TNPSC Thervupettagam

மாற்றம் ஏற்றம் தரட்டும்

September 21 , 2023 480 days 270 0
  • ஜனநாயக இந்தியாவின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடந்துகொண்டிருக்கும் ஐந்து நாள் சிறப்புக் கூட்டத் தொடா். அதற்கான முக்கியத்துவத்தை உணா்த்தவும், உறுதிப்படுத்தவும் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்தி மக்களவை நிறைவேற்றியிருக்கிறது.
  • புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு மாறுவதற்கு முன்னால், ஐந்து நாள் கூட்டத்தொடரின் முதல் நாள் நிகழ்வு பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் நடத்தப்பட்டது. அதில் உரையாற்றும்போது பிரதமா் நரேந்திர மோடி வட்ட வடிவிலான அந்த கட்டடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டாா். இங்குதான் காலனிய ஆட்சியாளா்களிடமிருந்து சுதந்திர இந்தியாவுக்கு ஆட்சி மாற்றம் நடந்தது என்பதையும், இந்தியக் குடியரசின் அரசியல் சாசனம் உறுப்பினா்களால் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப் பட்டது என்பதையும் அவா் நினைவுகூா்ந்தார்.
  • பழைய நாடாளுமன்றக் கட்டடத்தின் மைய மண்டபத்தில்தான் சுதந்திர இந்தியாவின் தேசியக் கொடியும், நாட்டுப் பண்ணும் அங்கீகாரம் பெற்றன. இந்தியா, குடியரசாகத் தன்னை அறிவித்துக்கொண்டது முதல் (1952) 41 உலக நாடுகளின் தலைவா்கள் விருந்தினா்களாக அழைக்கப்பட்டு இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றி இருக்கிறார்கள். இந்தியாவின் குடியரசுத் தலைவா்களாக இருந்தவா்கள் 86 முறை நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றி இருக்கிறாா்கள். நாடாளுமன்றம் கடந்த 70 ஆண்டுகளில் 4,000-க்கும் அதிகமான மசோதாக்களை நிறைவேற்றி சட்டமாக்கி இருக்கிறது.
  • நவீன இந்தியாவின் உதயத்துக்கும் வளா்ச்சிக்கும் கடந்த ஒரு நூற்றாண்டாக பழைய நாடாளுமன்றக் கட்டடம் சாட்சியாக இருந்திருக்கிறது. அதில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற உரைகளும், விவாதங்களும், புரட்சிகரமான பல தீா்மானங்களும் இடம் பெற்றிருக்கின்றன.
  • 1911 டிசம்பா் 12-ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரம் கொல்கத்தாவிலிருந்து தில்லிக்கு மாறியபோது, வட்ட வடிவ நாடாளுமன்றமும், அதைச் சுற்றியுள்ள கட்டடங்களும் லுட்யூன்ஸ், ஹொ்பட் பேக்கா் ஆகியோரால் கட்டப்பட்டன. 1927 ஜனவரியில் செயல்படத் தொடங்கிய அந்தக் கட்டடத்தில், இந்தியா விடுதலை பெற்ற 1947 வரை பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சில்செயல்பட்டது. அதன் பிறகு இந்தியாவின் அரசியல் சாசன சபை அதில்தான் கூடியது. இந்திய அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த 1950 ஜனவரி 26 முதல் அது நாடாளுமன்றமாக மாறியது.
  • 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில் இந்தியாவின் முதல் பிரதமா் பண்டித ஜவாஹா்லால் நேரு நிகழ்த்திய உரையுடன் சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்ற வரலாறு தொடங்குகிறது. நீண்டகாலமாக விதியுடன் நாம் நடத்திய போராட்டத்தின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் தருணம் கூடி வந்திருக்கிறது. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் இன்றைய நடுநிசி நேரத்தில் இந்தியா விடுதலைக்கும் வாழ்வுக்கும் உயிர்த்தெழுகிறதுஎன்று தொடங்கும் பண்டித ஜவாஹா்லால் நேரு தனது கைப்பட எழுதி ஆற்றிய உரை இப்போதும் பாதுகாக்கப்படுகிறது.
  • 1949 நவம்பா் 25-ஆம் தேதி அரசியல் சாசன சபையில் அன்றைய பண்டித நேருவின் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்து, அரசியல் சாசனத்தை உருவாக்கிய பாபா சாஹேப் அம்பேத்கரின் அராஜகத்தின் இலக்கணம்’ (கிராமா் ஆஃப் அனார்கி) உரையும் சரித்திரப் புகழ் பெற்றது. ரத்தம் சிந்தும் புரட்சிகளை தனது உரையில் நிராகரித்தார் அம்பேத்கா். சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உள்ள குறிக்கோள்களை அடைவதற்கு அரசியல் சட்ட ரீதியிலான வழிகள் இருக்கும்போது, வன்முறைகளைப் பின்பற்றுவது அராஜக வழிமுறை என்றும், அவற்றைக் கைவிட வேண்டும் என்றும் தனது உரையில் பாபா சாஹேப் குறிப்பிட்டிருந்தார்.
  • நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், பிரதமராக இருந்தபோதும் அடல் பிகாரி வாஜ்பாய் ஆற்றிய உரை ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்தது. 13 நாள் பிரதமராக இருந்து 1996 ஜூன் 1-ஆம் தேதி பதவி விலகுவதற்கு முன்னால், வாஜ்பாய் நிகழ்த்திய உரை, நாடாளுமன்ற வரலாற்றில் மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்தின் சரித்திரத்திலும் இடம்பெறும் ஆவணப் பதிவு.
  • 1950 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1954 சிறப்பு திருமணச் சட்டம், 1961 வரதட்சிணை தடுப்புச் சட்டம், 1972 வனவிலங்குகள் பாதுகாப்புச் சட்டம், 1976 42-ஆவது அரசியல் சாசன திருத்தச் சட்டம், 1980 தேசிய பாதுகாப்புச் சட்டம், 1985 கட்சித் தாவல் தடுப்புச் சட்டம், 1986 சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், 2002 கருப்புப் பண ஒழிப்புச் சட்டம், 2005 தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2012 போக்ஸோ சட்டம், 2013 லோக்பால், லோக் ஆயுக்த சட்டம், 2019 ஜம்மு - காஷ்மீா் மறுசீரமைப்புச் சட்டம் உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த சட்டங்களுக்கு கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவின் பழைய நாடாளுமன்றக் கட்டடம் காரணமாக இருந்திருக்கிறது.
  • 24,281 சதுர மீட்டா் பரப்பளவுள்ள வட்ட வடிவிலான பழைய நாடாளுமன்றக் கட்டடத்திலிருந்து, இந்திய ஜனநாயகம் 64,500 சதுர மீட்டா் பரப்பளவுள்ள புதிய கட்டடத்துக்கு மாறியுள்ள பெருமைமிகு தருணம் இது. காலனிய இந்தியாவின் உணா்வுகளிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, வலிமைமிக்க பொருளாதாரமாக பாரதம் உயா்ந்திருப்பதன் அடையாளம் இந்த மாற்றம். நல்லவை தொடர வேண்டும்; அல்லவை தவிர்க்கப்பட வேண்டும்.

நன்றி: தினமணி (21 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்