- கடல் கடந்து பயணம் செய்த பயணிகளாலேயே சில நிலப்பரப்புகள் கண்டறியப்பட்டன. நாடுகளைப் பற்றிய வரலாறுகள் தெரியவந்தன. அப்படி நாடு விட்டு நாடு சென்ற பயணிகளில் ஒருவர் மார்கோ போலோ. வெனிஸ் குடியரசில் உள்ள வெனிஸில் 1254ஆம் ஆண்டு பிறந்தார்.
- மார்கோ போலோவின் தந்தை நிகோலோ போலோ மிகப் பெரிய வணிகர். அவருடைய சகோதரருடன் கடல்கடந்து சென்று வியாபாரம் செய்துவந்தார். மார்கோ பிறப்பதற்கு முன்பே வியாபாரத்துக்காகச் சென்ற நிகோலோ, மார்கோவுக்கு 15 வயதானபோதுதான் திரும்பிவந்தார். 2 ஆண்டுகளில் மீண்டும் வியாபாரத்துக்காகக் கிளம்பினார்கள். இந்த முறை தானும் அவர்களுடன் வருவதாகக் கூறி, மார்கோவும் இணைந்துகொண்டார்.
- 17 வயதில் வீட்டைவிட்டுக் கிளம்பி, பட்டுப்பாதை வழியாக சீனாவை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தார் மார்கோ போலோ. இந்தப் பட்டுப்பாதை 4 ஆயிரம் மைல்களுக்கு நீண்ட வணிகப் பாதை. துருக்கியிலிருந்து கிழக்கு சீனா, இந்தியா, பாரசீகம் வழியாகச் சென்ற பாதை. வணிகர்கள் இந்தப் பாதை வழியாக பட்டு, பீங்கான், தேயிலை, மசாலா போன்ற பொருள்களைத் தங்கள் நாடுகளுக்குக் கொண்டு சென்றார்கள். இந்தப் பாதை வழியாக ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குப் பொருள்கள் மட்டுமல்ல, கலை, கலாச்சாரம், கண்டுபிடிப்பு, சிந்தனை போன்றவையும் பரவின.
- மார்கோ போலோ பயணம் செய்த காலகட்டத்தில் பட்டுப் பாதையில் வணிகம் உச்சத்திலிருந்தது. விலை மதிப்புமிக்கப் பொருள்களை வணிகர்கள் கொண்டு செல்வதால், கொள்ளையர்களின் ஆபத்தும் இருந்தது. அப்போது சீனாவை ஆண்ட மங்கோலியர்கள் சாலையின் பெரும் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததால், பெரிய குழுக்களாக வணிகர்கள் பாதுகாப்பாகப் பயணம் செய்தனர்.
- நான்கு ஆண்டுகள் பயணம் செய்த பிறகு மார்கோ போலோ சீனாவை அடைந்தார். நிகோலோ போலோ தன் மகனை சீனாவின் பேரரசர் குப்லாய் கானுக்கு அறிமுகப்படுத்தினார். மார்கோவும் குப்லாய் கானும் நன்றாகப் பழகினர். விரைவில் குப்லாய் கானின் தூதுவராகவும் உளவாளியாகவும் மாறினார் மார்கோ.
- 1295 இல் மார்கோ போலோ வெனிஸுக்குக் கிளம்பினார். குப்லாய் கானின் விருப்பத்தின்படி, அவருடைய மகளை பாரசீகத்துக்கு அழைத்துச் சென்றார். மார்கோ போலோவின் வெனிஸை நோக்கியப் பயணம் மிகவும் ஆபத்து நிறைந்ததாக இருந்தது. வானிலை சரியில்லை. நோய்கள் தாக்கின. 700 பயணிகளில் 117 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். மார்கோ போலோ வெனிஸை நெருங்கிக்கொண்டிருந்தார். வெனிஸ் - ஜெனோவா இடையே போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஜெனோவா வீரர்களால் பிடிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார் மார்கோ போலோ. சிறையில் இருந்தபோது, ஸ்கெடெலோ டி பிசா என்ற எழுத்தாளரிடம் தன் பயண அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அவர் ‘மார்கோ போலோவின் பயணங்கள்’ என்ற பெயரில் புத்தகமாக எழுதினார். இந்தப் புத்தகம் மூலமே மார்கோ போலோவின் வாழ்க்கையைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
- 1299 இல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு வந்தார் மார்கோ. அவர் சீனாவுக்குப் பயணம் செய்த முதல் ஐரோப்பியர் அல்ல என்றாலும், அவர் அதிகமான தகவல்களைக் கொண்டுவந்தவர் என்பதால் வரலாற்றில் புகழ்பெற்ற பயணியாகத் திகழ்கிறார். இவர் மூலமே சீனாவைப் பற்றி ஐரோப்பியர்கள் அதிகம் அறிந்துகொண்டனர். இந்தத் தகவல்கள் கிறிஸ்டோபர் கொலம்பஸ் போன்ற பிற பயணிகளையும் பயணிக்க வைத்தன.
- 69 வயதில் நோய்வாய்ப்பட்ட மார்கோ, ஜனவரி 8, 1324 அன்று வெனிஸில் இறந்தார்.
நன்றி: தி இந்து (12 – 02 – 2023)