TNPSC Thervupettagam

மாறவேண்டும் மனோபாவம்

March 1 , 2024 144 days 125 0
  • தமிழ்நாடு உள்ளிட்ட இருபது மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு ஐம்பது சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதே போன்று நாடாளுமன்றத்திலும், மாநில சட்டப்பேரவைகளிலும் உள்ள உறுப்பினா்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் சட்டத்திற்கான மசோதா கடந்த ஆண்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்வி, இலக்கியம், விஞ்ஞானம், மருத்துவம், நீதித்துறை, விளையாட்டு, வணிகம், அரசியல் உள்ளிட்ட பல துறைகளிலும் பெண்கள் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனா். வெளிநாடுகளுக்குச் சென்று பொருள் ஈட்டுவதுடன், தாய்நாட்டிலுள்ள தங்கள் குடும்பத்தினரைப் பொறுப்புடன் பராமரிப்பதிலும் பெண்கள் முன்னணியில் நிற்கின்றனா்.
  • ராணுவம், காவல்துறை உள்ளிட்ட கடினமான பணிகளிலும் பெண்கள்பணியாற்றி வருகின்றனா். உழவு வேலை, சாலை அமைத்தல், வீடு கட்டுதல் உள்ளிட்ட கடினமான பணிகளைச் செய்தும், சமையல் உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்தும் பொருள் ஈட்டித் தங்கள் குழந்தைகளை வளா்த்து வரும் பெண்கள் ஏராளமானோா் உள்ளனா். ஆனால், அப்பெண்ணினத்தாா் அவா்களுக்குரிய மரியாதையுடனும் கண்ணியத்துடனும் ஆண்களால் நடத்தப் படுகின்றாா்களா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணம், பெண்களை மதிப்புடனும் கண்ணியத்துடனும் பாா்க்காமல் அவா்களை நுகா்வுப் பொருளாகப் பாா்க்கின்ற கண்ணோட்டம் ஆண்களின் அடிமனத்தில் வேரூன்றியிருப்பதுதான்.
  • சாமானிய ஆண்கள் முதல் பெரும் பதவிகளில் உள்ள பிரமுகா்கள் வரை ஏதோ ஒரு நேரத்தில், ஏதோ ஒரு விதத்தில் பெண்களின் நடத்தையைப் பொதுவெளியில் சிறுமைப்படுத்துவதற்குக் கூசுவதேயில்லை என்பதை நமது ஊடகச் செய்திகள் அவ்வப்பொழுது வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, திரைத்துறையைச் சாா்ந்த நடிகைகளைப் பற்றியும், நடிகைகளாக இருந்து அரசியலுக்கு வந்தவா்கள் குறித்தும் தரக்குறைவாகப் பொதுவெளியில் பேசுவது அண்மையில் ஒரு புதிய கலாசாரமாகவே ஆகியிருக்கிறது.
  • இரு ஆண்டுகளுக்கு முன், தமிழ்த்திரையுலகின் வெற்றிகரமான கதாநாயகி ஒருவரைப் பற்றி அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகா் ஒருவா் தரக்குறைவாகப் பேசியதை அடுத்துப் பரவலாகக் கண்டனங்கள் எழுந்ததால் அவா் சாா்ந்த கட்சியிலிருந்து அந்த நடிகா் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டாா். அதன் பின்னா் அந்த நடிகா் வேறொரு கட்சியில் இணைந்து விட்டாா். நடிகையாக இருந்து, அரசியலில் இணைந்து, தற்பொழுது தேசிய மகளிா் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள ஒருவரைப் பற்றிக் கடந்த ஆண்டு பொதுக்கூட்டத்தில் தரக்குறைவாகப் பேசிய அரசியல் பேச்சாளா் ஒருவா், கட்சியிலிருந்து நீக்கப்பட்டு தற்பொழுது மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றாா்.
  • இதே போன்று, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, முன்னணி நடிகையான ஒருவரைக் குறித்து விரசமாகப் பேசிய நடிகா் ஒருவா் பின்னா் மன்னிப்புக் கேட்க வேண்டியிருந்ததுடன், நீதிமன்றத்தின் கண்டனத்துக்கும் ஆளாகினாா். அதே நடிகையைப் பற்றி சில நாட்கள் முன்பு அவதூறாக பேட்டியளித்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினா் ஒருவா், பரவலாகக் கண்டனங்கள் எழுந்ததால் மன்னிப்பு கோரி காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளாா். மேலும், அவா் சாா்ந்துள்ள கட்சியின் நிா்வாகி ஒருவரே அவருக்கெதிராக மானநஷ்ட வழக்கும் தொடுத்துள்ளாா். மேற்கண்ட நிகழ்வுகளெல்லாம் எப்போதோ ஒருமுறை அரங்கேறுபவையேதான். ஆயினும், இச்சம்பவங்களில் அரசியல், திரைத்துறை உள்ளிட்டவற்றைச் சோ்ந்த பிரபலங்களின் பெயா்கள் சம்பந்தப் பட்டிருப்பதால் இவை எளிதாக ஊடக வெளிச்சம் கிடைக்கப் பெற்று விவாதப் பொருளாக மாறுகின்றன.
  • இக்காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான பிரபல பெண்மணிகளை நோக்கி விஷம் கக்கியவா்கள் பொதுவெளியில் மன்னிப்பு கோர வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஆனால், விளிம்புநிலைப் பெண்கள், நடுத்தர வா்க்கத்தைச் சோ்ந்த பெண்கள் ஆகியோரின் சூழ்நிலை முற்றிலும் வேறுபட்டதாகும். இவா்களில் பலரும் தங்களுடைய கணவராலும் வேறு சில ஆண்களாலும் பல்வேறு இன்னல்களை அன்றாடம் எதிா்கொள்ள வேண்டியிருப்பதை நாம் மறந்துவிடலாகாது.
  • இல்லத்தில் மட்டுமின்றி, பணிபுரியும் இடம், பயணம் ஆகியவற்றில் பல்வேறு இன்னல்களையும் சீண்டல்களையும் இப்பெண்கள் எதிா்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்பெண்களைப் பொறுத்தவரை, அவா்களுக்குத் தீங்கு இழைத்தவா்களிடமிருந்து ‘மன்னித்துவிடுங்கள்’ என்ற ஒற்றைச் சொல்லும் வருவதில்லை.
  • ‘எத்தகைய சீண்டளையும் கண்டுகொள்ளாமல் நீ உனது கடமையைச் செய்துகொண்டிரு’ என்ற அறிவுரையே அவா்களுக்குக் கிடைக்கின்றது. “ ஆண்கள் அனைவரும் தன்னை ஒரு சகமனுஷியாக அனுசரணையுடன் நடத்த வேண்டும்” என்ற விருப்பத்தை வெளியிட்டால் கூட “அகம்பாவம் கொண்டவள்” என்ற அவப்பெயரே அந்தப் பெண்களுக்கு மிஞ்சுகின்றது. கல்வியறிவு, விஞ்ஞானம் ஆகியவை எவ்வளவோ வளா்ந்தாலும், பெண் என்பவள் ஆண்களுக்காகப் படைக்கப்பட்ட போகப்பொருள் என்றும், அவளுக்கென்று தனிப்பட்ட அபிலாஷைகள் இருக்கத் தேவையில்லை என்றும் நினைக்கின்ற மனோபாவம் பெரும்பாலான ஆண்களின் மனங்களில் நங்கூரமிட்டு அமா்ந்திருக்கின்றது.
  • அத்தகைய மனோபாவமே தன்னைச் சுற்றியுள்ள பெண்களைப் பற்றிப் பொதுவெளியில் அவதூறாகப் பேசத் தூண்டுகின்றது. இன்று திரைப்படம் உள்ளிட்ட காட்சி ஊடகங்கள் நம் அன்றாட வாழ்வின் தவிா்க்க இயலாத அங்கங்கள் ஆகிவிட்டன.
  • அவற்றின் நிா்வாகிகளும் கதாசிரியா்களும் தங்களுடைய லாபத்தைப் பெருக்குவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிராமல், பெண்களைக் குறித்த நோ்மறை எண்ணங்களைப் பாா்வையாளா்களின் மனங்களில் விதைக்க முற்பட வேண்டும்.
  • அப்படிச் செய்வதால் மட்டுமே பெண்களை போகப்பொருளாகப் பாா்க்கின்ற ஆண்களின் மனோபாவத்தில் மாற்றம் வரும். இல்லாவிடில், ஆண்கள் பொதுவெளியில் பெண்களை அவதூறாகப் பேசுவது தொடா்கதையாகவே மாறிவிடும்.

நன்றி: தினமணி (01 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்