TNPSC Thervupettagam

மாமல்லை: ஆடுபுலி ஆட்டத்திலிருந்து செஸ் வரை

July 27 , 2022 743 days 444 0
  • மாமல்லபுரம் என்றவுடன் நினைவுக்குவருவது பல்லவச் சிற்பிகளின் கைகளால் உருவான சிற்பங்களும், குடைவரைகளும்தான். அதுபோல சிற்பங்களே இல்லாத சிற்பமாய் நிற்கும் ‘வெண்ணை உருண்டைக் கல்’லும் நினைவில் தட்டும். இக்கல்லுக்கு அடியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஆடுபுலி ஆட்டம், தாய ஆட்டம் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடந்துள்ளன.
  • அதற்குச் சாட்சியாக அங்கு 20-க்கும் மேற்பட்ட விளையாட்டுக் கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை ஆறு வெவ்வேறு வகை ஆட்ட வடிவங்கள். முக்கோணம், சதுரம், செவ்வகம், வட்ட வடிவங்களில் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. அவற்றில் இரண்டு கட்டங்கள் நேர்த்தியாகப் பாறையின் அடிப் பகுதியில் செதுக்கப்பட்டுள்ளன.
  • இவ்விரண்டு கட்டங்களும் பாறை இவ்விடத்துக்கு வருவதற்கு முன்னர் வரையப்பட்டிருக்க வேண்டும். இப்பாறை நகர்வின் காலம் தெரிந்தால், அந்தக் கற்செதுக்குகளின் தொன்மையை அறிய முடியும்.
  • இங்குள்ள தாயக்கட்டங்களில் சிலவற்றில் மலையைக்குறிப்பிடும் வகையில் பெருக்கல் குறியீடுகள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள எட்டுக்கும் மேற்பட்ட ஆடுபுலி ஆட்டக் கட்டங்கள் இன்னும் தெளிவாக உள்ளன. அவை இன்றளவுக்கும் விளையாட ஏதுவான கட்டங்களாகவே உள்ளன.
  • மேலும் சில வரைவுகள் வட்டமாகவும், பிற வடிவங்களிலும் உள்ளன. இவ்வாட்டங்களை ஆடும் முறை தெரியவில்லை. ஒரு வேளை இவை வழக்கொழிந்த ஆட்ட முறையாக இருக்கலாம் அல்லது பிற பகுதிகளிலிருந்து இங்கு வந்தவர்கள் உருவாக்கியிருக்கலாம். அதுபோல, முடிவற்ற நிலையில் பல கற்செதுக்கு வரைவுகளும், தேய்ந்துபோன நிலையில் சில கற்செதுக்குகளும் காணப்படுகின்றன.

ஆடுகளும் புலிகளும்

  • ஆடுபுலி ஆட்டம் என்பது தொலைக்காட்சிப் பெட்டிகள் ஊருக்குள் வருவது வரைக்கும் ஆண்களும் ஆண்களும், பெண்களும் பெண்களும், ஆண்களும் பெண்களும் என வயது வித்தியாசமின்றி விளையாடப்பட்ட ஓர் விளையாட்டு.
  • இன்றளவும், கிராமப் பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களில் உள்ள பலகைக் கற்கள், கோயில் வளாகங்கள், சத்திரம், சாவடி போன்ற இடங்களில் ஆடுபுலி ஆட்டக் கட்டங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஆனால், இன்றைக்கு இதை விளையாடுபவர்கள் குறைந்துவிட்டனர். இருப்பினும் சில கிராமங்களில் இன்றளவும் ஆடப்பட்டுவருகிறது.
  • இரண்டு முக்கோணங்கள் குறுக்கே இரண்டு செவ்வக வடிவக் கட்டங்கள். கட்டங்கள் சேருமிடமே ஆட்டக் காய்கள் வைக்கப்படும் இடம். இந்த ஆட்டத்தில் 3 புலிகளும் 15 அல்லது 21 ஆடுகளும் களமிறங்கும். முக்கோணத்தின் நுனிப்பகுதியில் மூன்று புலிகளும் களம் இறக்கப்படும்.
  • பின்னர், எதிர்முனையில் ஆடுகள் ஒவ்வொன்றாக இறக்கி நகர்த்தப்படும். புலியின் நகர்வை உற்றுக் கணித்து, ஆடுகளை நகர்த்த வேண்டும். இல்லையேல் புலிக்கு இரையாக நேரிடும். அதே வேளை, புலிகள் நகர முடியாத அளவில் ஆடுகள் தடுக்க வேண்டும். இதன் அடிப்படையில்தான் வெற்றி-தோல்வி நிர்ணயிக்கப்படும். ஆட்ட முறைகள் பொதுவாக ஒரே மாதிரியாக இருப்பினும், ஒவ்வொரு பகுதியிலும் சில விதிகளும் அவற்றின் பெயர்களும் மாறியுள்ளன.
  • பொதுவாக உடல், மூளையை வலுப்பெறத் தயார் செய்வதற்கானவை விளையாட்டுகள். தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்து, அதற்கேற்ப புத்திக்கூர்மையுடன் செயல்பட வழிவகுக்கும் பயிற்சியே ஆடுபுலி ஆட்டம். இந்த விளையாட்டு, வேட்டைச் சமூகம் கால்நடைச் சமூகமாக மாறிய காலகட்டத்தில் உருவாகியிருக்க வேண்டும் எனத் தமிழறிஞர் தொ.பரமசிவன் கருதுகின்றார்.
  • அன்றைய காலகட்டத்தில் காட்டுப்பகுதியின் வெளிப்புறத்திலும், மலை அடிவாரங்களிலும் உள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடுகளைப் புலிகளிடமிருந்து காப்பாற்ற முற்பட்டவர்களின் முயற்சியே இந்த ஆட்டம் என்கிறார் அவர். கால்நடைச் சமூகம் பின்னர் வேளாண் சமூகமாக மாறியது.
  • தேவைக்கும் அதிகமான உற்பத்தி வணிகத்துக்கு அடிகோலியது. அதுவே, நாளடைவில் அரசு உருவாக்கத்துக்கு வழிவகுத்தது. புதிய வாழ்க்கை முறையில் ஆட்டத்தின் முறைகளும் மாறின. அரசன், குலகுரு, யானை, குதிரைவீரன் எனப் போர் தொடர்பான பயிற்சிக்கான விளையாட்டாக ஆடுபுலி ஆட்டம் மாற்றப்பட்டது என்கிறார் தொ.பரமசிவன்.

இலக்கிய, தொல்லியல் சான்றுகள்

  • சங்க இலக்கியமான நற்றிணையில் ‘வங்கா வரிப்பாரைச் சிறுபாடு முணையின்...’ என்று ஒரு பாடலடி வருகிறது. இதில் குறிப்பிடப்படுவது பாறையில் வரிக்கோடுகளை வரைந்து விளையாடும் விளையாட்டு என்றும் அதுவே பின்னாளில் ஆடுபுலி ஆட்டமாக மாறியிருக்கலாம் என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர். அதுபோல கலித்தொகையில் ‘வல்லுப்பலகை எடுத்து நிறுத்தன்ன கல்லாக் குறள!’ என வருகிறது.
  • அது சூதாட்ட வல்லாட்டப் பலகையைக் குறிப்பிடுவதாக உள்ளது. மேலும், அகநானூற்றில் ‘நரை மூதாளர் அதிர் தலை இறக்கி, கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு’ என, முதியவர்கள் சிலர் பொது இடத்தில் சூதாடுவதைக் குறிப்பிடுகிறது. விளையாடுவதற்காகப் பலகையில் (கல்/மரம்/தரை) வரையப்படும் சதுரமான கட்டங்களைக் ‘கட்டரங்கு’ எனப் பெருங்கதை கூறுகிறது.
  • வல்லாட்டம் ஆடுவதற்கான வல்லுக்காய்கள், தமிழக அகழாய்வுகளில் கீழடி, ஆதிச்சநல்லூர், போளுவாம்பட்டி, வெம்பக்கோட்டை, சிவகளை, அரிக்கமேடு, மரக்காணம் முதலான இடங்களில் தொடர்ந்து கிடைத்துவருகின்றன. இவை பெரும்பாலும் சுடுமண்ணாலும், தந்தத்தாலும் செய்யப்பட்டவை.
  • சாமானியர்கள் முதல் செல்வந்தர்கள் வரை அவரவர்க்கு ஏற்றவாறு வல்லுக்காய்களைப் பயன்படுத்தி விளையாடிவந்துள்ளனர். தமிழகத்தில் கிடைத்த வல்லுக்காய்களை ஒத்த வடிவம் கொண்ட காய்கள், சிந்துவெளி அகழாய்வுகளிலும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சிந்துவெளியில் காய்கள் மட்டும் கிடைக்கும் நிலையில், இன்னும் அது தொடர்ச்சியாக வாழும் மரபாகவே இவ்விதமான ஆட்டம் தமிழகத்தில் தொடர்வதைக் கருத வேண்டியுள்ளது.
  • சமீபத்தில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கொங்கபட்டியில் கல் பலகை ஒன்று மூன்று வரிகளில் தமிழி/ தமிழ் – பிராமி கல்வெட்டுகளுடன் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வெழுத்துகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
  • இவ்வெழுத்துகளுக்கு அருகே இரண்டு விளையாட்டுக் கட்டங்கள் காணப்படுகின்றன. அவை முக்கோண வடிவில் உள்ள ஆடுபுலி ஆட்டக் கோடுகள், சதுரத்துக்குள் சதுரமென மூன்று சதுரக் கட்டங்களில் வரையப்பட்டுள்ளன. ஏற்கெனவே, சங்க கால அகழாய்வுகளில் வல்லுக்காய்கள் கிடைக்கும் நிலையில், தமிழி எழுத்துகளுடன் கிடைத்திருக்கும் இந்த வரைவுகள், தமிழகத்தில் இவ்விளையாட்டு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துள்ளதை உறுதிசெய்கிறது. வல்லாட்டம், கட்டரங்கு, ஆனைக்கொப்பு எனப் பல பெயர்களில் இது அழைக்கப்பட்டுள்ளது.
  • வட இந்தியாவில், இந்த ஆட்டம் சதுரங்கம் என்ற பெயராலேயே அழைக்கப்பட்டுள்ளது. பல வகையான புதிய விதிகளுடன் உலகின் முதல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 1886இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடத்தப்பட்டது. இவ்வாறாக, ஆடுபுலி ஆட்டம் வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விளையாட்டுகளாக உலகைச் சுற்றிவிட்டு, தற்போது தனது தாய்மண்ணுக்கே திரும்பிவந்திருக்கிறது.

நன்றி: தி இந்து (27 – 07 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்