TNPSC Thervupettagam

மாற வேண்டியதுதான்!

December 23 , 2020 1490 days 630 0
  • இதுவரை செயலியில் இயங்கும் வாடகை கார்களை நடத்தி வரும் "ஓலா' நிறுவனம் விரைவில் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத் தயாரிப்பில் இறங்க இருக்கிறது. அதற்காக அந்த நிறுவனம் தமிழகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது என்பது வரவேற்புக்குரியது.
  • சுமார் ரூ. 2,400 கோடி முதலீட்டில் "ஓலா' நிறுவனத்தின் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனம் ஒசூரில் நிறுவப்பட இருக்கிறது.
  • ஆண்டுதோறும் 20 லட்சம் மின் இருசக்கர வாகனங்களை அந்த நிறுவனம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. பெரும்பாலும் பெட்ரோலில் இயங்கும் என்ஜின்களுடன் கூடிய இருசக்கர வாகனங்களும் மூன்று சக்கர வாகனங்களும் காணப்படும் சந்தையில், மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத் தயாரிப்பில் துணிந்து "ஓலா' நிறுவனம் இறங்க இருப்பது புரட்சிகரமான முடிவு.
  • பூமிக்கு அடியில் இருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெய் அதிக காலம் நீடிக்காமல் வறண்டுவிடக்கூடும் என்கிற நிலையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு உலகம் தன்னை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டிய காலமும் கட்டாயமும் ஏற்பட்டிருப்பதன் வெளிப்பாடுதான் இந்த மாற்றம்.
  • 2030-க்குள் மின்வாகனத் துறை 803 பில்லியன் டாலர் (சுமார் ரூ.60 லட்சம் கோடி) மதிப்புள்ள துறையாக மாறும் என்று கணிப்புகள் கூறுகின்றன.
  • ஏற்கெனவே ஐரோப்பாவில் மின் வாகனங்களுக்கான வரவேற்பு அதிகரித்திருப்பதை தொழில்துறையினர் சுட்டிக் காட்டுகிறார்கள். கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் அனைத்துத் துறைகளும் பின்னடைவையும் வீழ்ச்சியையும் சந்தித்துக் கொண்டிருந்தபோது, ஐரோப்பாவில் மின் வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து, பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை சரிந்தது.
  • மின் வாகனங்களின் விலை ஏறத்தாழ ஏனைய வாகனங்களின் விலைக்கு நிகராகக் குறைந்து விட்டது அதற்கு முக்கியமான காரணம். இதற்காக ஐரோப்பாவிலுள்ள பல நாடுகள் மானியம் வழங்கவும் முற்பட்டிருக்கின்றன.
  • 2030-க்குள் பெட்ரோல், டீசல் வாகன விற்பனைக்கு முழுமையான தடை விதிப்பது என்று கடந்த மாதம் பிரிட்டன் முடிவெடுத்திருக்கிறது. பெட்ரோல், டீசல் வாகனப் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர 12 பில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.1.18 லட்சம் கோடி) ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறது.
  • வீடுகள், தெருக்கள், நெடுஞ்சாலைகள் முதலிய இடங்களில் மின் வாகனங்களுக்கான மின்னேற்ற மையங்களை (சார்ஜிங் பாயின்ட்) ஏற்படுத்த 1.3. பில்லியன் பவுண்ட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
  • மின் வாகனங்களை வாங்குவோருக்கு மானியம் வழங்குவதற்காக 58.2 கோடி பவுண்ட் (சுமார் ரூ.5,744 கோடி) ஒதுக்கியிருக்கிறது.
  • மின் வாகனங்களுக்கான பேட்டரிகளைத் தயாரிப்பதற்கும் அதுகுறித்த ஆராய்ச்சிக்கும் 50 கோடி பவுண்ட் (சுமார் ரூ.5,000 கோடி) ஒதுக்கப்பட்டிருக்கிறது.
  • தற்போதைய நிலையில் அமெரிக்காவில் இன்னும் மின் வாகனங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவு வரவேற்பைப் பெறவில்லை. இப்போதைக்கு மொத்த வாகன விற்பனையில் வெறும் 2% மட்டுமே அமெரிக்காவில் மின் வாகனங்கள் விற்பனையாகின்றன.
  • பிரிட்டனைத் தொடர்ந்து அமெரிக்காவும் விரைவிலேயே மின் வாகன உற்பத்தியிலும் பயன்பாட்டிலும் முனைப்புக் காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் 3,500 மட்டுமே இருந்தன. இப்போது மூன்று லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் காணப்படுகின்றன.
  • உலகிலுள்ள எல்லா முக்கியமான வாகனத் தயாரிப்பாளர்களும் பேட்டரிகளில் இயங்கும் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் முனைப்புக் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.
  • அரசாங்கங்களும் அதை ஊக்குவிப்பதுடன், மானியங்களும் வழங்கி மின்சார வாகனங்கள் மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு உதவுகின்றன. இந்தியாவும் இப்போது மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது.
  • நடப்பு நிதியாண்டில் இதுவரை 1.56 லட்சம் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள்தான் விற்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், பெட்ரோலில் இயங்கும் 30 லட்சம் கார், பேருந்து போன்ற வாகனங்களும், 1.7 கோடி இருசக்கர வாகனங்களும் விற்பனையாகி இருக்கின்றன.
  • போதுமான கட்டமைப்பு வசதி இல்லாதது இந்தியாவில் மின் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம்.
  • மின் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்க வேண்டுமானால், தற்போது ஆங்காங்கே பெட்ரோல் நிலையங்கள் காணப்படுவதுபோல மின்னேற்ற மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
  • கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போதே மின்சாரத்தில் இயங்கும் மின்வாகனங்களுக்காக அரசு சில சலுகைகளை வழங்கத் தொடங்கியிருக்கிறது.
  • மின்சார வாகனங்களுக்கான கடன், வட்டித் தொகைக்காக ரூ.1.5 லட்சம் வருமானவரியில் சலுகை வழங்கப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடு வரை குறைக்கப்பட்டிருக்கிறது.
  • சமீபத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக மேலும் பல சலுகைகளை அறிவித்திருக்கிறார்.
  • இந்தியாவில் விற்கும் வாகனங்களில் 80 % வாகனங்கள் இருசக்கர வாகனங்கள். "ஓலா' நிறுவனம் இதைக் கருத்தில் கொண்டுதான் மின்சாரத்தில் இயங்கும் இருசக்கர வாகனத் தயாரிப்பில் இறங்க முற்பட்டிருக்கிறது.
  • மின் வாகனங்களைத் தயாரித்து விடலாம். ஆனால், அந்த வாகனங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற வேண்டுமானால், அவை பெட்ரோல் வாகனங்களைவிட விலை குறைவாகவும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் மின்னேற்றம் செய்து கொள்ளும் வசதி இருப்பதும் அவசியம்!

நன்றி: தினமணி (23-12-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்