TNPSC Thervupettagam

மாற்றம் ஏற்படுத்துமா மாற்றம்

November 10 , 2022 639 days 337 0
  • உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக தனஞ்சய் யஷ்வந்த் சந்திரசூட் பதவியேற்றிருக்கிறார். நேற்று பதவியேற்றுக்கொண்ட நீதிபதி சந்திரசூட், 2024 நவம்பர் 10-ஆம் தேதி வரை 2 ஆண்டுகள் 2 நாள்கள் தலைமை நீதிபதியாகப் பதவி வகிப்பார். கடந்த 10 ஆண்டுகளில் அதிக காலம் பதவி வகிக்க இருப்பது இவராகத்தான் இருக்கும்.
  • 1959 நவம்பர் 11-ஆம் தேதி மும்பையில் பிறந்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பட்டம் பெற்றது தில்லி செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில். தில்லி பல்கலை.யில் சட்டப்படிப்பும், ஹார்வர்டு சட்டப் பள்ளியில் முனைவர் பட்டமும் பெற்றவர் அவர். 1998-இல் தனது 39 வயதில் மும்பை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக அவர் அங்கீகாரம் பெற்றபோது, இந்தியாவிலேயே அதுவொரு சாதனையாகக் கருதப்பட்டது.
  • 1998 முதல் இரண்டாண்டுகள் அன்றைய வாஜ்பாய் தலைமையிலான அரசில் இந்தியாவின் கூடுதல் தலைமை வழக்குரைஞராகவும், அதைத்தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், 2013-இல் அலாகாபாத் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிய அனுபவத்துடன் உச்சநீதிமன்றத்தில் நுழைந்தவர் நீதிபதி சந்திரசூட்.
  • தொழில்துறை, கலைத்துறை, அரசியல் போல நீதித்துறையும் வாரிசு கலாசாரத்துக்கு அப்பாற்பட்டதல்ல. தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றிருக்கும் டி.ஒய். சந்திரசூட்டின் தந்தை நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் மிக அதிக காலம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பதவி வகித்த பெருமைக்குரியவர். 1978 முதல் 1985 வரை, 7 ஆண்டுகள் 4 மாதங்கள் 19 நாள்கள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த அவரது சாதனை இன்று வரை எவராலும் முறியடிக்கப்படவில்லை.
  • எதிர்வரும் பத்தாண்டுகளில், உச்சநீதிமன்றத் தலைமைப் பொறுப்பை வகிக்க இருப்பவர்களில் இருவர் வாரிசுகள். டி.ஒய்.சந்திரசூட், ஒய்.வி.சந்திரசூட்டின் புதல்வர் என்றால், 2027-இல் முதலாவது பெண் தலைமை நீதிபதியாகப் பதவியேற்க இருக்கும் நாகரத்னா முன்னாள் தலைமை நீதிபதி வெங்கட்ராமய்யாவின் புதல்வி. பெரும்பாலான உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களது வாரிசுகளும் நீதிபதிகளாக நியமனம் பெற முனைப்புக் காட்டுவது ரகசியம் ஒன்றுமல்ல.
  • முதன்முறையாக உச்சநீதிமன்றத்தில் தந்தை வகித்த பதவியில் அமரும் புதல்வர் டி.ஒய்.சந்திரசூட். தற்போதைய தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திரசூட் உச்சநீதிமன்றத்தில் வழங்கியிருக்கும் சில தீர்ப்புகள் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கின்றன. தனி மனித உரிமை, பெண் உரிமை உள்ளிட்ட பிரச்னைகளில் நீதிபதியாக மட்டுமல்லாமல், ஒருவகையில் போராளியாகவும் இருப்பவர் என்பது தலைமை நீதிபதி சந்திரசூட் குறித்த பரவலான கருத்து.
  • உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக 2016-இல் நியமனம் பெற்ற அடுத்த இரண்டாண்டுகளில் தனது தந்தை வழங்கிய தீர்ப்புகளை திருத்தி எழுதியவர் அவர். அவசரநிலையின்போது, அரசியல் சாசனம் வழங்கும் ஒருவரது அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்படுவதை தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி.சந்திரசூட் அங்கீகரித்திருந்தார். 2017-இல் நீதிபதிகள் கேகர், அகர்வால், அப்துல் நசீர் ஆகியோருடன் இணைந்து நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வழங்கிய தீர்ப்பில் ஒருவரது தன்மறைப்பு நிலையும், தனி உரிமையும் அரசியல் சாசனத்தின் அடிப்படை உரிமையில் அடங்கியது என்று தீர்ப்பு வழங்கி அவரது தந்தை வழங்கிய தீர்ப்பு நிராகரிக்கப்பட்டது.
  • கணவன்-மனைவி இருவரில் ஒருவர் ரகசிய உறவு வைத்திருப்பது கிரிமினல் குற்றமல்ல என்றும், தன் தந்தை வழங்கிய தீர்ப்பு அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் சுதந்திரம், சமத்துவத்துக்கு எதிரானது என்றும் கூறி, தனது தந்தையின் முந்தைய தீர்ப்பை 2018-இல் நிராகரித்தார் நீதிபதி டி.ஒய்.சந்திரசூட். நிதி மசோதாவாக ஆதார் அறிமுகப்படுத்தப்பட்டது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பது அவரது தீர்ப்பு. இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377-இல் கூறப்பட்ட ஓரினச் சேர்க்கை மீதான கிரிமினல் குற்றத்தை அகற்றியதும் அவரது முக்கியமான தீர்ப்புகளில் ஒன்று.
  • திருமணமாகாத பெண்கள் கருக்கலைப்பை மேற்கொள்ளலாம் என்பதும் அவரது சமீபத்திய தீர்ப்பு. அயோத்தி, சபரிமலை கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் நுழைவதை அனுமதித்த வழக்குகளை விசாரித்த 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் மட்டுமே தேங்கிக் கிடக்கின்றன. அவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை 10 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணையில் இருப்பவை. நீதிபதிகள் பற்றாக்குறை, கட்டமைப்பு வசதி இல்லாமை, தேவையற்ற சட்டங்கள், விரைந்து தீர்ப்பு வழங்குவதற்குத் தடையாக இருக்கும் நடைமுறைகள் என்று பல்வேறு பிரச்னைகளை தலைமை நீதிபதியாகப் பதவியேற்றிருக்கும் டி.ஒய்.சந்திரசூட் எதிர்கொள்ள இருக்கிறார்.
  • உச்சநீதிமன்றத்தில் நிரப்பப்படாமல் இருக்கும் 5 நீதிபதிகள், உயர்நீதிமன்றங்களில் 336 நீதிபதிகள் இடங்களை நிரப்புவது எளிதாக இருக்கப்போவதில்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகளின் பணி ஓய்வு வயதை உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு நிகராக 62-இலிருந்து 65-ஆக உயர்த்துவதன் மூலம் பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். அதற்கு மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கையாளாமல் இணைந்து செயல்படுவது அவசியம்.
  • இரண்டாண்டு கால அவகாசம், அவருக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு. அதைத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பது எதிர்பார்ப்பு. மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவாரா, எதிர்த்து செயல்படுவாரா என்பதில் அடங்கியிருக்கிறது அவரது வெற்றியும் தோல்வியும்.

நன்றி: தினமணி (10 – 11 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்