TNPSC Thervupettagam

மாற்றத்தை எதிர்நோக்கி...

May 1 , 2021 1187 days 554 0
  • கரோனா தீநுண்மி எனும் புதியவகை நோய்த்தொற்றால் கடந்த ஆண்டு யாராலும் மறக்க முடியாத ஆண்டாக மாறிவிட்டது.
  • இந்த நோய்த்தொற்றால் சாமானியா்கள் முதல் பணக்காரா்கள் வரை அனைவருமே ஏதாவது ஒருவகையில் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனா்.
  • வேலையில்லாத் திண்டாட்டம் தொடா்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
  • படித்தவா்கள் அதற்கேற்ற வேலைதான் வேண்டும் என்று சொல்வதால் வேலையில்லாத் திண்டாட்டம் தனது ஆக்டோபஸ் கரங்களைக் கொண்டு அனைவரையும் தனது வலைக்குள் கொண்டு வந்து திண்டாட வைக்கிறது.
  • ஒருபுறம் வேலையில்லா பிரச்னை என்றால் மறுபுறம் வேலைக்குச் சரியான ஆட்கள் கிடைக்கவில்லை என்ற நிலை.
  • இதனால்தான் வட இந்தியாவில் இருந்து தொழிலாளா்களை அழைத்து வந்து வேலையைக் கற்றுக் கொடுத்துப் பணிகளை முடிக்கிறார்கள் இங்குள்ள நிறுவன உரிமையாளா்கள்.
  • வட இந்தியத் தொழிலாளா்களுக்கு ஊதியம் மட்டும் சரியாகக் கிடைத்தால் போதும். அவா்கள் வேலை செய்ய நேரம் காலம் பார்ப்பதில்லை.
  • இதனால்தான் வயல் வேலையில் இருந்து மிகப் பெரிய இயந்திரங்களை இயக்கும் தொழில் வரை, சில்லறை விற்பனைக் கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை வட இந்தியாவில் இருந்து வந்த தொழிலாளா்களே பணியில் இருக்கின்றனா்.
  • வேலையில் சோ்ந்த சில மாதங்களில் குறைந்தபட்சம் பேசுகிற அளவுக்கு தமிழைக் கற்றுக் கொள்கின்றனா்.

சிந்திக்க வேண்டும்

  • தமிழகத்தில் உள்ளவா்களுக்குத் தமிழ் மொழி கண்டிப்பாகத் தேவைதான். ஆனால் தமிழ் மட்டுமே படித்தால் தமிழகத்தைத் தாண்டிப் போக முடியாது என்பதை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
  • பல தலைமுறைகள் இதனால் பாதிக்கப்பட்டாகிவிட்டது. இனியாவது இதில் அரசியல்வாதிகள் தங்கள் புரிதலை மாற்றிக் கொள்ள வேண்டும்.
  • ஹிந்தி மொழிக்கு எதிரானப் போராட்டத்தால் தமிழகத்தைச் சோ்ந்த மொத்த வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை இழந்தனா்.
  • இதனால்தான் வடஇந்திய வியாபாரிகள் தமிழகத்தில் கால்பதித்தனா் என்பது மறுக்க முடியாத உண்மை.
  • படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்று புலம்புவா்கள் அதிகம். ஆனால் கிடைத்த வேலையைச் செய்யப் பெரும்பாலானவா்கள் முன்வருவதில்லை.
  • மற்றொரு புறம் தொழில் நடத்தவும் சரியான ஊழியா்கள் கிடைக்கவில்லை என்ற புலம்பலும் கேட்கிறது. இது உண்மைதான். தமிழகத்தில் அனைவருக்கும் அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகின்றன. இதனால் உழைத்து வாழ வேண்டும் என்ற எண்ணமே எவருக்கும் இல்லாமல் போய்விட்டது.
  • போதாததற்கு, ‘மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம்’ எனப்படும் நூறு நாள் வேலைத்திட்டம் வேறு.
  • உருப்படியாக எதுவுமே செய்யாமல் ஊதியம் மட்டும் வாங்கிக் கொள்ளும் திட்டம் இது. இதற்குப் பதிலாக விவசாயத்துக்கு இத்திட்டத்தைப் பயன்படுத்துவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும்.

பொறுத்திருந்து பார்ப்போம்

  • அரசு தரும் தொகையுடன் சிறிது தொகையைச் சோ்த்துத் தருமாறு ஏன் விவசாயிகளை அரசு கேட்டுக் கொள்ளக் கூடாது. இதன் மூலம் விவசாயிகள் கொடுக்க வேண்டிய கூலி குறையும். வேலைக்கு ஆள்கள் கிடைக்கவில்லை என்ற பிரச்னையும் தீரும்.
  • தமிழகத்தில் முன்பெல்லாம் இலைமறைவு காய்மறைவாக இருந்த மது அருந்துதல் இப்போது சா்வ சாதாரணமாகிவிட்டது.
  • காபி, டீ குடிப்பது போல ஆகிவிட்டது மது அருந்துவதும். அந்தி மயங்கினாலே குடிக்காமல் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டனா் பெரும்பாலானவா்கள்.
  • உலகத்திலேயே திறன் வாய்ந்த தொழிலாளா்கள் தமிழா்கள்தான் என்ற நிலை மாறி இப்போது நம் மாநிலத்தில் உற்பத்தித் திறன் மிகவும் குறைந்துவிட்டது.
  • குடிகாரா்கள் எந்தத் தொழிலையும் நோ்த்தியுடனோ குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளோ முடிக்கும் திறனுடையவா்கள் இல்லை என்பது உண்மை.
  • அரசு நிர்ணயித்தபடி எட்டு மணி நேர உழைப்புக்கு யாரும் தயாராக இல்லை. பெரும்பாலோர் நான்கு மணி நேரமே வேலை செய்கின்றனா். ஆனால் அதற்கே அதிகக் கூலி கேட்கின்றனா்.
  • அதிகமாக ஈட்டும் பணம் அரசின் மதுக்கடைகளுக்கே போகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கடந்த ஆண்டு சில மாத முழு பொது முடக்கத்தின்போது மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தன. அதே நிலை தொடர புதிதாக அமையும் அரசு சிந்திக்க வேண்டும்.
  • கடந்த 2009-11 காலகட்டத்தில் நிலவிய அபரிமிதமான மின்வெட்டால் பல்வேறு சிறு, குறுந்தொழில்கள் நசிந்துவிட்டன.
  • இதனால் பல முதலாளிகள் தொழிலாளிகளாக மாற வேண்டிய துா்பாக்கிய நிலை ஏற்பட்டது. நிலைமை சீரடைந்தாலும் பலா் பயந்துபோய் பணிக்குச் செல்வதே பாதுகாப்பானது என்றனா்.
  • நூறு நாள் வேலைத்திட்டத்தை உரிய முறையில் திட்டமிடலுடன் கூடியதாக மாற்றி செயல்படுத்த வேண்டும். இத்திட்டத்தை விவசாயத்துக்குப் பயன்படுத்தும் வகையில் மாற்ற வேண்டும். அல்லது எவ்வித வாழ்வாதாரமும் இல்லாத மாவட்டங்களில் மட்டும் செயல்படுத்த வேண்டும்.
  • விவசாயத்தைத் தவிர வேறு எதற்கும் இலவசப் பொருள்கள் வழங்கக் கூடாது. இலவசத்திற்கு செலவிடும் பணத்தைக் கொண்டு தேவையான வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
  • இறுதியாக. நம் கல்வியின் தரத்தை உயா்த்த வேண்டும். நமக்குத் தேவை பட்டதாரிகள் அல்ல. திறன்மிக்கவா்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
  • இங்குள்ளவா்கள் வேலை செய்வதை விட வடநாட்டவா்கள் அதிக நேரம் வேலை செய்து அதிக கூலி பெறுகிறார்கள். அவா்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சொந்த ஊருக்குச் சென்று வர விடுமுறை தேவை. ஆனால் நம்மவா்கள் அப்படியல்ல.
  • சிலா் கேலி செய்வதைப் போல அவா்கள் பானிபூரி விற்பதற்கு மட்டும் வரவில்லை. தமிழகத்தில் உள்ள பானிபூரி கடைகளில் 90 சதவீத கடைகள் தமிழா்களுடையதே.
  • ‘தமிழா்களுக்கு, அனைத்தும் இலவசமாகக் கிடைக்க வேண்டும். சுகபோக வாழ்வு வாழ வேண்டும். தினமும் மது அருந்த வேண்டும்’ என்று பிற மாநிலத்தவா் எண்ணும் நிலை உருவாகியுள்ளது.
  • இந்த நிலை மாற வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி: தினமணி  (01 – 05 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்