- எட்டு ஆண்டுகள் இடைவெளியில் சென்னை மாநகரம் மீண்டும் பெருமழையின் தாக்கத்தை, ஊழிப் பெருவெள்ளத்தை, பேரிடரை எதிர்கொண்டிருக்கிறது. மக்கள் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்; அவர்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப இன்னமும் சில வாரங்கள் ஆகலாம். அதில் உயிரிழப்புகள், பொருள் இழப்புகள், இன்னல்கள், இடர்ப்பாடுகள், துயரங்களை அனுபவிக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் மழை மட்டுமே காரணமல்ல... நாமும்தான். புயல் குறித்த அறிவிப்புகளும் எச்சரிக்கைகளும் தொடர்ச்சியாக வெளியானபோதும் அதற்குச் செவிசாய்க்காமல் சற்று அசட்டையாக இருந்துவிட்டோமோ எனத் தோன்றுகிறது. பேரிடர்காலச் சூழல் என்பதும் போர்க்காலச் சூழலை ஒத்ததுதானே.மழை, வெள்ளம் குறித்த அச்சம் மக்கள் மனங்களில் இப்போது ஆழமாக நிலைகொண்டுவிட்டது. மழை என்றால் ஏற்படும் மனமகிழ்ச்சி மெல்ல விடைபெற ஆரம்பித்துவிட்டது.
நீராதாரங்கள் நிலைத்திருக்கட்டும்
- சென்னை மாநகரம் ஒரு கழிமுகத்துவாரம். அடையாறு, கூவம், கொசஸ்தலை போன்ற நதிகள் வங்கக் கடலில்தான் சங்கமிக்கின்றன. இந்த நதிகள் பயணித்துவரும் பாதை எங்கும் எத்தனை எத்தனை ஆக்கிரமிப்புகள். ஆக்கிரமிப்பாளர்கள் யார் என்பதையும் நாடே அறியும். நீர் செல்லும் பாதையை மறித்து, அதன் குறுக்கே சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ள அத்தனைக் கட்டுமானங்களும் அகற்றப்பட வேண்டியவை; அது யாருடையதாக இருப்பினும்! 1991இல், 42 சதுர கி.மீ. அளவிலிருந்த நீர்நிலைகளில், பாதியளவுக்கு மேல் அழிக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் ஆக்கிரமிப்பாளர்களின் வசம் பல்வேறு கட்டிடங்களாக, கல்வி நிறுவனங்களாக, தொழில் மையங்களாக, திரையரங்குகளாக மாறியிருக்கின்றன. அரசின் கையகப்படுத்தலில் பேருந்து நிலையம் போன்றவையும் உருவாகியிருக்கின்றன. தற்போது 18.95 சதுர கி.மீ. நீர்நிலைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இனிவரும் காலத்திலும் எந்த அரசுகளும் இதே தவறை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும்.
காலநிலை மாற்றத்தின் விளைவுகள்
- சூழலியல் மாற்றம் குறித்துப் பல ஆண்டுகளாகவே சூழலியலாளர்கள் கடும் எச்சரிக்கையை விடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். மேலும், நூறாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் அதிதீவிரமான பேரிடர்கள், இனி ஆண்டுதோறும் நிகழ வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் கிளைமேட் ஸ்டுடியோ (Climate Studio) அமைப்பின் கணிப்பின்படி, சராசரி மழைப்பொழிவு 20% வரையிலும் அதிகரிக்கும் என்றும், சென்னையின் அதிதீவிரமான மழை நாள்கள் இனி இரு மடங்காக அதிகரிக்கும் என்றும் கணித்திருக்கிறார்கள். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படக்கூடிய வெள்ளத்தால் சென்னையின் 46% பகுதிகள் மூழ்குவதற்கான அபாயம் இருப்பதாகவும் சென்னை காலநிலை மாற்றச் செயல்திட்டத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இவை மக்களை அச்சுறுத்துவதற்கானவை அல்ல; மீண்டும் இத்தகைய ஆபத்துகள் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கைத் தகவல்கள். அரசு முனைப்புடன் கவனித்துச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிகள்.
- இங்கு ஏற்கெனவே திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் அகற்றும் வடிகால்கள் 20 செ.மீ. மழைப்பொழிவை மட்டுமே அகற்றுவதற்கு ஏதுவானவை. ஆனால், தற்போது பொழிந்திருப்பது யாருமே எதிர்பாராத 45 செ.மீ. பெருமழைப்பொழிவு. இனிவரும் காலங்களில் மழைப்பொழிவின் அளவு மேலும் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் எச்சரிக்கிறார்கள். இப்படியான சூழலில், பரந்தூர் விமான நிலையம் போன்றவை தேவையா என்பதையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில், இதற்காகக் கையகப்படுத்த இருக்கும் 5,746.18 ஏக்கர் நிலப்பகுதியில் 2,682.62 ஏக்கர் நிலங்கள் நீர்நிலைகளையும் விவசாய நிலங்களையும் உள்ளடக்கியவை (46.7%). விமான நிலையத்தோடு அது முற்றுப் பெற்றுவிடாது. அதன் ‘தொடர் சங்கிலி வளர்ச்சி’களாக வணிகப் பேரங்காடிகள், கேளிக்கை நட்சத்திர விடுதிகள், அலுவலக வளாகங்கள் என வீங்கிக்கொண்டே போகும். வளர்ச்சிக்கும் வீக்கத்துக்கும் இடையே பெருத்த வேறுபாடு உண்டு. ஆனால், ஒருபோதும் அழிந்துபட்ட இயற்கையை மீண்டும் உருவாக்க யாராலும் இயலாது.
புறநகரும் மத்திய வர்க்கமும்
- ‘சென்னைக்கு மிக அருகில்....’ என்ற முழக்கத்துடன் விளைநிலங்களைக் கூவிக் கூவி ‘விலை’ நிலங்களாக விற்ற ‘ரியல் எஸ்டேட்’ வியாபாரிகள் தங்கள் பையை நிரப்பிக்கொண்டார்கள். இதில் ஏமாந்துபோனவர்கள் சொந்த வீடு ஆசையிலிருந்த நடுத்தர வர்க்கம்தான். இப்போது சென்னையைச் சுற்றிலும் இருக்கும் புறநகர்களில் அகழியைப் போல் தங்கள் குடியிருப்பை மழை வெள்ளநீர் சூழ்ந்திருக்க அவதிப்படுபவர்களும் அவர்கள்தான். பெருமழையும் வெள்ளமும் சென்னை மாநகருக்கு மட்டுமேயான பிரச்சினை அல்ல; இது உலகளாவிய பிரச்சினை. ஒட்டுமொத்த உலகுக்குமான பெரும் அச்சுறுத்தல். பருவமழை முன்புபோல மெலிதாகப் பெய்யத் தொடங்கிப் பின் சற்று வேகமெடுத்து, எதையாவது கொறித்துக்கொண்டே ஜன்னல் வழி ரசிக்கவும் வேடிக்கை பார்ப்பதற்குமானதாக இனி இருக்கப்போவதில்லை. சில ஆண்டுகளாகவே இதை அனுபவித்தும் வருகிறோம். ஒரு மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாளில் கொட்டித் தீர்க்கிறது. அதேபோல் புயலும் சூறைக்காற்றும் தொடர்கதையாகிவிட்டன. புயல் இல்லாமல் மழை இல்லை. இந்தியாவின் பெருநகரங்கள் மட்டுமல்ல, உலகெங்கும் இந்த நிலைதான்.
- அதேபோல முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய மற்றொன்று ஞெகிழிப் பயன்பாடு. அதுதான் மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் மாறியிருக்கிறது. மலைபோலக் குவியும் ஞெகிழியின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டாலே கொஞ்சம் மீள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. மறுசுழற்சிக்குப் பயன்படக்கூடியவற்றைக் கண்ட இடங்களில் வீசாமல், குப்பைத்தொட்டிகளில் முறையாகக் கொண்டுசேர்க்கும் கடமையையும் சரியாகச் செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. வந்தாரை வாழ வைக்கும் மாநகரம் சென்னை. இந்த நகரம் அழிந்துபடாமல் வாழ வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்குள்ளும் எழ வேண்டும். அதற்கான செயல்பாடுகளும் இருந்தால் மட்டுமே இனி சென்னை மாநகரம் பிழைத்திருக்கும். ஒரு பெருநகரத்தின் வளர்ச்சி என்பது வீங்கிப் பெருப்பது மட்டுமேயல்ல. அதை உயிர்ப்புடன் வைத்திருப்பதும்தான்!
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 12 – 2023)