- கேரளத்தின் இளம்வயது மேயரான திருவனந்தபுரம் ஆர்யா ராஜேந்திரனை அவரது வாடகை வீட்டில் பேட்டி எடுத்துக்கொண்டிருக்கிறார் ஒரு தொலைக்காட்சிச் செய்தியாளர். ஆர்யாவின் வீட்டுக்கு வழக்கமாக வந்துசெல்லும் மீன்காரம்மா அப்போதும் வருகிறார். ‘என் செல்ல மகளே’ என்று அவரது கன்னங்களைத் தடவி வாழ்த்துகிறார். செய்தியாளர் மீன்காரம்மாவையும் விடவில்லை. ‘இவரை எவ்வளவு காலமாக உங்களுக்குத் தெரியும்’ என்ற கேள்வியோடு அவரிடம் மைக்கை நீட்டுகிறார். ‘பத்து வருஷமா தெரியும். இந்தப் பெண்ணை வளர்க்கவும் படிக்கவைக்கவும் இந்தக் குடும்பம் எவ்வளவு கஷ்டப்பட்டது' என்று அவர் சொல்லும்போதே அருகில் நிற்கும் ஆர்யா ராஜேந்திரனுக்கு மட்டுமல்ல, பார்க்கிற நம் கண்களுக்குள்ளும் நீர் அரும்புகிறது.
- 21 வயதில் மேயராகிவிட்டார் என்று ஆர்யா ராஜேந்திரனையும் அதே வயதில் ஊராட்சி மன்றத் தலைவராகிவிட்டார் என்று மரியம் ரேஷ்மாவையும் ஊடகங்கள் கொண்டாடுகின்றன. மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே வெற்றி ஊர்வலத்தில் பேசிய ஆர்யா, இது தன்னுடைய வெற்றி என்று மகிழவில்லை. மாறாக தனக்கு முன்பு அந்த வார்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு தோழர்களின் பணியைத் தொடர்வேன் என்றே உறுதியளித்தார்.
- ரேஷ்மா மரியம் அளித்த பேட்டியொன்றில், தனது குடும்பத்தினர்கள் காங்கிரஸ் அனுதாபிகள் என்றும் கல்லூரியில் தான் இடதுசாரி அமைப்புகளை நோக்கி ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். எந்தப் பொருளாதாரப் பின்னணியும் இல்லாத கட்சி அனுதாபி ஒருவரின் மகள், மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால், எதிர்க்கட்சி அனுதாபிகளின் மகளும்கூட கட்சிப் பணிகளின் அடிப்படையில் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பழங்குடி மாணவி ரோஸ்னா
- மாணவர் அமைப்புகளுக்கு கேரள இடதுசாரிகள் கொடுத்துவரும் முக்கியத்துவம் நடந்துமுடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் வெளியே வெளியுலகுக்குத் தெரியவந்திருக்கிறது. ஆர்யா ராஜேந்திரனும் ரேஷ்மா மரியமும் மட்டுமே பேசப்படுகிறார்கள். ஆனால், இடதுசாரி மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மேலும் 21 பேர் ஊராட்சி மற்றும் மாநகராட்சிப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
- வயநாடு பொழுதனா ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் 22 வயது மாணவியான அனஸ் ரோஸ்னா ஸ்டெப்பி, கோழிக்கோடு கல்லூரியில் விலங்கியல் இளநிலை மாணவர். பெண்களுக்கான பொதுத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கும் ரோஸ்னா பழங்குடியின மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளாட்சிப் பிரதிநிதிகளாக இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அதிலும் பெண்கள் பெருமளவு இடம்பிடித்திருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் பொருளாதாரப் பின்னணி எதுவும் இல்லாதவர்கள் என்று இந்த ஜனநாயகப் பெருமையை விரித்துக்கொண்டே போகலாம். இது ஏதோ ஐக்கிய முற்போக்குக் கூட்டணியையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் எதிர்கொள்வதற்கு இடதுசாரிகள் கையாண்டிருக்கும் தேர்தல் வியூகம் என்று பொருள்கொண்டுவிடக் கூடாது.
- ஏனெனில், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரத்தின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வழக்கறிஞரான பிரசாந்த், இளைஞர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் ஒரு நெடிய பயணத்தின் முயற்சியாகவே தான் பொறுப்பேற்பதாகக் கூறியிருந்தார். இப்போது அவர் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். உள்ளாட்சி நிர்வாக அனுபவங்களோடு சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கின்றன கேரள இடதுசாரிக் கட்சிகள்.
கசப்பான உண்மை
- கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை மகிழ்ச்சியோடு சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டிருக்கும் தமிழக இடதுசாரிகளின் மனநிலையைப் புரிந்துகொள்வதுதான் கஷ்டமாக இருக்கிறது. இவர்கள் ஒருபோதும் கேரளத்தை முன்மாதிரியாகக் கொள்வதில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
- தமிழக இடதுசாரிக் கட்சிகள் தங்களுடைய மாணவர் அமைப்புகளைக் கைக்குள் அடங்கிய சிறு பிரிவாகவே நடத்த முயற்சிக்கின்றன. மாநில அளவிலான பொறுப்புகளில் மாணவர் அமைப்புகளின் செல்வாக்கு முற்றிலும் குறைந்து அவை தொழிற்சங்க நிர்வாகிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன.
- இன்றைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளராக இருக்கும் டி.ராஜாவும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினராக இருக்கும் ஜி.ராமகிருஷ்ணனும் மாணவர் அமைப்பிலிருந்து உருவானவர்கள்தான். இனிவரும் காலத்தில் தமிழகத்தில் அப்படியொரு சூழல் அக்கட்சிகளுக்குள் உருவாகும் என்று யாராலும் நம்பிக்கை அளிக்க முடியுமா?
- பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர்கள் எந்த ஊருக்குச் சென்றாலும் மாணவர்களின் அறைகளில் தங்கி அவர்களுடன் விடிய விடிய உரையாடி உருவாக்கப்பட்ட மாணவர் அமைப்புகள் இன்று என்ன நிலையில் இருக்கின்றன?
- ஓர் உதாரணம். கடந்த மக்களவைத் தேர்தலின்போது நாகப்பட்டினம் தொகுதியில் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குள் உட்கட்சித் தேர்தல் நடந்தது. மாணவர் அமைப்புகளிலிருந்து கட்சிக்கு வந்த மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், வழக்கறிஞர் த.லெனின் ஆகியோரும் போட்டியிட்டனர். கடைசியில், மாணவர் அமைப்புகளின் பங்கேற்பை விரும்பாமல் முன்னாள் மக்களவை உறுப்பினரே மீண்டும் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதுதான் உண்மை நிலைமை. இடதுசாரிகள் மட்டுமல்ல, திராவிட இயக்கத்தவரும் தங்களைச் சுயபரிசீலனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டிய நேரமிது.
- கல்வி வள்ளல் என்று மாற்றுக் கட்சியினராலும் போற்றப்பட்ட காமராஜரை எதிர்த்து ஒரு கல்லூரி மாணவர் வெற்றிபெற்றார் என்ற பெருமையைக் கொண்டது தமிழ்நாடு. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், சென்னை பச்சையப்பன் கல்லூரியும், தஞ்சாவூர் சரபோஜி கல்லூரியும் மொழியுரிமைப் போரின் மையங்களாகத் திகழ்ந்தன. க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன்,
- எஸ்.டி.சோமசுந்தரம், எல்.கணேசன் என்று மாணவர்களைத் தேடித் தேடி அரசியலுக்கு அழைத்துவந்த தலைவர்களும் இருந்தார்கள். இன்று இரண்டு கட்சிகளிலுமே மாணவர் அமைப்புகளின் வழியே வந்தவர்களுக்கு அளிக்கப்படுகிற அதிகபட்ச முக்கியத்துவம் செய்தித் தொடர்பாளர் என்பதுதான். அவர்களது அரசியல் பங்களிப்பு என்பது தொலைக்காட்சி விவாதங்களுடனேயே முடிந்துவிடுகிறது.
- தமிழகத்தில் இடதுசாரிக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் மாணவர் அமைப்புகளிலிருந்து வந்த எத்தனை பேருக்கு கட்சிக்குள்ளும் உள்ளாட்சியிலும் சட்டமன்ற, நாடாளுமன்ற அவைகளிலும் இடம்கொடுக்கின்றன என்ற கேள்விக்கு முகம்கொடுத்தே ஆக வேண்டும். மாணவர் அமைப்புகளில் பங்கெடுப்பவர்கள் அனைவருக்குமே பொறுப்புகளையும் பதவிகளையும் அளிக்க முடியாது என்பது எதார்த்தம்தான். ஆனால், மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் கட்சி உறுப்பினர்களில் எத்தனை பேர் மாணவர், இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது விவாதத்துக்குரிய கேள்வி.
மாணவர்களுக்கு அரசியல் வாய்ப்புகள்
- தமிழகத்தின் இருபெரும் கட்சிகளிலும் ஏற்கெனவே இருக்கும் மூத்த தலைவர்களின் வாரிசுகளையன்றி புதியவர்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்காது என்ற நிலையிலேயே, மாணவர்களும் இளைஞர்களும் தொடங்கப்படும் எந்தவொரு புதுக் கட்சியிலும் இணைந்துகொள்ளத் தயாராக இருக்கிறார்கள் என்ற எதார்த்தத்தையும் இந்தக் கட்சிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் வழங்கும் அரசியல் வாய்ப்புகளை இடதுசாரி, திராவிடக் கட்சிகளின் மாணவர் அமைப்புகள் வழங்கவில்லையென்றால், அதன் விளைவுகள் முன்கூட்டியே அனுமானிக்கக் கூடியதே.
- வாடகை வீட்டில் வசிக்கும் எலெக்ட்ரீஷியன் ராஜேந்திரன் தனது மகளின் அரசியல் பங்கேற்புக்கு எதிராக இல்லை. வயநாடு பொழுதனாவில் ஊராட்சி மன்றத் தலைவராகி யிருக்கும் ரோஸ்னா, சிவில் சர்வீஸ் முதனிலைத் தேர்வு எழுதி முடிவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
- தமிழகத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அரசியலில் ஈடுபடுவதை விரும்பவில்லை என்பதோடு, அரசு அமைப்புகளுமே அதை விரும்புவதில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விண்ணப்பங்களில் பதில் அளிக்க வேண்டிய முக்கியமான கேள்விகளில் ஒன்று, நீங்கள் அரசியல் கட்சியில் உறுப்பினரா என்பது.
- அரசு ஊழியர்கள் கட்சி உறுப்பினர்களாக இருக்கக் கூடாது என்பது அவசியமான விதிமுறை. ஆனால், கட்சி உறுப்பினர்களாக இருந்தவர்கள் அரசுப் பணிக்கே விண்ணப்பிக்கக் கூடாது என்பதுதான் இளைஞர்களிடம் திட்டமிட்டு நிகழ்த்தப்படும் அரசியல் நீக்கம். வாக்களிக்கும்உரிமை என்பது தனது அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதுதான்.
நன்றி: தி இந்து (29-12-2020)