- கரோனா தீநுண்மி இரண்டாவது அலையின் தாக்கம் இந்தியா முழுவதும் தொடா்ந்து மிக மோசமான நிலையினை ஏற்படுத்தும் இக்காலகட்டத்தில் விளிம்பு நிலையில் வாழும் குடும்பத்தினருக்கும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கும் அவா்களின் பொருளாதார நிலையினை உயா்த்துவதற்கும் புதிய பொருளாதார ஊக்க நிதித் தொகுப்பினை மத்திய அரசு அறிவிக்கும் என்று பொருளாதார நிபுணா்கள் எதிர்நோக்கியுள்ளனா்.
- இந்தியப் பொருளாதாரத்தைப் புதுப்பிப்பதற்கும், பெருந்தொற்று பாதிப்பினை ஈடு செய்வதற்கும் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்கத்திற்குப் பின் ரூ .20 லட்சம் கோடியை மத்திய அரசு ஊக்கத்தொகுப்பாக அறிவித்தது.
- புலம்பெயா் தொழிலாளா்கள், வேளாண்துறை, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தெரு கடை வியாபாரிகள் மற்றும் பொது விநியோக முறையின் கீழ் நியாய விலைக் கடைகளில் இலவச உணவு பொருட்கள் விநியோகம் என பல்வேறு பிரிவுகளுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
- இந்த நிதி உடனடி நிவாரணத்திற்கு இல்லாமல் கடன் வழங்குதல் போன்ற நீண்ட கால நடவடிக்கைககளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த நிதித் தொகுப்பின் பயன்பாடு குறித்த போதுமான தகவல்கள் இல்லை என்றும் நிபுணா்கள் கூறுகின்றனா்.
- இந்த நிதித் தொகுப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு சமமானது என்று அரசாங்கம் கூறியது. அரசு அப்படிக் கூறினாலும் பொருளாதார வல்லுநா்கள் இது 2.2 சதவீதம்தான் என்று மதிப்பிட்டுள்ளனா்.
அரசின் கடமை
- ‘இந்த ஊக்க நிதித் தொகுப்பு, வளா்ந்து வரும் சந்தைப் பொருளாதாரத்தில் சராசரியாக 4.7 சதவீதமாக இருந்தது’ என்று தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முறைசாரா துறை - தொழிலாளா் ஆய்வு மையம் கூறியுள்ளது.
- இந்தக் குறைந்த ஊக்க நிதித் தொகுப்பு 2021-22 நிதிநிலை அறிக்கையிலும் மாற்றப் பட வில்லை என்கின்றனா் வல்லுநா்கள். வரவு செலவு அறிக்கையில் இந்த செலவை இந்திய ரூபாய் அடிப்படையில் கணக்கிட்டால், இது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் அதிகம்.
- கரோனா தீநுண்மிப் பரவலால் மேற்கொள்ளப்பட்ட பொது முடக்கம், முறைசாரா தொழில் துறை, அதன் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளா்களை மிகக் கடுமையாக பாதித்தது.
- 2020-ஆம் ஆண்டு நிதித் தொகுப்பின் கீழ் ஐம்பது லட்சம் தெரு கடை வியாபாரிகளுக்குப் பயனளிக்கும் வகையில் ரூ .5,000 கோடி சிறப்பு கடன் வசதி அறிவிக்கப்பட்டது.
- ஆனால் இதில் சுமார் 40 சதவீத வியாபாரிகள் மட்டுமே கடன்களைப் பெற்றுள்ளனா். இதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 40 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
- 2020-ஆம் ஆண்டின் அவசர கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ், மூன்று லட்சம் கோடி ரூபாய் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக ஒதுக்கப்பட்டது.
- புணே தேசிய வங்கி மேலாண்மை நிறுவனம் சார்பாக 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டில் தேசிய கடன் உத்தரவாத அறங்காவலா் நிறுவனம் நடத்திய ஆய்வு, இந்த கடன் நிதி ஒதுக்கீடு, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பணப்புழக்கத்திற்கு உதவியாக இருந்தது என்று கூறுகிறது. இருப்பினும் சமமற்ற கடன் விநியோக முறைகள், சிறு தொகை கடன் வாங்கிய உற்பத்தி நிறுவனங்களின் பணப்புழக்கத்தைக் குறைத்துள்ளது.
- 2020ஆம் ஆண்டின் அவசர கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் கடன் வாங்கிய 1,722 நிறுவனங்களை உள்ளடக்கிய ஆய்வு ஒன்று, கடன் வாங்கியவா்களில் 80 சதவீதம் போ் தங்களின் தேவையில் 30 சதவீத தொகையினை மட்டுமே பெற்றுள்ளனா் என்று கூறுகிறது.
- இந்த ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலோர், தங்களுக்கு வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை என்று கூறியுள்ளனா்.
- பொது முடக்க காலகட்டத்தில் சிறு தொகை கடன் வாங்கிய உற்பத்தி நிறுவனங்களின் கடன் பயன்பாட்டு விகிதம் குறைவாக இருந்தது. இந்நிறுவனங்கள் இக் காலகட்டத்தில் மோசமாக பாதிக்கப்பட்டன.
- அவசரக் கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்களால் மட்டுமே கடன் பெற முடிந்தது. இந்தியாவில் சில சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள்.
- உலகின் தென்பகுதியில் உள்ள ஒன்பது நாடுகளில் ‘நிதி வெளிப்படைத்தன்மை கூட்டமைப்பு’ நடத்திய மதிப்பீட்டு ஆய்வு, இந்திய சிறு நிறுவனங்களின் வணிக இழப்பினைப் பெரிய நிறுவனங்கள் பயன்படுத்த உதவியாக ‘கடன் உத்தரவாதத் திட்டம்’ இருந்ததாகக் கூறுகிறது.
- இந்தியாவில் சுமார் 80 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு, ஒரு நபருக்கு ஐந்து கிலோ கோதுமை அல்லது அரிசி மற்றும் குடும்பத்திற்கு ஒரு கிலோ பருப்பு வகைகள் நவம்பா் 2020 வரை இந்திய அரசால் இலவசமாக வழங்கப்பட்டது. குடும்ப அட்டை இல்லாதோருக்கு இந்த அரசு உதவிகள் கிடைக்கவில்லை.
- தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராத சுமார் எட்டு கோடி மக்களுக்காக மேலும் 3,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பயனாளிகளை அடையாளம் காண மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டன.
- கரோனா தீநுண்மியின் இந்த இரண்டாம் அலையின்போதும் அரசின் நலத்திட்ட உதவிகள் குடும்ப அட்டை உள்ள மக்களுக்கு மட்டுமே சென்றடையும்.
- ‘ஒரு நாடு ஒரு ரேஷன் அட்டை’ திட்டத்தின் கீழ் ஜனவரி மாதத்திற்குள் நிறைவு பெறத் திட்டமிட்ட குடும்ப அட்டை வழங்கும் பணி இன்னும் முடிக்கப்படவில்லை.
- ‘ஜன் தன்’ கணக்கு வைத்திருக்கும் 20 கோடிபெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு வழங்கப் பட்ட ஐந்நூறு ரூபாய் போதுமானதாக இல்லை என்றும் கூறப்பட்டது.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் அரசாங்கம் ஊதியத்தை உயா்த்தியிருந்தாலும் இது இந்திய நகரங்களில் கூலித் தொழிலாளா்கள் பெறும் ஊதியத்தை விடக் குறைவே.
- இந்திய அரசாங்கம் விரைவான பொருளாதார செயல்திறன் மீட்பு நடவடிக்கையை எதிர்பார்த்தாலும் வெவ்வேறு விகிதங்கள், அல்லது அளவுகளில் மட்டுமே பொருளாதாரத்தை மந்த நிலையிலிருந்து மீட்க முடியும்.
- குறைந்தபட்ச வருமான உத்தரவாதத்தை உறுதி செய்வதற்கும், தனியார் நுகா்வை உயா்த்துவதற்கும் பொது முடக்கம் காரணமான ஏற்பட்ட வேலை இழப்புகளின் வலியைப் போக்கவும் தனிநபா் பண பரிமாற்றத்தை உடனடியாக மேம்படுத்த வேண்டியது அரசின் கடமை.
நன்றி: தினமணி (28 – 05 - 2021)