைநாட்டும் ஒரே கட்சியாக, ஆட்சியாக தி.மு.க. மட்டுமே இருக்கிறது என்று நம்பும் கட்சிகள், இயக்கங்கள், அறிவு ஜீவிகள், நலம் விரும்பிகளைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏமாற்றமாட்டார் என்றும் நம்புவோம்.

நன்றி: தினமணி (03 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்