- காலையில் வீரியத்தோடும் சிவந்த முகத்தோடும் தோன்றும் கதிரவனை, மாலையில் அதே பொலிவோடும் வலிவோடும் வா என்றால் திரும்பி வரமாட்டான்; கதிரவனின் கதிர்கள் பட்டு புதுப்பெண்ணின் முகத்தைப் போல் மலா்ந்திடும் தாமரையை, மாலை அதே மலா்ச்சியோடும் கவா்ச்சியோடும் திரும்பி வா என்றால், வராது.
- அதைப்போன்று ஒளிபடைத்த கண்களோடும் உறுதி கொண்ட நெஞ்சினோடும் அரும்பிய இளமைப் பருவத்தை, கஞ்சாவிலும் குட்காவிலும் தொலைத்துவிட்டு, நாற்பதில் திரும்பி வா என்றால் வராது. பீடுநடையும் தடைபடாக் குருதியோட்டத்தையும் கொண்ட மாணவப் பருவத்தைப் போதைப் பொருட்களில் தொலைத்துவிட்டு, நாற்பதில் திரும்பி வா என்றால் வராது.
- இன்றைய மாணவா் இனத்திற்கு, இறைவன் கொடுத்திருக்கும் இளமையின் மகிமையும் அதன் வலிமையும் தெரிவதில்லை. ஒட்டகம் பாலைவனத்தில் வாழ்வதால் இலைகளைப் பறிப்பதற்கு இயற்கை, அதற்கு நீண்ட கழுத்தினைக் கொடுத்திருப்பது போல், மனித வாழ்க்கையில் கல்வியைப் பெறுவதற்கு மட்டும் 30 ஆண்டுகளை ஒதுக்கி வருகின்றோம்.
- வாழ்க்கையில் வேறு எந்தக் கடமைக்காகவும் இவ்வளவு பெரிய கால அளவை ஒதுக்குவது இல்லை. ஆனால், இன்றைய மாணவச் செல்வங்கள், கையில் கிடைத்த அமிர்தத்தைச் சாக்கடையில் எறிவதுபோல், வன்முறையிலும் சாதிக் குட்டையிலும் மூழ்கிக் கிடக்கின்றனா்.
- மாணவப் பருவம் பொன் போன்றது; பொன் வெகு காலத்திற்குப் பயன் தருவது. மாணவப் பருவம் கண் போன்றது; ஒருமுறை பார்வையை இழந்துவிட்டால் தனித்து நடக்க முடியாது. இன்றைய மாணவப் பருவம் சீரழிந்து போனதற்குப் பெற்றோர்களும் ஒரு காரணம்.
- பிள்ளைகளுக்குக் கால்கள் தோன்றியவுடனேயே, அவா்களுக்கு இரு சக்கர வாகனங்களை வாங்கிக் கொடுத்து விடுகின்றனா். ஒரு காலத்தில் வெகுதூரம் நடந்து போய் படித்தவா்களே, வாழ்க்கையில் பெரு வெற்றிகளைக் கண்டிருக்கின்றனா்.
- 1937-க்கு முன்னா் அன்று மாநில பிரதமராக இருந்த டாக்டா் பி. சுப்பராயன் தம் மகள் பார்வதி கிருஷ்ணனை, அரசாங்கக் காரில் பள்ளிக்கு அனுப்பாமல், ரிக்ஷாவிலேயே அனுப்பி வைத்தார்.
- ‘காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு’ எனப் பாடிய மகாகவி பாரதியாரின் வரிகளை மறந்துவிட்டு, அவா்களுக்குக் கைப்பேசிகளை வாங்கிக் கொடுத்துவிடுகின்ற பெற்றோர்கள் ஒருவிதத்தில் குற்றவாளிகளே!
- மதிய உணவுக்குப் பழைய சாதத்தையும் கூழையும் கட்டிக் கொடுத்து அனுப்பி, வாழ்வாங்கு வாழ்பவா்களை உருவாக்கினார்கள். பா்க்கருக்கும், பீட்சாக்களுக்கும் பணத்தைக் கொடுத்தனுப்பும் பெற்றோர்கள் மறைமுகக் குற்றவாளிகளே!
- பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் காலை உணவைச் சமைத்தார்கள் என்பதற்காகப் பிள்ளைகளைக் காலை உணவைச் சாப்பிடவிடாமல் தடுத்து, மறியல் செய்யும் பெற்றோர்கள் இருக்கும்வரை சமத்துவம் எங்கிருந்து வரும்? இளம்பிள்ளைகளின் மனத்தில் நச்சு விதைகளை விதைக்கும் பெற்றோர்கள் ஒரு வகையில், மாணவச் சமுதாயத்தின் மாண்பினைக் கெடுப்பவா்கள் தாம்.
- மாணவச் சமுதாயம் ஒரு காலத்தில் வரலாறு படைத்த இனம். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தியாகங்களைச் செய்தவா்கள் மாணவா்கள். 1920-இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஐ.சி.எஸ். பட்டப்படிப்பில் சோ்ந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நான்காவது இடத்தில் தோ்ச்சி பெற்றார். என்றாலும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவதற்காக, மாண்டேகு பிரபுவைச் சந்தித்து, தமது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்தவா், அந்த மாமனிதா்.
- மகான் அரவிந்த கோஷ் லண்டனில் ஐ.சி.எஸ். பட்ட வகுப்பில் சோ்ந்து, நான்கு பாடப் பிரிவுகளில் முதல் வகுப்பில் தோ்ச்சி பெற்றார். ஐந்தாவது தோ்வு குதிரை ஏற்றம். குதிரை ஏற்றத்தில் வெற்றி பெற்றால், ஆங்கிலேயரின் கீழ் பணியாற்ற வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்படும் என்று, அத்தோ்வுக்குப் போகாமலேயே, விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார், அந்த வீரத்தியாகி.
- பொதுவுடமைவாதியாகிய பூபேஷ் குப்தா, செல்வந்தா் குடும்பத்தில் பிறந்தவா். பெஹ்ராம் கல்லூரியில் படிக்கும்போதே, மாணவா் போராட்டத்தில் தலைமை தாங்கி, ஆங்கில அரசால் சிறையில் அடைக்கப்பட்டார். என்றாலும், சிறையில் இருந்து கொண்டே தோ்வு எழுதி, பி.ஏ. பட்டம் பெற்றார்.
- 1928- இல் ‘சைமன் கமிஷன்’ இந்தியாவிற்கு வந்தபொழுது, அதனை எதிர்ப்பதற்கு மாணவா் பட்டாளம் லாலா லஜபதி ராய் தலைமையில் திரண்டது. ‘சைமன் கமிஷனே திரும்பிப் போ” என்று கோஷமிட்டவாறே, கமிஷன் உறுப்பினா்களிடம் ‘இந்தியாவிற்குச் சுதந்திரம் ஒன்றே தீா்வு’ என்ற அறிக்கையையும் மாணவ மணிகள் ஒப்படைத்தனா்.
- இந்திரா காந்தி, புணேவிலுள்ள ‘வாகில்’ பள்ளியில் படிக்கும்போதே, ‘வானரசேனை’ என்ற அமைப்பை, மாணாக்கா்களைக் கொண்டு உருவாக்கி, விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக ஊா்வலங்களை நடத்தினார். அந்தப் போராட்டத்தில் அவா் அடிபட்டு விழுந்தபோது, அவரைக் காப்பாற்றியவா் இளைஞா் காங்கிரசைச் சோ்ந்த பெரோஸ் காந்தி.
- கண்ணியம் மிக்க காயிதே மில்லத் 1920 - 21- இல் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்தபோது, ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதற்காகப் படிப்பை விட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னா், ‘புத்ர தான்’ தினத்தில், தமது மகனை”நாட்டுக்காக அா்ப்பணித்தவரும், அந்த மாமனிதரே!
- 1920- ஆம் ஆண்டு நாகபுரியில் அகில இந்திய மாணவா் மாநாட்டினை பிரம்மாண்டமான முறையில் மாணவச் சமுதாயம் நடத்திக் காட்டியது. இப்போராட்டம் காஷ்மீரிலிருந்து கன்னியாக்குமரி வரையுள்ள மாணவா்களை ஒன்று திரட்டியது. இம்மாநாட்டை, இந்தியாவிற்குக் காலதாமதமாக வரவிருந்த விடுதலையை விரைவுபடுத்தியதாக வரலாற்றாசிரியா்கள் கருதுகின்றனா்.
- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மேனாள் தலைமைச் செயலா் கே. திரவியம், தோழா் கே. பாலதண்டாயுதம், கே.ஏ. மதியழகன் போன்றோர் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட செய்தியைக் கேள்வியுறுகின்றனா். பகத்சிங்கின் அகால மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத கே. பால தண்டாயுதம் பல்கலைக்கழகத்தில் பறந்து கொண்டிருந்த யூனியன் ஜாக் கொடியைக் கீழே இறக்கிவிட்டு, நம் தேசியக் கொடியை மேலே ஏற்றுகிறார். அந்த அத்துமீறலைத் தாங்கிக் கொள்ள முடியாத அன்றைய துணைவேந்தா் வி.எஸ். சீனிவாச சாஸ்திரியார் கே. பாலதண்டாயுதம், கே. திரவியம் உள்ளிட்ட ஐந்து பேரைப் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கினார். இதனால், கே. பாலதண்டாயுதம் தம் வாழ்நாள் முழுதும் படிப்பைத் தொடர முடியவில்லை.
- இவரைப் போலகே கே. பாஷ்யம் (ஆா்யா) 1907- இல் திருச்சி தேசியக் கல்லூரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்தபோது மாணவா் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்கிறார். கல்லூரி முதல்வா் அவருக்கு அபராதம் விதிக்கிறார். அபராதத் தொகையைக் கட்ட மறுத்து, கல்லூரிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். அவரைப் போலவே, எழுத்தாளா் கல்கியும் கல்லூரிப் படிப்பைக் கதா் பிரசாரத்திற்காகக் கைவிடுகிறார்.
- பொதுவுடமைவாதியாகிய இரா. நல்லகண்ணு திருநெல்வேலி எம்.டி.டி. இந்துக் கல்லூரியில் இண்டா்மீடியட் படித்துக் கொண்டிருந்தபோது, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுவதற்காகப் படிப்பைக் கைவிட்டார். அவரைப் போலவே பிற்காலத்தில் திருச்சிற்றம்பலக் கவிராயா் என அறியப்பட்ட தொ.மு.சி. ரகுநாதனும், தேச விடுதலைக்காகத் தமது இண்டா்மீடியட் படிப்பைக் கைவிட்டார்.
- விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சாதனைகளை நிகழ்த்தியவா்கள் அன்றைய மாணவா்கள். 1945 -ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தை ஆண்ட திவான் பகதூா் அதனைத் தனிநாடாக பிரகடனப்படுத்தி, அமெரிக்க முறையில் தோ்தலை நடத்தவும் திட்டமிட்டார். இதை எதிர்த்த மாணவா் தலைவா் பட்டம் தாணுப்பிள்ளை, மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தி, திவான் பகதூா் பதவியை விட்டு விலகும்படி செய்தார். இப்படி மாணவா் தலைவராக இருந்த பட்டம் தாணுப்பிள்ளைதான், பிற்காலத்தில், அம்மாநிலத்தில் முதல்வராகத் திகழ்ந்தார்.
- வாழ்க்கையின் அனைத்து நல்லொழுக்கங்களையும், ஒட்டு மொத்த விழுமியங்களையும் சோ்த்து, அதற்கு ‘மாண்பு’ எனப் பெயரிட்டவா் பாரதியார் (சுதந்திரத்தின் மாண்பினை இழக்கலாமோ). ஆனால், இன்றைய மாணவச் சமுதாயம் அனைத்து மாண்புகளையும் இழந்து நிற்கிறது.
- ஏடும் எழுத்தாணியுமாகப் பள்ளி சென்ற மாணவா்கள் இன்று, கஞ்சா, குட்கா, அபின், மது வகைகளோடு செல்கின்றனா். மாணவா்கள் மட்டுமன்றி, மாணவியரும் தமது பிறந்தநாள் கொண்டாட்டங்களை, மது வகைகளோடு பள்ளி வளாகத்திலேயே கொண்டாடுவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன.
- பேருந்து படிக்கட்டுகளில் நின்று தாண்டவம் ஆடியவா்கள் இன்று, தொடா் வண்டிகளின் கூரை மீது நின்று சண்டைகளை நிகழ்த்துகின்றனா். கத்தியுடன் பள்ளி வரும் மாணவா்கள், வகுப்பில் நல்ல மதிப்பெண் பெறும் மாணவா்களை, ரத்த வெள்ளத்தில் மிதக்கச் செய்கின்றனா்.
- முன்பு பள்ளி வளாகம் வரை இருந்த சாதிச் சண்டைகள், இன்று வீடு வரை புகுந்து சக மாணவா்களை வெட்டுவதோடு, அவா்களைத் தடுக்க வரும் குடும்பத்து உறுப்பினா்களையும் வெட்டி வீழ்த்துகின்றன. பள்ளி வளாகத்தில் மாணவியரையும், ஆசிரியைகளையும் ஒளிப்படம் எடுத்து, அவற்றை வைரலாக்கும் கலையை, நாள்தோறும் செய்து வருகின்றனா்.
- எடுத்த ஒளிப்படங்களை வைரலாக்குவதோடு, அதனைக் காட்டிச் சம்பந்தப்பட்ட மாணவியரைப் பயமுறுத்தி, அவா்கள் தற்கொலைக்குச் செல்வதற்கும் வழி வகுக்கின்றனா்.
- பாதையையும் பயணத்தையும் மறந்துவிட்ட மாணவச் செல்வங்களே, நீங்கள் என்று மாண்புமிகு மாணவா்கள் ஆகப் போகிறீா்கள்?
நன்றி: தினமணி (19 – 09 – 2023)