TNPSC Thervupettagam

மாநிலத் தேர்தல் ஆணையர் சுதந்திரமானவராக இருப்பதை மாநிலங்கள் உறுதிசெய்ய வேண்டும்

March 19 , 2021 1405 days 576 0
  • உள்ளாட்சி அமைப்புகளை அரசு நிர்வாகத்தின் முழுமையான மூன்றாவது அடுக்காக மாற்றி, அரசமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொண்டு கால் நூற்றாண்டுக்கு மேல் ஆகியும் அந்த அமைப்புகளுக்குப் போதுமான அதிகாரப் பகிர்வு செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.
  • உள்ளாட்சிக்கு உரிய அதிகாரம் தன்னாட்சி இல்லாததற்கு இதுவே காரணம். எனினும், உள்ளாட்சிக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முறைகள் பெரிதும் பிரச்சினைக்கு உரியவையாகவே இருக்கின்றன.
  • வன்முறையாலும் முறையற்ற தொகுதி வரையறைகளாலும் பீடிக்கப்பட்டவையாகவே உள்ளாட்சித் தேர்தல்கள் இருக்கின்றன.
  • சுதந்திரமாகவும் நியாயமாகவும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்கு மாநிலத் தேர்தல் ஆணையருக்கு முழுச் சுதந்திரம் இருப்பது அவசியம்.
  • ஆனால், தேர்தல் ஆணையத்தில் பெரும்பாலான மாநிலங்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களை நியமிப்பதால் பாரபட்சம் நிலவுகிறது என்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன.
  • மாநிலத் தேர்தல் ஆணையர் மாநில அரசுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவராக இருக்க வேண்டும் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை இந்தப் பின்னணியில்தான் வைத்துப் பார்க்க வேண்டும்.
  • கோவா அரசு தனது சட்டத் துறைச் செயலரையே மாநிலத் தேர்தல் ஆணையர் பொறுப்பைக் கூடுதலாக ஏற்கும்படி கேட்டிருப்பது ‘அரசமைப்புச் சட்டத்தைக் கேலிசெய்யும் செயல்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது.
  • மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் எல்லா மாநிலத் தேர்தல் ஆணையர்களும் பதவி விலக வேண்டும் என்று அரசமைப்புச் சட்டக் கூறு 142-ன் கீழ் தனக்குள்ள சிறப்பு அதிகாரத்தின்படி உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.
  • நடைமுறையில், ஓய்வுபெற்ற அதிகாரிகளையே பெரும்பாலான மாநிலங்கள் மாநிலத் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கின்றன. ஆகவே, மாநிலங்கள் அவற்றுக்குக் கட்டுப்பட்டிராதவர்களைத் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமிப்பதற்கு வழிவகை காண வேண்டும்.
  • இந்தத் தீர்ப்பு வருங்காலத்தில் மாநிலத் தேர்தல் ஆணையர்களின் சுதந்திரத்தை உறுதிசெய்ய உதவும்.
  • உள்ளாட்சித் தேர்தல்களுக்குத் தயாராகும்போது மாநில அரசால் சட்ட மீறல்கள் எதுவும் செய்யப்பட்டால், அதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு மாநிலத் தேர்தல் ஆணையருக்கு உள்ள அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் வலுப்படுத்தியுள்ளது.
  • கடந்த காலத்தைப் போலவே உள்ளாட்சித் தேர்தல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் மாநிலங்களை ஆளும் அரசுகள் இனியும் இருக்க முடியாது.

நன்றி: இந்து தமிழ் திசை (19 - 03 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்