TNPSC Thervupettagam

மாநில அரசின் உரிமை இடஒதுக்கீடு

September 7 , 2020 1419 days 663 0
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டில், மாநில அரசின் அதிகாரத்தை உறுதிசெய்யும் விதமான உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய இரண்டு தீர்ப்புகளும் வரவேற்புக்குரியவை.
  • பின்தங்கியவர்களிலும் பின்தங்கியவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு இடஒதுக்கீட்டின் பயனைக் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதும், அரசு மருத்துவர்களுக்கு மேற்படிப்பு வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பதும் இந்தத் தீர்ப்புகளின் வழியாக உறுதிப்பட்டிருக்கிறது.
  • இந்த இரண்டு இடஒதுக்கீடு நடைமுறைகளும் தமிழகத்தில் தொடங்கிவைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • அருந்ததியர் உள் இடஒதுக்கீடு மற்றும் அது தொடர்பான வழக்குகளில், பட்டியல் சாதியினரில் உட்பிரிவுகளுக்கு முன்னுரிமை கொடுப்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
  • எனினும், இவ்விவகாரத்தில் விரிவான ஆய்வு தேவை என்றும் அது கூறியுள்ளது. எனவே, உள் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இறுதியானதில்லை என்றபோதும் தற்போதைய நடைமுறையின் சட்டரீதியான செல்லும் தன்மையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என்ற வகையில் முக்கியமானது.
  • 2004-ல் இ.வி.சின்னையா எதிர் ஆந்திர பிரதேச அரசுஎன்ற வழக்கில், மாநில அரசுக்கு உள் இடஒதுக்கீடு செய்ய அதிகாரமில்லை என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றத்தின் பார்வை தற்போது மாறியிருக்கிறது.
  • தமிழ்நாட்டில் பட்டியல் சாதியினருக்கான 18% இடஒதுக்கீட்டில் அருந்ததியருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் முறை 2009-ல் அன்றைய திமுக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.
  • அடுத்ததாக, மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு மாநில அரசுகள் சிறப்பு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த மற்றொரு வழக்கில், இவ்விஷயத்தில் மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு இந்திய மருத்துவ ஆணையத்துக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • கிராமப்புற அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு 1989-ல் அன்றைய திமுக அரசால் கொண்டுவரப்பட்டது.
  • தமிழக அரசின் இந்த இடஒதுக்கீட்டை 2017-ல் இந்திய மருத்துவ ஆணையம் ரத்துசெய்தது. உச்ச நீதிமன்ற உத்தரவால் அடுத்த கல்வியாண்டு முதல் மீண்டும் இந்த இடஒதுக்கீட்டு முறை தொடரவுள்ளது.
  • அருந்ததியர் உள் இடஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினரிடமும் உள் இடஒதுக்கீடு தொடர்பிலான கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்திரா சஹானி வழக்கு

  • மஹாராஷ்டிரத்தில் மராத்தாக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு இந்திரா சஹானி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்று தொடரப்பட்ட வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 23 அன்று விசாரணைக்கு வந்தன.
  • 1992-ல் இந்திரா சஹானி வழக்கில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு 50%-ஐத் தாண்டக் கூடாது என்று 9 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
  • 28 மாநிலங்கள் 50%-க்கும் அதிகமாக இடஒதுக்கீடு வழங்கிவரும் நிலையில், இந்திரா சஹானி தீர்ப்பை மறுபரிசீலிக்கும் வகையில் 11 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்பட வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
  • மொத்த மக்கள்தொகையில் 85% பிற்படுத்தப்பட்டோரைக் கொண்ட மஹாராஷ்டிரத்தில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை 50%-க்குள் சுருக்குவது அநீதி என்பது அவர்களின் வாதம்.
  • இடஒதுக்கீடு விஷயத்தில் இந்தியா முழுவதற்கும் பொதுவான விதி ஒன்றை வகுப்பது அதன் நோக்கத்தையே சிதைப்பதாக அமைந்துவிடும்.
  • மாநிலங்கள் தங்களது மக்கள்தொகையில் பிற்பட்ட வகுப்பினரின் விகிதாச்சாரத்துக்கு ஏற்பவும், கல்வி, வேலைவாய்ப்புகளில் அவர்கள் பெற்ற பயன்களின் அடிப்படையிலும் இடஒதுக்கீட்டின் அளவைத் தீர்மானிப்பதே நியாயமானதாக இருக்க முடியும்.
  • இடஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் பார்வையில் ஏற்பட்டுள்ள மாற்றம் அதையே நிரூபிக்கிறது.

நன்றி:  தி இந்து (07-09-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்