TNPSC Thervupettagam

மார்பகப் புற்றுநோய்க்கு ஒரே டோஸ் சிகிச்சை: விஞ்ஞானிகளின் ஒரு புதிய மைல்கல்

January 26 , 2025 2 days 15 0

மார்பகப் புற்றுநோய்க்கு ஒரே டோஸ் சிகிச்சை: விஞ்ஞானிகளின் ஒரு புதிய மைல்கல்

  • ஒரே டோஸில் மார்பகத்தில் ஏற்படும் சிறிய கட்டிகளை அகற்றவும், பெரிய கட்டிகளை கணிசமாக சுருக்கும் திறன்கொண்ட மருந்தினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படாது எனக் கூறப்படுகிறது.
  • மார்பகப் புற்றுநோய், பெண்களுக்கு வரும் புற்றுநோய்களில் ஒன்று. மார்பகத் திசுக்களில் ஏற்படும் மாற்றங்களால் இந்தப் புற்றுநோய் ஏற்படுகிறது. அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியோதெரபி உள்ளிட்டவை பொதுவாக மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
  • அறிவியல் விஞ்ஞானி பால் ஹர்ஜென்ரோதர் மற்றும் சக விஞ்ஞானிகள் குழுவினர், ஏற்கெனவே, புற்றுநோய் செல்களைக் கொல்லும் எர்சோ (ErSO) என்ற சிறிய மூலக்கூறினை கண்டறிந்தனர். ஆனால், இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில், 2022-ம் ஆண்டில், பல ஆய்வுகளை மேற்கொண்டு சிறு மூலக்கூறை கண்டறிந்துள்ளனர்.
  • அந்த ஆய்வின் இறுதியில், ErSO-TFPy என்று பெயரிடப்பட்ட மூலக்கூறு, அமெரிக்காவில் உள்ள அர்பானா-சாம்பெய்னில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. அது மார்பகப் புற்றுநோய் கட்டிக்கு எதிராக மிகச் சிறப்பாக செயல்படுவதையும் கண்டறிந்துள்ளனர். மேலும், “மார்பக புற்றுநோய் கட்டிகளை இதுபோல குறைப்பது மிகவும் அரிது. குறிப்பாக ஒரே ஒரு டோஸ் மூலம் சிறிய கட்டிகளை முற்றிலுமாக அகற்றுவது கவனிக்கத்தக்கது" என்று வேதியியல் பேராசிரியர் பால் ஹெர்கன்ரோதர் தெரிவித்துள்ளார்.

ஒரே டோஸ்:

  • ஒரே டோஸில் கொடுக்கப்படும் எர்சோ-டிஎஃப்பிஒய் (ErSO-TFPy) மருந்தானது, எலிகளுக்கு ஏற்படும் சிறிய மற்றும் பெரிய புற்றுநோய்க் கட்டிகளை குறைப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக மற்ற சிகிச்சைகளை போல அல்லாமல், இதில் பக்கவிளைவுகள் ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது. பொதுவாகவே மார்பகப் புற்றுநோய்க்கு அளிக்கப்படும் மற்ற மருந்துகள் நீண்ட நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டியவையாக உள்ளது. ஆனால், இது ஒரே முறை மட்டும் எடுத்துக் கொண்டால் போதுமானது. இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் தொடரும் பட்சத்தில், நோயாளிகளுக்கு எர்சோ-டிஎஃப்பிஒய் மருந்து செலுத்தப்படும்போது நல்ல தீர்வு கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

வழக்கமான மருத்துவ சிகிச்சை:

  • மார்பகப் புற்றுநோய்க்கு தற்போது அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியோதெரபி, ஹார்மோன் சிகிச்சை போன்றவை வழங்கப்படுகிறது. புற்றுநோய் செல்களை அழிக்க தற்போது ரேடியோதெரபி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், புற்றுநோய் செல்களை அழிக்கும் மருந்துகளும் நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. மனிதர்களில் இந்த மூலக்கூறு எவ்வாறு செயல்படும் என்பது இன்னும் தெரியவில்லை. பொதுவாகவே புற்றுநோய் சிகிச்சையில் தலைமுடி உதிர்தல், நரம்பு பிரச்சினைகள், தோல் பிரச்சினைகள் போன்றவை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்பு நோயாளிகளுக்கு புதிய உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்