மாதவிடாய் விடுப்பு அவசியமா?
- பிஹார், கேரளம் போன்ற மாநிலங்களில் மாதவிடாய் விடுப்பு இருப்பதால் தமிழ்நாட்டிலும் அப்படியான ஏற்பாடு தேவை என்று சமீபகாலமாகப் பலர் குரல் கொடுக்கின்றனர். ஆனால், மாதவிடாய் விடுப்பு அவசியம்தானா என விவாதிப்பது அவசியம்.
உண்மை நிலவரம்:
- ஸ்பெயின், ஜப்பான், இந்தோனேசியா, தென் கொரியா போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுப்பு முறை உள்ளது. இங்கிலாந்தில் இதற்கெனத் தனி விடுப்பு இல்லை. தேவை என்றால் பெண்கள் இதை ‘உடல் நலமற்ற விடுப்பு’ என்று எடுத்துக்கொள்ளலாம். அதற்கென்று சட்டம் இல்லை; ஆனால், நிறுவனங்கள் அவர்களின் விருப்புரிமைப்படி வழங்கலாம். அமெரிக்காவிலும் இந்த விடுப்பு முறை இல்லை.
- பெண்களுக்குப் பருவமடைதல் (puberty) அல்லது மாதவிடாய் தொடக்கம் (menarche) வளர்ச்சியின் ஓர் அங்கம்தான். இது தவிர மார்பகங்கள் வளர்ச்சி அடைவது, பிறப்புறுப்புகள், அக்குள் போன்ற பல இடங்களில் முடி வளர்ச்சி, ஹார்மோன் மாற்றங்களால் முகப்பரு, உடல் எடை, உயரம் கூடுதல் போன்ற மாற்றங்களுடன் மனதளவிலும் பல மாற்றங்கள் ஏற்படும்.
பிற்போக்குக் கருத்துகளுக்கு வலுசேர்க்கும்:
- மாதவிடாய் என்பது இயல்பான ஒரு நிலை. அதற்காகச் சிறப்புச் சலுகைகள் கொடுப்போம் என்பது ‘பெண் பலவீனமானவள்’, ‘பாதுகாக்கப்பட வேண்டியவள்’ போன்ற கருத்துக்களுக்கு வலுசேர்க்கும். இது ஒரு வகையில் மென் பாலினப் பாகுபாடு (benevolent sexism). பெண்களுக்கு எந்த ஒரு சமத்துவ ஏற்பாடாக இருந்தாலும், அது பாலினங்களைச் சமத்துவ நிலைக்குக் கொண்டுவந்து, பாலின இடைவெளியைக் குறைக்க வேண்டுமே தவிர, அதிகரிக்கக் கூடாது.
எதிர்கொள்வது எளிது:
- பெண்கள் மாதவிடாயின்போது இயல்பாக இருக்க வேண்டும். குளித்துச் சுத்தமாகத் தன்னை வைத்துக்கொள்ள வேண்டும்... அவ்வளவுதான். மற்றபடி, உடற்பயிற்சி உள்பட எல்லா செயல்பாடுகளிலும் ஈடுபடலாம். பஞ்சுத்தக்கை (tampons) எனப்படும் சாதனத்தைப் பயன்படுத்தினால் நீச்சல்கூட அடிக்கலாம். விளையாட்டு நிகழ்வுகளில் கலந்துகொள்ளலாம்.
பெண்களுக்கு எப்போது விடுப்பு தேவை?
- மாதவிடாயின்போது வலி என்பது 80 சதவீதம் பெண்களுக்கு இயல்பாக ஏற்படுவதுதான். பொறுத்துக்கொள்ள முடியாத அளவுக்கு இருந்தால், வலி நிவாரணி எடுத்துக்கொள்ளலாம். அளவுக்கு அதிகமான வலி, குருதிப் போக்கு, மனரீதியான மாற்றங்கள் இருந்தால், அது இயல்பான நிலை இல்லை. அப்போது மருத்துவரின் சிகிச்சை நிச்சயம் தேவை. அவர்களின் ஆலோசனைப்படி மாத்திரைகள் அல்லது விடுப்பு பரிந்துரைக்கப்பட்டால் எடுப்பது நல்லது.
- இதை ‘மாதவிடாய் விடுப்பு’ என்றில்லாமல் ‘உடல் நலனின்மை’ (sick leave) என்று இருபாலருக்கும் பொதுவான விடுப்பாக இருக்க வேண்டும். ஆண் பிள்ளைகள் வளர்ச்சியின்போது சந்திக்கும் உடல்நலக் குறைபாடுகளின்போது ஓய்வு தேவை என்று மருத்துவர் பரிந்துரைத்தால், அவர்களும் இந்தப் பொது விடுப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
குழந்தைப் பேறு விடுப்பு எடுக்கலாமா?
- மகப்பேறு / கர்ப்பகாலமும் இயல்பான நிலைதான். கர்ப்பத்தின்போது உடற்பயிற்சி செய்வது இயல்பு. குழந்தை பிறப்புக்குப் பிறகு ஆறு வாரங்களில் ஒரு பெண் இயல்புக்கு மாறுவார்.
- நார்வே, ஸ்வீடன் உள்ளிட்ட ஸ்காண்டிநேவிய (scandinavian) நாடுகளில் பேறுகால விடுப்பு இல்லை. மாறாக, ‘பெற்றோர் விடுப்பு’ என்று இருபாலருக்கும் பொதுவான விடுப்பு உண்டு. ஆணோ பெண்ணோ யார் வேண்டுமானாலும் இந்த விடுப்பை எடுத்துக்கொள்ளலாம். தாய்ப் பால் எடுக்கும் கருவி மூலம் (breast pump) எடுத்துக் குழந்தைக்காக வைத்துவிட்டு பெண்கள் வேலைக்குச் செல்லலாம்.
- அதைக் குளிர் பெட்டியில் வைத்து, குழந்தைக்குப் பாலாடை மூலம் தந்தை கொடுக்கலாம். தமிழ்நாட்டில் மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் என்பது பெருமைக்குரிய ஒன்று. ஆனால், ஒரு ஆணும் பெண்ணும்தான் பெற்றோர் ஆகின்றனர் என்பதால், குழந்தை / மகப்பேறு பெண்களின் வேலை என்று ஒதுக்காமல் இருபாலரும் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்கிற சட்டம் வேண்டும்.
மாதவிடாய் விடுப்பு வந்தால் என்ன ஆகும்?
- பாலின இடைவெளி அதிகரிக்கும். பெண்களுக்கு மென் பாலினப் பாகுபாடு நடக்கும். ‘அவளுக்கு மாதவிடாய்... அப்படித்தான் கத்துவாள்’ என்று மாதவிடாய் சார்ந்து பெண்கள் பற்றிய தவறான புரிதல்கள் வலியுறுத்தப்பட்டு, பெண்களை மேலும் அடிமைப்படுத்தும் போக்கு அதிகரிக்கும். பல பெண்கள் வேலை செய்யும் இடத்தில் யாருக்கு மாதவிடாய் என்று ஊருக்கே தெரியும் அளவுக்கு இந்த விடுப்பு அமையும்.
- பெண்களை மாதவிடாயின்போது ஒதுக்கிவைக்க வேண்டும் என்று பேசுபவர்களுக்குச் சாதகமாகவும் மாறக்கூடும். மாதவிடாய் தொடர்பான புரிதல்களுக்கு, உடல் சார்ந்த கல்வி - உடலுறவு சார்ந்த கல்வி தேவை (sex education). மாதவிடாய் என்பது இயற்கையானது என்று புரிந்துகொண்டால், அதற்கெனப் பிரத்யேக விடுப்பு தேவையில்லை என்பதையும் புரிந்துகொள்ளலாம்!
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 10 – 2024)