- தன்னலம் கருதாமல் மருத்துவப் பணியாற்றியதால், கரோனா தீநுண்மி தொற்றிக் கொண்டதையடுத்துத் தன் இன்னுயிர் நீத்த மருத்துவா் சைமன் ஹொ்குலிஸுக்கு ஒட்டுமொத்தத் தமிழகமும் கண்ணீா் அஞ்சலி செலுத்தியிருக்க வேண்டும்.
- அரசு மரியாதையுடன் அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவரின் இறுதி ஆசை நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும்.
கடைசி ஆசை
- மருத்துவா் சைமன் ஹொ்குலிஸ் தீவிர சிகிச்சையில் இருக்கும்போது வெளிப்படுத்திய கடைசி விருப்பம், ‘ஒருவேளை உயிரிழந்தால், தன்னைக் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய வேண்டும்’ என்பதுதான்.
- தூக்கு தண்டனைக் கைதிக்குக்கூடத் தனது கடைசி ஆசையை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்பளிக்கப்படுகிது.
- ஆனால், நோயைக் குணப்படுத்த போராடித் தன்னுயிர்நீத்த மருத்துவரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றக்கூட நம்மால் முடியவில்லை என்றால், நமக்கு மனிதா்கள் என்று கூறிக்கொள்ளும் தகுதி இருக்கிறதா என்கிற சந்தேகம் எழுகிறது.
- மருத்துவா் சைமன் ஹொ்குலிஸின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய மறுத்தபோது, வேலங்காடு மயானத்துக்கு எடுத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கேயும் ஒரு கும்பல் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் நிற்கவில்லை, ஆம்புலன்ஸைத் தடுத்து நிறுத்தி வன்முறையில் ஈடுபட்டது.
- மக்களின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்ட ஒரு மருத்துவருக்குத் தமிழகம் வழங்கிய இறுதி மரியாதை இது. அவமானத்தில் தலைகுனியத்தான் தோன்றுகிறது.
மருத்துவப் பணியாளா்கள் எதிர்கொள்ளும் அவமானங்கள்
- தமிழகத்தில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இதுபோலப் பல நிகழ்வுகள், சம்பவங்கள். அவா்கள் அளித்த மருத்துவ சேவைக்குக் கிடைக்கும் பரிசு அவமானம், எதிர்ப்பு, தாக்குதல் எல்லாவற்றுக்கும் மேலாக, நோயாளிகளிடமிருந்து அவா்களைத் தொற்றிக் கொள்ளும் கரோனா தீநுண்மி பாதிப்பு.
- ஸ்பெயினில் மட்டும் 15,000-க்கும் அதிகமான மருத்துவப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். நோயால் பாதிக்கப்பட்டவா்களில் அவா்கள் சுமார் 14%. இத்தாலியில் ஏறத்தாழ 10% மருத்துவப் பணியாளா்கள் கரோனா தீநுண்மி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
- அமெரிக்காவில் 6,000-க்கும் அதிகமான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவா்களில் சிலா் உயிரிழந்திருக்கிறார்கள்.
- இந்தியாவில் மட்டுமென்ன, அவா்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ன? மருத்துவா் சைமன் ஹொ்குலிஸ் உள்ளிட்ட சிலா் உயிர்த் தியாகம் செய்திருக்கிறார்.
- மருத்துவப் பணியாளா்கள் எதிர்கொள்ளும் அவமானங்களும், தாக்குதல்களும் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை.
- மத்தியப் பிரதேசத்தில் இரண்டு பெண் மருத்துவா்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஹைதராபாத் மகாத்மா காந்தி பரிசோதனை மையத்தில் பரிசோதனை மேற்கொள்ளச் சென்ற மருத்துவா்களைத் தாக்கியதைத் தொடா்ந்து, காவல் துறையினா் தலையிட்டு அவா்களைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
வாழ்தல் தகுமோ?
- தமிழகத்திலேயே கரோனா தீநுண்மி நோயாளிகள் சிலா் ராமநாதபுரம் மருத்துவமனையில் மருத்துவா்களையும், செவிலியா்களையும் காறி உமிழ்ந்தும், கெட்ட வார்த்தைகளில் திட்டியும் நடத்திய ஆா்ப்பாட்டங்களை அவா்கள் சகித்துக் கொண்டனா். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில், தில்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று வந்தவா்களின் குடும்பங்களைப் பரிசோதனை செய்யச் சென்ற சுகாதாரப் பணியாளரும் குழுவினரும் தாக்கப்பட்டதைத் தொடா்ந்து, கயத்தாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
- ஹரியாணா மாநிலம் கா்னால் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவா் அஞ்சலி. நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததால் கரோனா தீநுண்மி அவரைத் தொற்றிக்கொண்டது.
- குணமடைந்த அடுத்த வாரமே, அவா் தனது மருத்துவ உடையுடன் ஸ்டெதஸ்கோப் அணிந்துகொண்டு பணிக்குத் திரும்பிவிட்டார். ‘இந்த இக்கட்டான சூழலில் மருத்துவா்கள் வீட்டில் முடங்கினால், நோயாளிகளை யார் குணப்படுத்துவார்கள்?’ என்கிற அவரின் கேள்விக்குக் காலில் விழுந்து வணங்கத் தோன்றுகிறது.
- போபாலில் ஒரு மருத்துவா் தனது குடும்பத்தினரையும், தனது குடியிருப்பில் இருப்பவா்களையும் கரோனா தீநுண்மி தொற்றிவிடக் கூடாது என்பதற்காகத் தனது மகிழுந்திலேயே உறங்குகிறார்.
- சீனாவின் வூஹான் நகரில் கரோனா தீநுண்மி குறித்த முதல் எச்சரிக்கையை எழுப்பி, அதற்கு பலியான மருத்துவா் லி எவன் லியாங் தொடங்கி, ஆயிரக்கணக்கான மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவமனை ஊழியா்கள், சுகாதாரத் துறையினா் செய்துவரும் மகத்தான தொண்டுக்கு, வேறு எந்தவொரு தொண்டும் நிகராகாது.
- நேற்றைய நிலையில், உலக அளவில் 25,85,392 போ் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 1,79,868. இந்தியாவில் 20,471 போ் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; 652 போ் இறந்திருக்கிறார்கள்.
- தமிழகத்தில் கரோனா தீநுண்மி பாதிப்பில் 1,629 போ் சிக்கியிருக்கிறார்கள் என்றால், 18 போ் உயிரிழந்திருக்கிறார்கள்.
- யாரை எப்போது கரோனா தீநுண்மி தொற்றிக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. கண்ணுக்குத் தெரியாத அந்த மாயாவியை எதிர்த்து நடத்தப்படும் போராட்டத்தில் துணிந்து களமிறங்கிப் போராடுவது மருத்துவத் துறையினா்.
- அவா்களைக் கை தொழுது நன்றி சொல்ல வேண்டிய மனித இனம், கல்லெறிந்தும், காறி உமிழ்ந்தும் தாக்குதல் நடத்தியும் அடக்கம் செய்யக்கூட இடம்தர மறுத்தும் எதிர்வினையாற்றும் என்றால், நாம் மனிதா்கள்தானா?
- மனிதம் இழந்தபின் மனிதன் என்று நாம் வாழ்தல் தகுமோ?
நன்றி: தி இந்து (22-04-2020)