- மாநிலச் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெறும்போது மாநிலக் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் மிகுந்த கவனம் பெறுவது புதிது அல்ல. கடந்த காலத்தில் தேர்தல் அறிக்கையைக் ‘கதாநாயகன்’ என்று விளிக்கும் அளவுக்குத் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பேசுபொருள் ஆகியிருக்கின்றன.
- இதுவே மக்களவைத் தேர்தல் என்று வரும்போது மாநிலக் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள் பெரிய அளவில் பேசுபொருள் ஆவதில்லை. இந்த முறை முக்கியமான தேசியக் கட்சிகள்கூட தேர்தல் அறிக்கையை இன்னும் வெளியிடாத நிலையில், தமிழ்நாட்டின் மாநிலக் கட்சிகள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் ஒரே குரலில் அமைந்திருப்பதைக் காண முடிகிறது.
- தற்போது மக்களவைத் தேர்தலையொட்டி திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. கடந்த காலத்தைப் போலவே திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டிருக்கும் வாக்குறுதிகள் பல ஒன்றுபோலவே அமைந்திருக்கின்றன. ஆனால்,அவை இன்றைய காலச் சூழலுக்கு ஏற்ப மாறியிருக்கின்றன.
மகளிர் உரிமைத் தொகை:
- தமிழ்நாடு தொடங்கி பல்வேறு மாநிலங்களிலும் மகளிருக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் பல்வேறு மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கைகளிலும் முதன்மையாக இடம்பிடித்து வருகிறது. அந்தத் திட்டத்தைத் திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் இந்த முறை ஒருசேர அறிவித்திருக்கின்றன.
- ‘இந்தியா முழுவதும் மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை’ என்று திமுகவும், ‘பொருளாதார மேம்பாட்டுக்கெனக் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.3,000’ என்று அதிமுகவும், ‘வறுமையில் உள்ள மகளிருக்கு ரூ.3,000 உரிமைத் தொகை’ என்று பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள பாமகவும் அறிவித்துள்ளன.
- வெவ்வேறு அணிகளாகப் போட்டியிடும் திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் தமிழ்நாட்டில் மகளிர் வாக்குகளைக் கவர்வதில் போட்டிபோடுவதை இந்தத் தேர்தல் வாக்குறுதிகள் உணர்த்துகின்றன.
நீட் விலக்கு:
- சட்டப்பேரவைத் தேர்தலிலேயே நீட் தேர்வை ரத்துசெய்யும் வாக்குறுதியை அளித்துவிட்டு திமுக அரசு விமர்சனங்களை எதிர்கொண்டுவரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்கிற தேர்தல் வாக்குறுதியை இந்த முறையும் அக்கட்சி அளித்திருக்கிறது. நீட் தேர்வுக்கு மாற்றாக பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை என்று அதிமுக அறிவித்திருக்கிறது.
- மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக அறிவித்திருக்கிறது. நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்படும் என்று தன் பங்குக்கு ‘நாம் தமிழர்’ கட்சியும் வாக்குறுதி அளித்திருக்கிறது. ஆக, தமிழ்நாட்டில் நீட் தேர்வு தீவிரமான பிரச்சினையாகத் தொடர்வதை அரசியல் கட்சிகளின் இந்த வாக்குறுதிகள் உறுதிப்படுத்துகின்றன.
ஆளுநர் பதவி:
- பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆள்கிற மாநிலங்களில் ஆளுநர்களின் செயல்பாடுகள் எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்றுவருகின்றன. தமிழ்நாட்டில் ஆளுநர்-மாநில அரசு இடையே சுமுகமான உறவு இல்லாத நிலையில் - தேர்தல் அறிக்கைகளில் அவை முதன்மையாக இடம்பிடித்திருக்கின்றன.
- மாநில முதலமைச்சர்களின் ஆலோசனையைப் பெற்று ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும், ஆளுநர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டக்கூறு 361 நீக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் திமுக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆளுநர் பதவி நியமன முறையில் மாநிலங்களின் கருத்தைக் கேட்டு நியமிக்க வேண்டும் என்பதை அதிமுகவும் வலியுறுத்துகிறது. ஆளுநர் பதவியை நீக்கச் சட்டத்திருத்தம் செய்யப்படும் என்று நாம் தமிழர் கட்சி அறிவித்திருக்கிறது.
பெட்ரோல், டீசல்:
- மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலுக்கே பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு பற்றிய வாக்குறுதி அளிக்கும் அளவுக்கு அவற்றின் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதுபோன்ற வாக்குறுதி மக்களவைத் தேர்தலில் இடம்பெறவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
- ‘பெட்ரோல்-டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே மேற்கொண்டு, பெட்ரோல்-டீசல் விலையைக் குறைக்க வலியுறுத்தப்படும்’ என்கிற வாக்குறுதியை அதிமுக அறிவித்துள்ள நிலையில், சமையல் சிலிண்டர் விலை ரூ.500, பெட்ரோல் விலை ரூ.75, டீசல் விலை ரூ.65ஆகக் குறைக்கப்படும் என்கிற வாக்குறுதியைத் திமுக அறிவித்திருக்கிறது.
- பெட்ரோல், டீசல் வரி குறைப்பு, இவை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படும் என்கிற வாக்குறுதிகளையும் பாமக அறிவித்திருக்கிறது. ஏழை, நடுத்தர மக்களை பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் பாதித்துவரும் நிலையில், அதை எதிரொலிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வடிவமைத்திருக்கின்றன.
நிதி பகிர்வு:
- நிதி பகிர்வு தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசை விமர்சிக்கும் நிலையும், உச்ச நீதிமன்றத்தை அணுகும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழலில் நிதி பகிர்வு தொடர்பாக திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள் அந்த அம்சத்தையும் தேர்தல் அறிக்கையில் தொட்டுள்ளன.
- இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை, இரட்டைக் குடியுரிமை வழங்கப்படும் என்கிற வாக்குறுதிகளை திமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகள்ஒன்றாக அறிவித்துள்ளன. நீண்டகாலக் கோரிக்கையாகவே இருக்கும் - உச்ச நீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைக்க வேண்டும் - என்கிற வாக்குறுதியைத் திமுக,அதிமுக, பாமக ஆகியவை அறிவிக்கத் தவறவில்லை.
மாநிலக் கட்சிகளின் நிலை:
- மக்களவைத் தேர்தலுக்கு வாக்குறுதி அளிப்பதில் தமிழ்நாட்டை மையப்படுத்தி முக்கியக் கட்சிகள் ஒரே குரலில் எதிரொலிப்பதற்கு இவை சில உதாரணங்கள்தான். இதுபோல இன்னும் பல வாக்குறுதிகள் இக்கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் ஒரே மாதிரியாக இடம்பெற்றுள்ளன.
- மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் என்றால் ஆட்சியைப் பிடிக்கும் மாநிலக் கட்சியால் தேர்தல் வாக்குறுதிகளை இயன்றவரை நிறைவேற்றிட முடியும். ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு மாநிலக் கட்சிகள் அளிக்கும் இதுபோன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற இக்கட்சிகள் அடங்கிய கூட்டணியோ இக்கட்சிகள் ஆதரிக்கும் கட்சியின் ஆட்சியோ மத்தியில் அமைய வேண்டும் என்பதே நிதர்சனம்.
- மத்திய அரசாகப் பார்த்து நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து, மாநிலக் கட்சிகள் தாராள வாக்குறுதிகளை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்க... தேசிய அளவில் ஒரே கூட்டணிக்குள் இருந்துகொண்டு, கர்நாடகமாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசின் காவிரி நீர் கோரிக்கைக்குத் துளியும் அசைந்து கொடுக்காமல் இருப்பதும், மேகேதாட்டு அணை கட்டியே தீருவோம் என்ற அவர்களின் கர்ஜனையை இங்கே ஆளும் திமுக-வால் அடக்க முடியவில்லை என்பதும் கவனிக்கத்தக்கவை.
- அப்படி இருக்க, கூட்டணியைச் சேர்ந்த ஒரு கட்சியே மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் மூலமாகத் தங்கள் வாக்குறுதிகளை மாநிலக் கட்சிகள் எந்தளவுக்குச் சாதிக்க முடியும் என்ற கேள்வி பலமாகவே எழுகிறது.
- கடந்த 1999, 2004 ஆகிய ஆண்டுகளில் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பதவியேற்ற கூட்டணி ஆட்சியில் குறைந்தபட்ச செயல் திட்டம் என்கிற நடைமுறை இருந்தது. அதுபோன்ற ஒரு திட்டத்தை ஆட்சியில் இருக்கும் தேசியக் கட்சிகளோடு கூட்டணியில் இருக்கும் மாநிலக் கட்சிகள் ஏற்படுத்திக்கொள்ள முயல வேண்டும். முடியாதபட்சத்தில் மாநில நலன் சார்ந்து மக்களவைத் தேர்தலுக்குக் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் வெறும் கோரிக்கைகளாக மட்டுமே நின்றுவிடும்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 03 – 2024)