TNPSC Thervupettagam

மாற வேண்டும் மோதல் போக்கு!

August 30 , 2024 89 days 100 0

மாற வேண்டும் மோதல் போக்கு!

  • பாரத நாட்டின் அரசமைப்புச் சட்டம் வலுவான மத்திய அரசை நிறுவி உள்ளது. நிர்வாகத் துறைக்கு நாட்டின் குடியரசுத் தலைவர், நீதித் துறைக்கு உச்சநீதிமன்றம், சட்டம் இயற்ற நாடாளுமன்றம் ஆகியவை தலைமை வகிக்கும் அமைப்புகள் ஆகும்.
  • 1947-இல் நாம் சுதந்திரம் பெற்ற பிறகு, மவுண்ட்பேட்டன் பிரபுவை முதல் கவர்னர் ஜெனரலாக கொண்டு பண்டித ஜவாஹர்லால் நேரு தலைமையில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் வகையில் இடைக்கால அரசு நிறுவப்பட்டது. நமக்கான அரசமைப்புச் சட்டத்தை இந்திய அரசியல் நிர்ணய சபை மூலம் நாமே உருவாக்கி 1950 ஜனவரி 26-இல் குடியரசாக உருவானோம்.
  • 1952-ஆம் ஆண்டு, முதல் பொது தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மத்தியிலும், மாநிலத்திலும், ஏன் உள்ளாட்சி அமைப்புகளிலும்கூட காங்கிரஸ் கட்சியே பெரும்பாலும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதன் காரணமாக மத்திய அரசின் கொள்கைகளும் மாநில அரசின் கொள்கைகளும் ஒத்துப் போயின.
  • 1952 முதல் 1967 வரை இதே நிலை நீடித்தது. மத்திய அரசு நிர்வாகத்துக்கும், மாநில அரசு நிர்வாகத்துக்கும் இடையில் பெரிய அளவிலான மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. மத்திய-மாநில அரசுகள் இடையே தோன்றும் கருத்து வேறுபாடுகள், முரண்பாடுகள் ஒரே கட்சி ஆட்சி நடைபெற்ற காரணத்தினால் பேச்சுவார்த்தை மூலமாகவே சுமுகமாகத் தீர்க்கப்பட்டன. ஏறத்தாழ மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளுங்கட்சியாக காங்கிரஸ் கட்சியே இருந்த காரணத்தினால் மத்திய- மாநில அரசுகளுக்கு இடையே சுமுகமான உறவே நிலவி வந்தது.
  • 1957-இல் கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் அல்லாத ஒரு ஆட்சி முதன்முதலாக கேரளத்தில் உருவானது. 1967-ல் தமிழகம் உள்பட ஏழு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
  • பண்டித ஜவாஹர்லால் நேரு பிரதமராக இருந்த காலத்தில் திட்ட கமிஷன், தேசிய வளர்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் மூலம் மாநிலங்களின் மீது மத்திய அரசு ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்துள்ள மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டன. மேலும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மற்றும் காங்கிரஸ் அல்லாத கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் அரசுகளை அரசியல் சாசனத்தின் 356-ஆவது பிரிவைப் பயன்படுத்தி அடுத்தடுத்து வந்த பிரதமர்கள் கலைத்தனர்.
  • முதன்முதலாக 1959-இல் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு கலைக்கப்பட்டது. இதே போன்று ராஜஸ்தான் மாநிலத்திலும் காங்கிரஸ் அல்லாத கூட்டணிக் கட்சி ஆட்சி அமைப்பதைத் தடுப்பதற்காக ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையை முடக்கி வைத்தனர். ஜவாஹர்லால் நேருவுக்குப் பிறகு லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோர் பிரதமர்களாக இருந்த காலகட்டங்களிலும் மத்தியில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டன. மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.
  • 1967 முதல் 1977 வரை தேர்தல்களில், மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் தோன்ற ஆரம்பித்தது. தமிழகத்தில் திமுக, பஞ்சாபில் அகாலி தளம், காஷ்மீரில் ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி, மராட்டியத்தில் சிவசேனை, கேரளத்திலும், வங்காளத்திலும் கம்யூனிஸ்டுகள் வலிமையடைந்தன. நதி நீர்ப் பங்கீடு, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது ஏற்பட்ட எல்லை சிக்கல்கள், மத்திய அரசின் மூலம் செய்யப்படும் நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு, தேசிய வளர்ச்சித் திட்டங்கள், நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், கல்விக் கொள்கை, வரி வருவாயைப் பகிர்ந்து கொள்ளுதல், ஆளுநர் நியமனம், துணைவேந்தர்கள் நியமனம்...இப்படி பல்வேறு விஷயங்களில் மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் கருத்து வேறுபாடுகள் தோன்ற ஆரம்பித்தன.
  • மத்தியில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நெருக்கடி நிலை காலகட்டத்தில் அரசியல் சாசன திருத்தம் 42 மூலம், மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்டது. காங்கிரஸ் அல்லாத ஒன்பது மாநிலங்களின் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. நாட்டின் ஜனநாயக உரிமைகள் குறைந்தன. பிரதமர் அலுவலகத்துக்கு பெரும் அதிகாரங்கள் உருவாகின. இந்திய ஜனநாயகக் குடியரசு என்பது இந்திய சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு என மாற்றப்பட்டது.
  • 1977 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு மத்தியில் ஜனதா கட்சி அரசு அமைந்தது. அவர்களும் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் 42-ஆவது திருத்தத்தில் சில மாற்றங்களைச் செய்தனர். ஆனால், மாநில அரசுகளைக் கலைக்கும் விஷயத்தில் இந்திரா காந்தியின் பாணியையே பின்பற்றினர்.
  • காங்கிரஸ் கட்சி ஆளும் ஒன்பது மாநில அரசுகளை அரசியல் சாசனப் பிரிவு 356-ஐ பயன்படுத்தி கலைத்தனர். இதற்கு பிறகு ஆளுநர் நியமனம், மத்திய அரசு நிதி ஒதுக்குதல் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆகியவற்றில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு பாகுபாடு காட்டப்பட்டது. நாட்டின் அரசியல் சூழல் மாறத் தொடங்கியது. மாநில கட்சிகளின் ஆதிக்கம் ஏற்பட்டது.
  • மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசு அமைந்தபோது மாநில கட்சிகள் அதில் பெரும் பங்கு வகித்தன. மத்திய-மாநில அரசுகளின் உறவுகளை சீர் செய்வதற்காக நீதிபதி சர்க்காரியா குழு அமைக்கப்பட்டது. முன்னதாக, 1966-இல் மொரார்ஜி தேசாய் தலைமையில் நிர்வாக சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டு, பின்னர் அனுமந்தய்யா தலைமையில் பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 1971-இல் திமுக ஆளும் தமிழக அரசினால் அமைக்கப்பட்ட ராஜமன்னார் குழு தனது பரிந்துரைகளை வழங்கியது. நீதியரசர் மதன்மோகன் புன்ச்சி குழு 2010-இல் அறிக்கை வழங்கியது.
  • மாநில அரசுகளைக் கலைக்கும் அதிகாரங்கள் குறித்து 1994-இல் கர்நாடகத்தில் முதல்வராக பதவி வகித்து பின் டிஸ்மிஸ் செய்யப்பட்ட காங்கிரûஸ சேர்ந்த எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு மத்திய-மாநில அரசு உறவுகளுக்கு நல்ல வழிகாட்டுதலாக அமைந்தது.
  • 2000-ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான அரசு நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் அரசமைப்பு மதிப்பாய்வு தேசிய குழு அமைத்து தனது அறிக்கைகளை வழங்கியது. இந்த அறிக்கைகள் எல்லாம் மத்திய-மாநில அரசுகளுக்கிடையே சுமுக உறவு ஏற்பட உரிய பரிந்துரைகளை வழங்கின. இந்தக் குழுக்கள் வழங்கிய பரிந்துரைகள் அடிப்படையில் நீதிமன்ற தீர்ப்புகளும் வழங்கப்பட்டன.
  • தற்போது மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசும், தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் உள்ளன. சித்தாந்தம், கொள்கை அடிப்படையில் மாறுபட்ட கருத்துகளைக் கொண்ட அரசுகளாக இருப்பதால் தமிழகத்தில் மத்திய-மாநில அரசுகளின் உறவு சுமுகமாக இல்லை. தமிழக ஆளுநருடன் மோதல் போக்கு உள்ளது. மத்திய அரசால் நாடு முழுக்க அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தவில்லை.
  • தமிழக அரசு தனக்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ளது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு பத்து சதவீதம் தமிழகத்தில் அமல்படுத்தப்படவில்லை. நாடு முழுவதும் உள்ள நவோதயா பள்ளிக்கூடங்கள் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வர முடியவில்லை. மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு செயல்படுத்தும் பல திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த முடியவில்லை. மத்திய அரசு கொண்டுவருகிற குடியுரிமைச் சட்டம், அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கம், விவசாயிகளுக்கான சட்டங்கள் ஆகியவற்றை தமிழக அரசு எதிர்க்கிறது.
  • இதன் காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல் தமிழகத்துக்குத் தேவையான திட்டங்களைப் பெற முடியும். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் அரசு இந்த அணுகுமுறையைக் கடைப்பிடித்தது. முன்னாள் முதல்வர்கள் சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டோர் கொள்கை அடிப்படையில் மத்திய அரசுடன் எதிர்ப்பு நிலையில் இருந்தாலும், மாநிலத்த்துக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுடன் மோதல் போக்கை தொடர்ந்து கடைப்பிடித்ததில்லை. மோதல் ஏற்படும்போது பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டனர்.
  • தற்போதைய தெலங்கானா மாநில காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி, தான் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கவில்லை என்றும் கடந்த கால கே.சந்திரசேகர் ராவ் அரசு மோதல் போக்கை கடைப்பிடித்ததால் தெலங்கானா மாநிலம் பாதிக்கப்பட்டது என்றும் குறிப்பிடுகிறார். இதே போன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து நல்ல பலன்களை மாநிலத்துக்கு ஏற்படுத்தியுள்ளார்.
  • முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக நினைவு நாணய வெளியீட்டு விழாவை மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து நடத்தியது நல்ல திருப்பமாகும். அரசியல் ரீதியாக எதிரெதிர் நிலைப்பாட்டில் இருந்தாலும்கூட, இனிமேலாவது மோதல் போக்கு அணுகுமுறை மாறி தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

நன்றி: தினமணி (30 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்