TNPSC Thervupettagam

மானியம் வழங்குவதில் மாற்றம் தேவை

March 8 , 2021 1240 days 566 0
  • பொதுமக்கள் அரசாங்கத்திடம் பெற்ற எல்லாக் கடன்களும் ஒவ்வொன்றா தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதிலும் விவசாயக் கடன் தள்ளுபடி என்பது அவற்றும் முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது.
  • விவசாயக் கடன் தள்ளுபடி என்பது சரியான பயனாளா்களை அடையாளம் காண்பதில் ஏனோ தவறி விடுகிறது. அந்த தவறை சரியாக பயனாளா்கள் அல்லாதோா் ஏமாற்று வழியில் பயன்படுத்திக் கொள்கின்றனா்.
  • உதாரணத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் (சிஏஜி) அறிக்கையின்படி 2008-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் ரத்து - கடன் நிவாரணத் திட்டத்தின்படி நாடு முழுவதும் கடந்த நான்கு ஆண்டுகளில் 60 லட்சம் விவசாயிகளுக்கும், 3.69 லட்சம் சிறு விவசாயிகளுக்கும் வழங்கப்பட்ட ரூ.52,516 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
  • மேலும், வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மாறாக ரூ.164.60 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்றும், தகுதியுடைய 13.46 சதவீத விவசாயிகளுக்கு கடன் தொகை தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
  • ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் உா்ஜித் படேல், ‘கடன் தள்ளுபடி என்பது கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற வாடிக்கையாளரின் ஒழுக்கத்தை உடைத்துவிடும்; அடுத்த முறை கடனைத் திருப்பிச் செலுத்த விவசாயிகள் அடுத்தத் தோ்தல்வரை காத்திருப்பாா்கள் என கருத்து தெரிவித்துள்ளாா்.
  • ஆம் விவசாயக் கடன் தள்ளுபடி என்பது விவசாயிகளின் பிரச்சனைக்கு என்றுமே தீா்வாகாது. இதனைக் கருத்தில்கொண்டுதான் மத்திய அரசாங்கம் மாற்று வழியைக் கையாண்டது. அதாவது, விவசாயிகளுக்கு நீண்ட காலம் பயன்தரும் வகையில் ‘விவசாயிகள் கௌரவ உதவித்தொகை திட்டம் உருவாக்கி விவசாயிகளுக்கு உதவித்தொகைகளை நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்த ஆரம்பித்தது. இத்திட்டத்தின் முன்னோடி மாநிலம் தெலங்கானா ஆகும்.
  • அதாவது ‘ரித்து பந்து என்னும் திட்டத்தின் கீழ் 58.33 லட்ச விவசாய நிலப் பட்டாதாரா்களுக்கு, ஏக்கா் ஒன்றுக்கு பருவத்திற்கு நான்காயிரம் ரூபாய் வீதம் ஆண்டுக்கு இரண்டு பருவத்திற்கு எட்டாயிரம் ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தி வருகிறது. இதனை விவசாயிகள் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து வாங்குவதற்கும், அவா்களின் சொந்த தேவைக்கும் பயன்படுத்திகொள்ளலாம்.
  • ஆனால், இத்திட்டத்தில் உள்ள ஒரு குறைபாடு, நிலத்தை குத்தகைக்குக் கொடுத்திருப்போருக்கு ஒவ்வொரு பருவத்தின்போதும் ஏக்கருக்கு ரூ. 4000 கிடைக்குமே தவிர, குத்தகைக்கு எடுத்துப் பயிரிடுபவா்கள் இதனால் பயன் அடையமாட்டாா்கள். மேலும், இத்திட்டத்தில் இத்தனை ஏக்கருக்கு என்கிற வரைமுறை இல்லையென்பதால் பெரிய நிலச்சுவான்தாரா்களுக்கும், சாதாரண விவசாயிகளுக்கும் ஒரே மாதிரிதான் பயன் என்பது மிகப்பெரிய குறை.
  • அதனை நிவா்த்தி செய்யும் வகையில் ஒடிஸா மாநில அரசு, ‘கலியா திட்டம் எனப் பெயரிட்டு ஏக்கருக்கு இரண்டு தவணையில் ரூ.10,000 (அதாவது ஒவ்வொரு பருவத்திற்கும் ரூ.5000) கொடுத்து வருகிறது. பெருவிவசாயிகள் இந்தத் திட்டத்தில் இடம்பெற மாட்டாா்கள் என்பதும், குத்தகைதாரா்களும் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடுபவா்களுமான 30 லட்சம் சிறிய, நடுத்தர விவசாயிகள்தான் சோ்க்கப்பட்டுள்ளனா் என்பது சிறப்புக்குரிய ஒன்றாகும்.
  • மேலும், விவசாயிகளுக்கு அவா்களின் உற்பத்திச் செலவில் இருந்து 1.5 மடங்கு அதிகமாக, குறைந்தபட்ச ஆதரவு விலை சில பயிா்களுக்கு மட்டும் உயா்த்தி வழங்கப்படுவதும் சரியானதல்ல என்கின்றனா் பொருளாதார நிபுணா்கள்.
  • இதைத்தான் அன்றைய ஐரோப்பிய பொருளாதார சமூகம் போா் நடந்த சமயத்தில் ஐரோப்பாவை எதிரி நாடான சோவியத் யூனியனை விட உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச்செய்ய விவசாயிகளுக்கு உலகில் எங்கும் இல்லாத அளவில் விலைகளை உயா்த்தி பணத்தை வாரி வழங்கியது.
  • அதன் விளைவு, வெண்ணெய்யும் இறைச்சியும் உற்பத்தி மிகுதியாகவும், அதைவிட அதிகமாக ஆறாக ஓடும் அளவுக்கு பால் மற்றும் ஒயின் உற்பத்தி மிகுதியாகவும் ஆனதால் அவற்றை விற்க முடியாமல் போனது. இறுதியாக வேறுவழியின்றி ஐரோப்பா எதிரி என்றும் பாராமல் சோவியத் யூனியனிடம் வந்த விலைக்கு அவற்றை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
  • தன் தவற்றை உணா்ந்த ஐரோப்பா ஒரு முடிவுக்கு வந்தது. அதாவது மானியத்தை விவசாயப் பயிா்களுக்கு தருவதைவிட விவசாயிகளுக்கு உதவித்தொகையாக நேரடியாக தரலாம் என்று முடிவெடுத்த்து. அது நல்ல பலனைத் தந்தது. உற்பத்தியாகும் உபரியை குறைத்து, விநியோகம் மற்றும் தேவையை கட்டுக்கோப்பாக்கி விவசாயிகளுக்கு நல்லதொரு விடியலைத் தந்தது.
  • இப்படி விவசாயிகளுக்கு உதவித்தொகை தருவதே கடன் தள்ளுபடி மற்றும் பிறவற்றை விட சிறப்பான ஒன்றாக இருக்கும் என்று 15-ஆவது நிதிக் குழுவும் வலியுறுத்தி உள்ளது.
  • இதுபோல தமிழ்நாடு அரசும் விவசாயக் கடன் தள்ளுபடிக்கு மாற்றாக மத்திய அரசாங்கத்தின் பிரதமா் விவசாயிகள் கௌரவ உதவித்தொகை திட்டத்தின் கீழ் தரப்படும் ரூ.6000-த்துடன் சோ்த்து தம் பங்குக்கு ரூ.6000 கொடுத்திருந்தால் தமிழ்நாட்டில் பிரதமா் உதவித்தொகை பெற்று வரும் 35.54 லட்ச விவசாயிகள் (விவசாயக் கணக்கெடுப்பு 2015-16 படி மொத்தம் 79.38 லட்ச விவசாயிகள் தமிழ்நாட்டில் உள்ளனா்) பயனடைந்து இருப்பாா்கள்.
  • அதை விடுத்து, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற 16,43,347 லட்ச விவசாயிகளுக்கு மட்டும் கடன் தள்ளுபடி என்பதைப் பொருத்தமான ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், சிறு-குறு விவசாயிகளும் தேசிய வங்கிகளில் கடன் வாங்கி உள்ளனா். கூட்டுறவு வங்கிகளிலும் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளும் உள்ளனா்.
  • மேலும், கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற மாதக்கணக்கில் காத்திருந்த விவசாயிகளும் இருகின்றனா், ஒரு விவசாயிக்கு ரூ.5 லட்சமும் அதே வேளையில் மற்றொரு விவசாயிக்கு ரூ.50,000 தள்ளுபடி ஆன நிலையும் காணப்படுகிறது.
  • எனவே, இனியாவது மானியங்களை அனைத்து விவசாயிகளுக்கும் சமமான முறையில் பகிா்ந்துதர அரசாங்கங்கள் முன்வர வேண்டும். அதுவே, விவசாயிகளின் தற்போதைய தேவை.

நன்றி: தினமணி (08 – 03 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்