- எல்லாத் தளங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் தொழில் நுட்பத்தால் வந்த மாற்றங்கள் ஏராளம். தகவல் தொழில் நுட்பம், மாற்றத்தின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
- இன்றைக்குத் தொடா்ந்து மாற்றங்களைக் கண்டு வருபவை சந்தைச் செயல்பாடுகள். சந்தையின் வேகத்துக்கு அரசால் ஈடு கொடுக்க முடியவில்லை. அதன் விளைவுதான், சந்தை, அரசுக்குப் பெருமளவில் உதவிக்கரம் நீட்டி அரசுப்பணிகள் பலவற்றை அது எடுத்துக் கொண்டுள்ளது.
தொண்டு நிறுவனங்கள்
- இந்தச் சூழலில் சமூகத்தில் மக்களுடனும் அரசாங்கத்துடனும் தொடா்பில் இருக்கும் ஒரு அமைப்புதான் தொண்டு நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் பல்வேறு வகைப்படும். அவை அனைத்தையும் தொண்டு நிறுவனங்கள் என்றே குறிப்பிடலாம்.
- இந்தத் தொண்டு நிறுவனங்கள் இன்று மிகவும் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதாகவும், நிதிக்குப் போராடுவதாகவும் தெரிவிக்கின்றன. அதற்குக் காரணம் பல. அவற்றில் ஒன்று, அந்த நிறுவனங்கள் புதிய சூழலுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளவில்லை அல்லது அவற்றால் மாற்றிக் கொள்ள முடியவில்லை.
- உண்மையிலேயே தொண்டு நிறுவனங்கள் செயல்படுவதற்கு இன்றைய சூழலில் ஏராளமான வாய்ப்புக்கள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால் இந்த உலகமய பொருளாதார காலத்தில் இந்த நிறுவன செயல்பாட்டுக்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.
- அரசாங்கம், இதுவரை செய்து வந்த சமூக மேம்பாட்டுப் பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு விட்டது. இந்த நிலையில் சமூகச் செயல்பாடுகளை சந்தையும், சமூகமும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழல் வந்துவிட்டது.
- இந்தச் செயல்பாடுகளில் சந்தையும் பங்கு கொள்ள வேண்டிய சூழலை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இங்கு சந்தை என்று குறிப்பிடுவது தொழில் நிறுவனங்களை. சந்தை எப்படி பங்கு கொள்ளும் என்ற புரிதல் நம் தொண்டு நிறுவனங்களுக்கு வேண்டும்.
- தொண்டு நிறுவனங்கள் செய்கின்ற பணிகளுக்குப் போட்டியாக சந்தை உருவெடுக்காது; உருவெடுக்கவும் முடியாது. சந்தை, தொண்டு நிறுவனங்களுடன் இணைந்துதான் சேவை செய்ய முடியும். அதற்கு சந்தை எதிர்பார்ப்பது தொண்டு நிறுவனங்களிடம் ஒரு மாற்றத்தை. சந்தைகளின் பார்வை லாபத்தின் மீது இருப்பதால் பருவநிலை மாற்றத்தைப் பற்றியோ, சுற்றுச்சூழல் பற்றியோ, உலக வெப்பமயம் பற்றியோ சமூக ஏற்றத்தாழ்வுகள் பற்றியோ சிந்தித்துச் செயல்பட அவற்றுக்கு வாய்ப்பிருக்காது.
- எனவே, அது செய்ய வேண்டிய சமூகப் பணிகளை தொண்டு நிறுவனங்களை செய்திடப் பணித்து அதற்கான முதலீட்டைச் செய்வது என்ற கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.
- ஆனால், அந்த முதலீடு என்பது வெறும் தானமாக இல்லாமல் சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கான, சமூக வணிக நிறுவனத்திற்கான முதலீடா இருக்க வேண்டும்.
- செய்கின்ற மூலதனம் சமூகத்தில் மேம்பாட்டுத் தாக்கத்தை உருவாக்க வேண்டும். அதேபோல் அந்த மூலதனம் விரயம் ஆகி விடாமல் லாபமும் அதிலிருந்து கிடைக்க வேண்டும்.
- அப்படிப் புதிய சூழலுக்கான பணிகளைக் கண்டுபிடித்தால் தொண்டு நிறுவனங்களுக்கு சந்தை மூலதனம் செய்வதற்கு வாய்ப்புண்டு.
- இன்று அப்படி பல நிறுவனங்கள் தங்களை மாற்றிக் கொண்டு விவசாயத் துறையில், சுகாதாரத் துறையில், சிறு நிதிநிறுவன முதலீட்டுத் துறையில், மரபுசாரா எரிசக்தித் துறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு ‘நபார்டு’ வங்கி பெருமளவு உதவிபுரிந்து வருகிறது.
- எனவே, தொண்டு நிறுவனங்கள் சமூக வணிக நிறுவனங்களாக மாறவேண்டியது அவசியம்.
மாற வேண்டிய தருணம்
- இந்தியாவில் இருக்கும் மக்களின் சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகளின் தேவையைப் பூா்த்தி செய்ய ஒரு டிரில்யன் (ஒரு லட்சம் கோடி) வேண்டும் என ஐ.நா. கணித்துள்ளது.
- ஐ.நா லட்சியங்களை அடைவதைக் கருத்தில் வைத்து கணக்கிட்டுள்ளது. தேவைப்படும் அளவுக்கு அரசிடம் பணம் கிடையாது. ஆனால், அதை சந்தை செய்வதற்கான வாய்ப்பிருக்கிறது. ஆகையால்தான் சந்தையிலிருந்து நிதி திரட்டுவதற்கு சட்டங்களையும் கொள்கைகளையும் மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறது அரசு.
- தற்போது வெளிநாட்டிலிருந்து தொண்டு நிறுவனங்களுக்கு வந்து கொண்டிருந்த நிதியில் 40% குறைந்து விட்டது. இந்த கரோனா பாதிப்பிற்குப் பிறகு பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் காணாமல் போய்விடும் என்று கணிக்கின்றார்கள்.
- இவை எல்லாவற்றிற்கும் காரணம், தொண்டு நிறுவனங்கள் புதிய சூழலுக்கு ஏற்ப மாறாததுதான் என்று கூறுகின்றனா்.
- இதுவரை தொண்டு நிறுவனங்களுக்கு ‘கொடையாளா்கள்’ இருந்தனா். அவா்கள் நிதி தந்துவிட்டு, தொண்டு நிறுவனங்கள் செய்திருக்கின்ற பணிகளை மட்டுமே பார்த்து வந்தார்கள்.
- ஆனால், இன்று அதே கொடையாளா்கள் முதலீட்டாளா்களாக மாறி தொண்டு நிறுவனங்கள் செய்கின்ற பணிகளினால் விளைந்த சமூக மேம்பாட்டுத் தாக்கங்கள் என்னவென்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.
- அவா்கள் முதலீட்டாளா்களாக மாறிய காரணத்தால், தங்கள் முதலீட்டிற்கு என்ன லாபம் வரும் என்றுதான் கணக்கிட்டுச் செயல்படுவார்கள். எனவே புதிய சூழலுக்கான புது வடிவமும் புது செயலாக்க ஆற்றலும் தொண்டு நிறுவனங்களுக்கு வந்தாக வேண்டும்.
- அந்தச் சூழலை உருவாக்கத்தான் மத்திய அரசு புதிய சட்டங்களையும் கொள்கைகளையும் உருவாக்க முனைகிறது. இந்த முன்னெடுப்பை இந்திய அரசு மட்டும் செய்யவில்லை. உலகம் முழுவதும் நடைபெறும் செயல் இது.
- உலக நாடுகளில் பெற்ற அனுபவத்தை வைத்துத்தான் நம் அரசும் இந்த நிறுவனங்களை சட்ட திட்டங்களின் மூலம் மாற்றியமைக்க முயற்சி எடுத்துள்ளது.
- ஏனென்றால் தற்போது பெரும்பாலான தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தாங்கள் அடிப்படையாக பின்பற்ற வேண்டிய கூறுகளின்றி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
- நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, ஆளுகையில் மக்களாட்சிக் கூறுகள், பாலின சமத்துவம், வரையறுக்கப்பட்ட நிதிக் கட்டுப்பாடுகள், சுற்றுச்சூழல் பேணுதல், தரக்கட்டுப்பாட்டு வழிமுறைகள் போன்ற கூறுகளை பெரும்பாலான நிறுவனங்கள் பின்பற்றுவது கிடையாது.
- அத்துடன் நிறுவனச் செயல்பாட்டு சாதனை ஆவணங்கள் பராமரிப்பு, செயல்பாட்டாளா்களின் திறன் கூட்டல், ஆராய்ச்சி மனோபாவம் போன்றவை அற்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன பல தொண்டு நிறுவனங்கள்.
- இந்தச் சூழலில்தான் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை, மத்திய அரசு தொண்டு நிறுவனங்கள் தற்போது கிடைக்கின்ற நிதியைவிட கூடுதலாக பெற்றிட இன்னொரு கதவையும் திறந்து விட்டிருக்கிறது. அதுதான் ‘சமூகப் பங்கு சந்தையில் நிதி பெற்றுக்கொள்வது’.
- சமூகப் பங்கு சந்தையில் நிதிபெற வேண்டுமானால், சமூக மேம்பாட்டுப் பணிகளை வணிகமாகச் செய்யும் நிறுவனங்களாக தொண்டு நிறுவனங்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
- இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வல்லுநா் குழு உருவாக்கப்பட்டு, அதன் அறிக்கையும் தயாரிக்கப்பட்டு தொண்டு நிறுவனங்களின் கருத்துகள் பெறப்பட்டு வருகிறது.
- மத்திய அரசு தொண்டு நிறுவனங்கள் இந்த புதிய சூழலுக்கு மாறுவதற்கான சூழலை அமெரிக்கா, கனடா, பிரிட்டன், தாய்லாந்து நாடுகள் உருவாக்கியதுபோல உருவாக்க வேண்டும். அதற்கு தொண்டு நிறுவனங்களின் கருத்துகளையும் தொழில் நிறுவனங்களின் கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும்.
- மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களாக செயல்படும் அமைப்புகள் தங்களை மாற்றிக்கொள்வதில் சிரமங்கள் இருக்காது. அரசுடன் பணியாற்றிக் கொண்டும், அரசைக் கணித்துக் கொண்டும் இருக்கும் நிறுவனங்கள் தங்களை எளிதாக மாற்றிக் கொண்டு விடும்.
- ஆனால், சிறிய தொண்டு நிறுவனங்கள் இந்தச் சூழலில் நசுக்கப்படும் அபாயமும் உள்ளது. கிராமங்களில் பணிபுரிய சிறிய தொண்டு நிறுவனங்களும் தேவையாக இருக்கின்றன.
- இந்தியாவில் வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வுகள் எல்லையற்ற நிலையில் உள்ளன. இவ்வளவு வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் உள்ள நாட்டில் சமூகப் பணியாற்றி சமூகத்தை மேம்படுத்த சிறிய தொண்டு நிறுவனங்கள்தான் மிகவும் தேவை.
- இந்த நிறுவனங்களுக்கு புதிய சூழலுக்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்வது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
- இவா்களுக்கு சமூக வணிகம் அல்லது சமூகத்திற்கு பயனளிக்கும் வணிக நிறுவனத்தை எப்படி உருவாக்குவது, நடத்துவது என்பதைப் பற்றி பயிற்சியளிக்கப்பட வேண்டும்.
- அதற்கான சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அடுத்து சமூக பங்கு சந்தையிலிருந்து எப்படி நிதி பெறுவது என்பதையும் கற்றுத் தர வேண்டும்.
- இன்றைய சூழலில் பல போலி நிறுவனங்கள் செயல்பட முடியாமல் மறைந்து போயின. சிறந்த, சிறிய நிறுவனங்கள் மக்கள் மத்தியில் பணி செய்து கொண்டு வருகின்றன.
- இன்றைய கரோனா காலத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்களும் உண்டு. அந்த நிறுவனங்கள் இன்று நிதியற்று நிற்கின்றன.
- அந்த நிறுவனங்களின் பணியாளா்கள் புதிய சூழலுக்கு ஏற்ப பணியாற்ற இயலாமல் இருக்கின்றார்கள். அரசு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சரி செய்வது போல, சந்தையையும் முறைப்படுத்தி புதிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.
- அப்படி ஏற்படுத்தித் தந்தால் சந்தையும் அரசும் செய்ய முடியாதவற்றையெல்லாம் இந்தத் தொண்டு நிறுவனங்கள் செய்து சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை.
நன்றி: தினமணி (25-08-2020)