மார்கோனி
- இத்தாலி நாட்டில் பிறந்தவர் மார்கோனி. வீட்டிலிருந்தே ஆரம்பக் கல்வியைப் பயின்றார். வீட்டிலிருந்த நூலகத்தில் விளையாட்டை மறந்து படித்துக் கொண்டிருப்பார். அத்தனையும் அறிவியல் நூல்கள். மார்கோனியின் ஆர்வத்தைக் கண்ட அவரது தந்தை இயற்பியல், வேதியியல், கணிதப் பாடங்களைச் சொல்லித்தர பேராசிரியர்களை ஏற்பாடு செய்தார். கல்லூரிப் படிப்பையும் முடித்தார். ரோஸா என்கிற இயற்பியல் பேராசிரியர் மூலம் இயற்பியல் பக்கம் தன் கவனத்தை முழுமையாகத் திருப்பினார் மார்கோனி.
- மாக்ஸ்வெல் கம்பியற்ற தகவல்தொடர்பு முறையை உருவாக்க முயற்சி செய்தார். அந்த அனுபவங்களைப் புத்தகமாகவும் எழுதி வெளியிட்டிருந்தார். அதைப் படித்தார் மார்கோனி. ஹென்ரிச் ஹெர்ட்ஸூம் கம்பியில்லாத் தகவல்தொடர்பு குறித்து ஆராய்ச்சி செய்தவர். அவர் நூல்களையும் படித்தார் மார்கோனி. ரிகி, லாட்ஜ் போன்றவர்களின் நூல்களையும் படித்தார். இவற்றைத் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டார்.
- 50 ஆண்டுகளாகப் பலர் முயற்சி செய்தனர். ஆனால் யாரும் முடிவை எட்டவில்லை. மார்கோனி எட்டினார். ஆம், கம்பியில்லாமல் ஆண்டெனா மூலம் ஒன்றரை கி.மீ தொலைவுக்குச் சமிக்ஞை அனுப்புவதில் வெற்றி பெற்றார். மேலும் முயற்சி செய்ததில் 2.5 கி.மீக்குச் சமிக்ஞை கிடைத்தது. ஆண்டெனாவின் உயரத்தை எந்த அளவிற்கு அதிகப்படுத்தினாரோ அந்த அளவிற்கு சமிக்ஞைகள் தெளிவாகக் கிடைத்தன.
- வசதியான குடும்பமாக இருந்தாலும் ஆராய்ச்சியைத் தொடர நிதி உதவி தேவைப்பட்டது. இது பலரும் முயன்றது என்பதால் இத்தாலி அரசு இந்தக் கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை. நண்பரின் அறிவுரைப்படி இங்கிலாந்து சென்றார் மார்கோனி. தன் ஆய்வுகளைச் சமர்ப்பித்தார். அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 6 கி.மீ. தூரத்துக்குத் தகவலைக் கடத்திக் காட்டினார். காப்புரிமையும் பெற்றார்.
- கண்டுபிடிப்பிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இங்கிலாந்து அரசு செய்துகொடுத்தது. ’Are You Ready?’ என்கிற செய்தியைப் பொதுமக்கள் முன்னிலையில் முதன்முதலாக அனுப்பி, நிரூபித்துக் காட்டினார்.
- தகவல் கிடைக்கும் தூரத்தை அதிகரிக்க 200 அடி உயரமுள்ள ஆண்டெனாக்களை அமைத்தார். 50 கி.மீ. 120 கி.மீ. என உயர்ந்த அளவுகளை மெதுவாக உயர்த்தினார். இத்தாலிக்குச் செய்தி அனுப்பினார். ஆங்கிலக் கால்வாய் முழுவதும் கம்பியில்லா தொடர்பை ஏற்படுத்தினார். இங்கிலாந்துக்கும் பிரான்ஸுக்கும் தொடர்பு ஏற்படுத்தினார். கனடாவுக்குச் சென்று, இங்கிலாந்திலிருந்து வரக்கூடிய சிக்னலைப் பெற முடிகிறதா என்று முயன்று பார்த்தார்.
- ரேடியோ அலைகள் நேர்கோட்டில்தான் பரவும். உலகம் உருண்டை என்பதால் 200 மைலுக்கு மேல் தகவல் கடத்த முடியாது என்றனர். ஆனால் அந்தக் கூற்றைத் முயற்சியின் மூலம் முறியடித்தார். 3500 கி.மீ என்கிற உச்சபட்ச அளவுக்குத் தகவலைக் கடத்திக் காட்டினார். பூமியின் வளைவால் கம்பியில்லா அலைகள் பாதிக்கவில்லை என்கிற உண்மையை உலகுக்கு எடுத்துச் சொன்னார். 10 மடங்குக்கும் அதிகமான தூரத்துக்கு அனுப்பிக் காட்டினார்.
- 1909இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு மார்கோனிக்குக் கிடைத்தது. அதன் பிறகும் அவரது ஆய்வு ஓயவில்லை. இதே அடிப்படையில் ஒலியை அனுப்பும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். வாகன விபத்தில் வலது கண்ணை இழந்த நிலையில் ஆய்வுகளைத் தொடர்ந்தார். வெற்றி பெற்றார். இசைக் கலைஞர்களை வாசிக்க வைத்து லண்டன் முழுவதும் ஒலிபரப்பினார்.
- முதல் உலகப் போரில் கப்பலில் வானொலியைப் பயன்படுத்தி உதவி செய்தார். 1919இல் அவருடைய போர்ச் சேவையைப் பாராட்டி இத்தாலிய ராணுவம் பதக்கம் வழங்கியது.
- நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை என அழைக்கப்பட்டார். வானொலியோடு தொடர்புடைய கருவிகளையும் உருவாக்கினார். வானொலியின் வழித்தோன்றல்கள்தான் இன்று பல்வேறு வடிவங்களாக உருமாறி நம்மை மகிழ்விக்கின்றன.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 10 – 2024)