TNPSC Thervupettagam

மாறி வரும் யானைகளின் போக்கும் பலியாகும் பழங்குடிகளும்

July 6 , 2024 144 days 150 0
  • சமீபத்தில் நான் நன்கு பழகிய பழங்குடிகள் இருவர் யானைத் தாக்குதலுக்குப் பலியாகிவிட்டார்கள். ஒருவர் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கன். இன்னொருவர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சன்னன்.
  • கூட்டுறவுச் சங்கத்திற்கு வந்துவிட்டு முக்கியச் சாலையிலிருந்து இறங்கி ஒரு மதிய நேரத்தில் ஆணைகட்டிக்கு அருகில் உள்ள பதிக்கு, ரங்கன் நடந்துபோய்க்கொண்டிருந்தார். பவானிஆற்றில் நீர் அருந்திவிட்டு காடு திரும்பிக் கொண்டிருந்திருக்கிறது ஓர் ஒற்றை யானை.
  • யானையைக் கவனிக்காத ரங்கன் அருகில் சென்றுவிட்டார். சட்டென யானையின் இருப்பை உணர்ந்து, தப்பிக்க முயன்றார். காலில் ஏற்கெனவே பிரச்சினையிருந்த ரங்கனால் ஓடமுடியவில்லை. எட்டிப்பிடித்து தும்பிக்கையால் அடித்ததில், அருகில் உள்ள புதரில் போய் ரங்கன் விழுந்துவிட்டார். இடுப்பிலும் காலிலும் அவருக்குப் பலத்த அடி. அதனால் நகர முடியவில்லை. சட்டையிலிருந்த போனை எடுத்து மகள் பகவதிக்குத் தகவலைச் சொல்லிவிட்டு உயிர் துறந்தார்.
  • பிதுர்காட்டிலிருந்து பென்னைக்குப் போகும்காட்டுவழி அது. கடைக்குப் போய்விட்டு சென்னன் திரும்பி வந்துகொண்டிருந் திருக்கிறார். வரும் வழியில் பள்ளத்தில் நான்கைந்து யானைகளை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. அந்த யானைகளில் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னேறிவந்து சென்னனைத் தாக்கியது. சென்னன் படுகாயமடைந்தார். மருத்துவமனைக்குக்கொண்டுபோகும் வழியில் அவர் இறந்து போனார்.
  • இந்த இருவரும் ஊரின் பிரச்சினை களுக்காக அரசு அலுவலகங்களின் கதவுகளைச்சதா தட்டிக்கொண்டிருந்தவர்கள். பெரிதும் விலைமதிக்க முடியாத உயிர்கள்.

தேவை புரிதல் மாற்றம்:

  • இந்த இரண்டு சம்பவங்களும் அடர்ந்த வன எல்லைக்குள் நடந்தவை, முன்பெல்லாம் இத்தகைய தாக்குதல்கள் குறைவாகவே நிகழ்ந்தன அல்லது நிகழவே இல்லை என்றுகூடச் சொல்லலாம். ஆனால், தற்போது இவை அதிகரித்திருக்கின்றன
  • யானைகளுக்கான தீவனம் இயற்கையாக இருந்த இடத்தை வேறு பயிர்கள் ஆக்கிரமித்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல் அவை கடந்துசெல்லும் பகுதிகளைத் தனியார் ஆள்கள் வேலிகளால் அடைத்திருக்கிறார்கள்
  • காடுகளுக்குள் வாழும் மனிதர்களை எதிரியாகப் பாவிக்கும் போக்கு யானைகளிடம் இப்போது தென்படுகிறது. எங்கோ நெருப்பால், கற்களால் தாக்கப்படும் வலிகளை, கோபத்தைப் பழங்குடிகளின் மேல்தான் அது காட்டவேண்டியிருக்கிறது.
  • பழங்குடிகளின் பாரம்பரியமான தற்காப்பு முறைகள் யானைகளைத் தற்போது கட்டுப்படுத்துவதில்லை. பழங்குடிகளின் விலங்கு அறிதிறன்களில் பழைய வீரியமும் இல்லை. அவற்றில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
  • சமவெளி ஆள்கள் பட்டாசு வெடிப்பது, அதிக டெசிபல் கொண்ட மத்தளங்களைக் கொட்டுவது, சைரன்களை அலறவிடுவது ஆகியவை யானைகளுக்கு எதிராகத் தற்காலிகமாகத் தீர்வுகளைத் தரலாம். ஆனால், அவை பிரச்சினைகளைத் தள்ளிப்போடுவது மட்டுமல்லாமல், யானைகளை இன்னும் மூர்க்கமானதாக மாற்றிவிடுகின்றன.
  • இருக்கும் உச்சபட்சமான முறைகளுக்குப் பழகிய பின், உங்களால் வேறு எந்த முறைகளையும் அவற்றிற்கு எதிராகக் கையாள முடியாதவாறு, உங்களை முடக்கிவிடுகிறது.

புலிகளைச் சமாளித்த விதம்:

  • உள்ளூர் நுட்பங்களை அறிவியலோடு இணைத்துப் புதிய புதிய தற்காப்பு முறைகளைக் கண்டறிய வேண்டியது மிகவும் அவசியமானது, அவசரமானது. மேற்கு வங்காளத்தின் கங்கை பாசனப் பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தை இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
  • புலிகள் பெரும்பாலும் இரையைப் பின்தொடர்ந்துதான் தாக்குகின்றன என்பதை கங்கை பாசனப் பகுதியில் வாழும் மக்கள் அறிந்துகொண்டார்கள். இதை அறிந்தபின் தலையின் பின்புறத்தில் மனிதத்தலை உருவிலான முகமூடிகளை அணிந்துகொண்டு மீன்பிடிக்கவும் தேன் எடுக்கவும் விறகுக்காகவும் அருகில் உள்ள காடுகளில் உலவத் தொடங்கினார்கள். அதன் பின் நீண்ட காலத்துக்கு முகமூடி அணிந்தவர்களை புலிகள் தாக்குவதை நிறுத்திக்கொண்டன.
  • யானையின் வருகையை முன்னறிவிக்கும் தொழில்நுட்பங்கள், யானையைக் கண்டறிந்து எச்சரிக்கும் கருவிகள், ஒளிபாய்ச்சும் கை விளக்குகள், தற்சுற்று மின்வேலிகள் எனப் புதிது புதிதாக நுட்பங்களைக் கண்டறிந்து, அவற்றைப் பழங்குடிகளுக்கு அளிக்கவேண்டியது அவசியமாகிறது
  • குறிப்பாக, மேற்கண்ட இரண்டு இழப்புகளும் போக்குவரத்து சார்ந்தே நிகழ்ந்திருக்கின்றன. நடந்துசெல்லும்போதுதான் அவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றைத் தடுக்க அத்தியாவசிய தேவைகளுக்கான வாகன உதவிகளைக் கூட்டுறவு முறையில் உருவாக்கலாம்.
  • இவற்றோடு தேவையான இடங்களில் அகழிகளை அதிகப்படுத்துவதும் ஆழப்படுத்து வதும், உள்ளூர் அறிவை அறிவியலோடு இணைப்பதும் இழப்புகளைக் குறைக்க உதவும்.

உள்ளூர் அறிவின் நுட்பம்:

  • உள்ளூர்ப் பாதுகாப்பு நடைமுறைகள் எவ்வளவு வல்லமையானவை என்பதற்கு இன்னொரு சம்பவத்தை உதாரணமாகக் காட்ட முடியும். நானும் பழங்குடி சங்கத்தைச் சார்ந்த முருகனும் ஒருமுறை அடர்ந்த காட்டு வழியொன்றில் போய்க்கொண்டிருந்தோம்.
  • முருகன் உடன் இருந்த தைரியத்தில் சாவகாசமாக நடந்துகொண்டிருந்தேன். அரை கிலோமீட்டர் தூரத்தில் யானை ஒன்று எங்களுக்கு எதிராக வந்துகொண்டிருந்தது. சட்டெனக் கையைப் பற்றிய முருகன் என்னை இழுத்துக்கொண்டு போய் பாதையில் பள்ளத்தைக் கடக்கப் போடப்பட்டிருந்த பாலத்தின் கீழிருந்த நீர்செல்லும் குழாய்க்குள் அமரவைத்துவிட்டுச் சிரித்தார்.
  • வந்த யானை அங்கே நின்று ஒருமுறை பிளிறிவிட்டுக் காட்டுக்குள் போய்விட்டது. சிறிது நேரத்தில் மரத்தை உடைக்கும் சத்தம் கூப்பிடுதூரத்தில் கேட்டது. வெளியே போய் நோட்டம்விட்டுவந்த முருகன், கீழே வந்து சைகையால் என்னை வெளியே அழைத்தார். இந்தத் தப்பித்தல் முறை. போரின்போது பதுங்குகுழியை நினைவுபடுத்தியது.
  • பழங்குடிகள், அவர்களின் மேல் அக்கறை கொண்ட ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு, இத்தகைய தீர்வுகளுக்கான தீவிரமான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
  • இப்படி இன்னும் ஆங்காங்கே கைக்கொள்ளும் முறைகளைத் தொகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தும் முயற்சி களை அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான அழுத்தங்களைப் பழங்குடி சங்கங்கள் அரசுக்குக் கொடுக்க வேண்டும்.
  • புலிகளின் எண்ணிக்கை எவ்வளவு முக்கியமோ, யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு முக்கியமோ அதுபோல காடு இருக்கவேண்டுமானால் பழங்குடிகளின் எண்ணிக்கையும் மிக மிக முக்கியம். அறிவியலை எளிய மக்களின் சேவகனாக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (06 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்