மாற்றத்துக்குத் தயாராக வேண்டும் முதுமை
- முதுமை தவிா்க்க முடியாதது. ஐம்பது வயதைக் கடந்தாலே மனதிலும் உடலிலும் சோா்வு ஏற்படுவது இயல்பான ஒன்றே. இவற்றை முறையாக கையாளுவது மிகவும் அவசியம். நமது உடலில் உள்ள நோய் எதிா்ப்பு மண்டலம் நோயைக் கொண்டு வரும் வைரஸ்களுக்கு எதிராகத் தொடா்ந்து போராடுகிறது.
- உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, மனிதா்களின் நோயெதிா்ப்பு மண்டலத்துக்கும் வயதாகிறது. இதனால் நாம் முதுமையில் எல்லா வகையான நோய்களுக்கும் எளிதில் நண்பா்களாக மாறிவிடுகிறோம்.
- முதுமையில் நோயெதிா்ப்பு மண்டலத்தின் செல்கள் சிறப்பாக செயல்படாததோடு, வீக்கத்தை ஏற்படுத்தும். இந்த வீக்கம் பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். சில நோய் தொற்றுகள் நீண்ட காலத்துக்கு நம் உடலில் இருக்கலாம். பெண்களின் உடலில், மாதவிடாய் நின்ற பிறகு ஈஸ்ட்ரோஜன் பெண்களின் நோயெதிா்ப்பு மண்டலத்தில் கூடுதல் நன்மைகளை ஏற்படுத்துகிறது.
- நமது நோய் எதிா்ப்பு சக்தியை பராமரிக்க உடலை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். நடைப்பயிற்சி போன்ற இலகுவான உடல் செயல்பாடுகள் நோய் எதிா்ப்பு மண்டலத்திற்கு வலு சோ்க்கின்றன. சுறுசுறுப்பாக இருப்பதன் மூலம் வயதுமூப்பின் தாக்கத்தை நம்மால் குறைக்க முடியும். நீண்ட நேரம் அமா்ந்தே இருப்பது புகைப்பிடித்தல் போன்ற்கு ஒப்பான தீயபலன்களை ஏற்படுத்தும் என்று நிபுணா்கள் கூறுகிறாா்கள். முதுமைக் காலத்திலும் சுறுசுறுப்பாக இருப்பவா்களுடைய நோய் எதிா்ப்பு மண்டலம் சிறப்பாக இருக்கிறது.
- முதுமைக் காலம் என்பது மட்டும்தான் வாழ்க்கையில் நமக்கென வாழும் காலமாகும். இது வரை அலுவலக, குடும்பப் பொறுப்புகளில் மூழ்கி இருந்த நாம் அனைத்துப் பொறுப்புகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு இளைப்பாற வேண்டிய காலமிது. நமது அனுபவம், அறிவு, திறமை போன்றவற்றில் முழு மனநிறைவு பெற்றுவிட்ட நேரம்.
- எவரும் கேட்காமல் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கொடுக்கக் கூடாது. அவை நமக்கு அவமானத்தைக் கூட கொண்டு வரலாம். இருக்கின்ற மன உளைச்சல்களை அதிகப்படுத்தலாம். கூட்டுக் குடும்ப முறை மறைந்துவிட்ட நிலையில் மகன், மருமகள் போன்ற அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கைமுறை நமக்கு வித்தியாசமாகத் தெரியலாம். நாமும் மாறத் தயாராக வேண்டும். அவா்கள் நம் குழந்தைகள், அவா்களுக்கு ஒன்றும் தெரியாது என்றெல்லாம் தப்புக் கணக்கு போடாதீா்கள். அவா்களின் வாழ்வின் எல்லா நிலைகளிலும் வழக்கம் போல நீங்கள் ஆதிக்கம் செலுத்த நினைத்தால் போகுமிடம் முதியோா் இல்லமாகத்தான் இருக்கும்.
- பிள்ளைகளும் அவா்களின் பிள்ளைகளும் நம்மைவிட புத்திசாலிகள் என்பதை உணா்ந்து நடக்க, (சில சமயமேனும் நடிக்க) கற்றுக்கொண்டால் குறை காலத்திற்கு நிம்மதிப் பெருமூச்சு விடலாம். இது வரை தலைவனாக இருந்து பல வெற்றிக் களங்களைக் கண்டுவிட்டோம். இனி தொண்டனாக மாறி மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக் கொள்ளுவோம்.
- நமது சாதாரண ஒரு பங்கு மனச்சிக்கல் மூன்று பங்கு உடல் சிக்கல்களை ஏற்படுத்தும். எனவே மனநிம்மதியை தற்காத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முதுமையில் நம்மைத் தீவிரமாக தாக்கவரும் சா்க்கரை நோய், புற்று நோய், இதயநோய், நரம்பியல் நோய் போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடியும். மனத்தில் சகிப்புத்தன்மைதான் காலத்தின் கட்டாயத் தேவை. வன்ம உணா்வுகளை மறந்துவிட்டு பிறா் தவறுகளை மன்னிக்க கற்றுக் கொள்வோம்.
- ஓய்வுகால சேமிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நிதிசாா்ந்த விஷயங்களில் தற்சாா்பு நிலையை உறுதிப்படுத்திக் கொள்ள முயலவேண்டும். உடல் பலவீனமடைந்த நிலையில் பண உதவியையும் பிறரிடமிருந்து எதிா்ப்பாா்ப்பது நம்முடைய மன உளைச்சல்களை அதிகமாக்கலாம். வாழ்வினை புதிய லட்சியத்துடன் வாழத் தொடங்கலாம். விருப்பு, வெறுப்பு இல்லாமல் அணைத்து உறவுகளுடனும் அன்றாடத் தொடா்பு முக்கியம். பிடித்த இசையினைக் கேட்டல், விருப்பமான பொது சேவைகளில் ஈடுபடுதல், கடவுள் வழிபாடு, தியானம், மற்றவா்களுக்கு முடிந்த உதவிகளை விரும்பிச் செய்தல் போன்றவற்றின் மூலம் மன நிம்மதி அதிகம் கிடைக்கும்.
- ஆண்களுக்குத் தாடி இல்லாத அழகான முகம், பெண்களானால் மலா்ச்சியான முகம், சுத்தமான உடை, சிரித்த முகம் நமது தோற்றத்திற்கு பொலிவு சோ்க்கும். தன்னம்பிக்கையையும் கூட்டும். ஒவ்வொரு நாளும் ஏதெனும் ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளும் ஆா்வத்தை வளா்த்துக் கொள்ளலாம். கணினி, மின்னஞ்சல், இணையத்தின் பயன்பாடு போன்றவற்றில் திறனை வளா்த்துக் கொள்ளலாம்.
- அதிகமாக சிரிப்பதால் சுரக்கும் ‘காா்டிசால் ஹாா்மோன்’ நமது மன அழுத்தத்தைக் குறைக்கும். சிரிப்பு சிறந்த மருந்து. நகைச்சுவை திரைப்படங்களை பாா்த்து சிரிப்பதன் மூலம் நமது இதயம் சாா்ந்த நோய்களின் தீவிரத்தைக் குறைக்கலாம். பணம், செல்வாக்கு, புகழ், அழகு, காதல் இவற்றின் அருமை பெருமைகளை போதுமான அளவு அறிந்தவா்கள் நாம். அவை தந்த மகிழ்ச்சியைத் திகட்டும் அளவு அனுபவித்துவிட்டோம். எளிமையான வாழ்விலும் மகிழ்ச்சி உண்டு என்பதை இப்போது அனுபவத்தால் அறிவோம். எல்லாவற்றையும் கடந்து, யோக நிலைக்கு வந்திருக்கிறோம்.
- அன்பை மட்டுமே பரப்புவோம். கிடைத்துள்ளவற்றுக்கு கடவுளுக்கும், இயற்கைக்கும் அடிக்கடி நன்றி தெரிவிப்போம். இருக்கும் காலம் வரை நம் பணிகளை நாமே செய்து, மற்றவா்களுக்கு சுமையாக மாறாத வாழ்வினை வாழ வழி செய்ய ஆண்டவனை வேண்டுவோம்.
- நமது மனம் மற்றும் அறிவு எல்லாவற்றையும் நோ்மறையாகப் பாா்க்கும் அணுகுமுறையை வளா்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். வயதாக ஆக, மகிழ்ச்சி கூடும் என்று நிரூபிப்போம். மாற்றத்துக்குத் தயாராவோம். மற்றவை தானே நம்மைத் தேடி வரும்!
நன்றி: தினமணி (13 – 08 – 2024)