- மக்களவைத் தேர்தலுடன் நடத்தப்பட்ட நான்கு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில், உள்ளூர்ப் பிரச்சினைகள் சார்ந்து மக்கள் தங்கள் தீர்ப்புகளை வழங்கியுள்ளனர்.
- வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பேமா காண்டு தலைமையிலான பாஜக அரசு, மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 46ஐக் கைப்பற்றி, மீண்டும் ஆட்சி அமைக்கிறது. சிக்கிமில் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா 32 தொகுதிகளில் 31ஐக் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றுள்ளது.
- இந்த இரண்டு மாநிலங்களிலும் ஆளும் கட்சி மீதான நம்பிக்கை வெளிப்பட்டிருக்கிறது. சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா, பாஜகவுடன் இணக்கப் போக்கையே கடைப்பிடிக்கிறது.
- ஒடிஷாவில் 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்த பிஜு தனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக்கின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 78ஐக் கைப்பற்றியுள்ள பாஜக, முதல் முறையாக அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கவிருக்கிறது. பிஜு தனதா தளம் 51 தொகுதிகளுடன் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாக வேண்டும்.
- ஒடிஷாவில் நவீன் பட்நாயக் அரசின் நலத் திட்டங்களே அவரது ஆட்சி நீண்ட காலம் தொடர வழிவகுத்தன. அதேநேரம், பாஜக தனது செல்வாக்கைப் படிப்படியாக வளர்த்துக்கொண்டது. இந்த முறை ஒடிஷாவின் அனைத்துப் பகுதிகளிலும் பாஜக குறிப்பிடத்தக்க வாக்கு விகிதத்தைப் பதிவுசெய்துள்ளது.
- முதுமை காரணமாக நவீன் பட்நாயக்கின் உடல்நிலை நலிவடைந்துவருகிறது. அவருடைய அரசியல் வாரிசாக தமிழரான வி.கே.பாண்டியன் முன்னிறுத்தப்பட்டதற்கு எதிரான பாஜகவின் பிரச்சாரம் வாக்காளர்களிடையே தாக்கம் செலுத்தியுள்ளது.
- ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, மாநிலத்தின் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 135ஐப் பெற்று அபார வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. பாஜக, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா ஆகிய கூட்டணிக் கட்சிகள் முறையே 8 - 21 தொகுதிகளில் வென்றுள்ளன.
- 2019 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 11 தொகுதிகளில் மட்டுமே வென்று அதிகாரபூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூடப் பெறத் தவறியுள்ளது. வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்தாதது, மாநிலத்துக்கு மூன்று தலைநகரங்களை அமைக்கும் திட்டம், ஊழல் குற்றச்சாட்டின் பெயரில் பழிவாங்கும் நோக்கில் சந்திரபாபு நாயுடுவைக் கைதுசெய்தது எனப் பல்வேறு காரணங்களுக்காக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு மீது நிலவிய மக்களின் அதிருப்தியே இந்தத் தேர்தல் முடிவில் பிரதிபலித்துள்ளது.
- பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர். இரண்டு கட்சிகளுமே பாஜகவுடன் கூட்டணியில் இல்லாமல் இருந்தபோதும் மத்திய பாஜக அரசுடன் அனைத்து விஷயங்களிலும் சுமுகமான உறவைக் கடைப்பிடித்துவந்தன. பாஜக அரசு கொண்டுவந்த பெரும்பாலான சட்டங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவளித்தன.
- இதன் மூலம் இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜகவின் ஆதரவுத் தளம் வலுவடைந்ததோடு, அந்தக் கட்சிக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது. மத்தியில் ஆளும் கட்சியுடனான உறவில் இரட்டை நிலையைப் பேணுவதற்கு எதிரான மக்களின் தீர்ப்பாகவும் ஆந்திர, ஒடிஷா சட்டமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்க்கலாம்.
- மக்களவைத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தாலும் எதிர்பார்த்தபடி தனிப் பெரும்பான்மையைப் பெற்றிராத பாஜகவுக்கு மாநிலத் தேர்தல் முடிவுகள் பெரும் உத்வேகம் அளித்திருக்கின்றன. புதிதாக அமைந்திருக்கும் மத்திய அரசும் மாநில அரசுகளும் மக்கள் பிரச்சினைகளில் இணக்கமாகச் செயல்பட்டு ஜனநாயகத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (07 – 06 – 2024)