TNPSC Thervupettagam

மாணவர்களுக்குக் காலை உணவு: தமிழ்நாட்டின் வரலாற்றுப் பெருமை

August 29 , 2023 453 days 244 0
  • தமிழ்நாட்டில் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளில், 1 முதல் 5ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவு படுத்தப் பட்டிருப்பது வரவேற்புக்குரியது. தமிழ்நாட்டில் 1920இல் நீதிக் கட்சியின் சர் பிட்டி தியாகராயரால் அரசுப் பள்ளிகளில் பொது உணவுத் திட்டம் இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், நிதிப் பற்றாக்குறை காரணமாகக் கைவிடப் பட்டது. 1957இல் அன்றைய முதலமைச்சர் காமராஜர் ஆட்சிக் காலத்தில் மீண்டும் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அது சத்துணவுத் திட்டமாக உருவெடுத்தது. மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் முட்டை, காய்கறிகள், வாழைப் பழத்துடன் கூடிய உணவு, கலந்த சாதம் என இத்திட்டம் பல மேம்பாடுகளைக் கண்டது. இதைத் தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்குக் காலை உணவும் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை இருந்துவந்தது.
  • 2022 செப்டம்பர் 15 அன்று முதல்கட்டமாக 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் சுமார் 1,14,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டது. இதன் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் காலை உணவு வழங்குவதிலும் தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடி என்னும் வரலாற்றுப் பெருமையைப் பெற்றது. மாணவர்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைக் கணக்கில்கொண்டு, தினமும் வழங்கப்படும் உணவில் பருப்பு, தானியங்கள், காய்கறிகள் ஆகியவை இருக்கும்படி இத்திட்டம் வடிவமைக்கப்பட்டது.
  • இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட 1,319 பள்ளிகளில், மாணவர் சேர்க்கை கடந்த ஓர் ஆண்டில் அதிகரித்திருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 25 அன்று மேலும் 29,436 பள்ளிகளில் தொடக்கக் கல்வி பயிலும் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி பயின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மாணவர்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்தத் திட்டம்என்று தெரிவித்தார்.
  • காலை உணவுத் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.404 கோடி செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆரோக்கியத்துடன் கல்வி கற்று முன்னேறுவதை இலக்காகக் கொண்ட இத்திட்டத்துக்குச் செலவழிக்கப்படும் தொகை முதலீடாகவே பார்க்கப் பட வேண்டும். வரவு-செலவுக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்களின் காலை நேரப் பசியைப் போக்குவதற்கும், சத்தான உணவை அவர்களுக்கு வழங்குவதற்கும் அரசு முன்னுரிமை அளித்திருப்பது பாராட்டுக்குரியது.
  • அதேநேரம், காலை உணவுத் திட்டத்தை நடுநிலை, உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விரிவுபடுத்துவதைப் பற்றியும் அரசு பரிசீலிக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரமும் சத்துக்களின் உள்ளடக்கமும் சிறப்பானவையாக எப்போதும் தொடர்வதில் அரசு கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய நேர சத்துணவின் தரம் குறித்த விமர்சனங்களுக்கு அரசு முகம்கொடுத்து, அதில் உள்ள பிரச்சினைகளைக் களைய வேண்டும்.
  • கூடவே, அரசுப் பள்ளிகளின் பிற போதாமைகளும் நீக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையை வளம் நிறைந்ததாகக் கட்டமைப்பதில் முதலமைச்சர் செலுத்தும் அக்கறை முழுமையாகப் பலனளிப்பதற்கு மேற்கண்ட அனைத்து அம்சங்களிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி : இந்து தமிழ் திசை (29– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்