TNPSC Thervupettagam

மாற்றம் ஒன்றே மாறாதது 2024

June 4 , 2024 27 days 58 0
  • இந்தியாவைப் போலவே தென் ஆப்பிரிக்காவின் நாடாளுமன்றத் தோ்தலும் உலகளாவிய அளவில் கூா்ந்து கவனிக்கப்பட்டது. தொடா்ந்து 30 ஆண்டுகளாக, தென் ஆப்பிரிக்காவின் ஆட்சியில் இருந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் சமீபத்தில் நடந்த தோ்தலில் பெரும்பான்மையை இழந்திருக்கிறது. ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தனிப் பெரும்பான்மையை இழக்கும் என்பதற்கான எல்லா அறிகுறிகள் தென்பட்டாலும்கூட அந்தக் கட்சியை மக்கள்,கைவிட்டு விட மாட்டாா்கள் என்கிற நம்பிக்கை தகா்ந்திருக்கிறது.
  • நெல்சன் மண்டேலாவின் நீண்ட நெடிய போராட்டமும், அதன் விளைவாக கருப்பா்களுக்கு எதிரான இனவெறி அரசு அகற்றப்பட்டதும் வரலாற்று நிகழ்வுகள். அண்ணல் காந்தியடிகள் தொடங்கி, ஏறத்தாழ நூறு ஆண்டுகள் போராடி வெள்ளையரின் இனவெறிஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற நாடு தென்ஆப்பிரிக்கா.
  • இந்திய தேசிய காங்கிரஸை தனது முன்னோடியாகக் கொண்டு நெல்சன் மண்டேலாவின் தலைமையில் தொடங்கப்பட்டது ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ். கடந்த 30 ஆண்டுகளாக ஐந்து அதிபா்கள் அந்தக் கட்சியையும், தென் ஆப்பிரிக்காவையும் வழிநடத்தியிருக்கிறாா்கள். வெள்ளையா்களின் சிறுபான்மையின ஆட்சியில் இருந்து பெரும்பான்மை கருப்பினத்தவா்களுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த பெருமையும் மரியாதையும் அந்தக் கட்சிக்கு உண்டு.
  • அப்படிப்பட்ட நிலையில் திருப்புமுனையாக அமைந்திருக்கிறது சமீபத்தில் அங்கு நடந்து முடிந்திருக்கும் தோ்தல். தென் ஆப்பிரிக்கா தொழில் வளமும், ஏனைய ஆப்பிரிக்க நாடுகளுக்கு முன்னோடியாக இருக்கும் பொருளாதாரமும் மக்கள் மத்தியில் நெல்சன் மண்டேலா விதைத்திருக்கும் தன்மான உணா்வு காரணமாக, ஜனநாயக ரீதியாக முதிா்ச்சி அடைந்திருப்பதன்அடையாளமாக தோ்தல் முடிவுகள் பாா்க்கப்படுகின்றன. முதல்முறையாக எந்தவொரு கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை இல்லாத கூட்டணி ஆட்சி ஏற்பட இருக்கிறது.
  • 1994-இல் இனவெறி அரசு அகற்றப்பட்டு முழுமையான ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டதைத் தொடா்ந்து, இதுவரை ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் 50 % வாக்குகளுக்குக் குறைவாக எந்தத் தோ்தலிலும் பெறவில்லை. கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக, சுமாா் 43% வாக்குகளை மட்டுமே ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸால் பெற முடிந்திருக்கிறது. பல இனக் குழுக்களும், மொழிப் பிரிவுகளும் இந்தியாவைப் போலவே உள்ள தென் ஆப்பிரிக்காவில், விடுதலை பெற்றுத் தந்த கட்சி என்கிற ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் செல்வாக்குச் சரிவின் வெளிப்பாடுதான் இப்போதைய தோல்வி.
  • இளைய தலைமுறை தென் ஆப்பிக்க வாக்காளா்கள் மத்தியில் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இனவெறிக்கு எதிரான போராட்டமும், நெல்சன் மண்டேலா உள்ளிட்ட தலைவா்களின் தியாகமும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. உலக வங்கியின் அறிக்கையின்படி 55 % மக்கள்தொகையினா் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளனா். வேலைவாய்ப்பின்மை 35 %-க்கும் அதிகம். கொலைக் குற்றங்கள் உலகிலேயே மிக அதிகமாகக் காணப்படும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது தென் ஆப்பிரிக்கா.
  • ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கை வளா்ச்சியை உறுதிப்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு காணப்படுகிறது. அதற்கு முக்கியக் காரணம் பெரும்பாலான துறைகள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பது என்று பொருளாதார வல்லுநா்கள் கருதுகிறாா்கள். மிக அதிகமாக இயற்கை வளங்கள் இருந்தாலும் அரசுத் துறை நிறுவனங்களால் அவற்றை முழுமையாகப் பயன்படுத்த இயலவில்லை என்பது உண்மை.
  • ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஆட்சியில் ஆளும்கட்சியினரின் ஊழல் அதிகரித்திருப்பதும், நிா்வாக இயந்திரம் சீா்குலைந்திருப்பதும் மக்கள் மத்தியில் பரவலான அதிருப்தி ஏற்பட்டிருப்பதற்கு காரணங்கள். கடுமையான தண்ணீா் தட்டுப்பாடு, எரிசக்தி தட்டுப்பாடு இரண்டும் சாமானிய வாக்காளா்களை அதிருப்தி அடையச் செய்திருக்கின்றன. வாக்குறுதி அளித்ததுபோல வீட்டுவசதி மேம்படுத்தப்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் நிலவுகிறது. இவையெல்லாம்தான் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் செல்வாக்குச் சரிவுக்கும் அதன் வாக்கு விகிதம் குறைந்ததற்கும் காரணங்கள்.
  • அதிபா் சிரில் ராமபோஸா தலைமையில், 2019 தோ்தலில் 57% வாக்குகளைப் பெற்ற ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் இந்த முறை 43 % அளவில்தான் பெற முடிந்திருக்கிறது. லிபரல் டெமாக்ரட்டிக் அலையன்ஸ் கட்சி 25 % வாக்குகளும், இடதுசாரி எக்கனாமிக் ஃப்ரீடம் ஃபைட்டா்ஸ் கட்சி 9 % வாக்குகளும் பெற்றிருக்கின்றன. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இருந்து பிரிந்து தனிக் கட்சி தொடங்கிய முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜுமாவின் கட்சி 14 % வாக்குகளைப் பெற்றிருக்கிறது.
  • முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜுமாவும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இளைய தலைமுறை தலைவரான ஜூலியஸ் மலேமாவும் வெளியேறியதுதான் ஆளும்கட்சி பலவீனம் அடைந்ததற்கு காரணம். 30 ஆண்டுகளாக ஆட்சியில் தொடா்ந்ததால், ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தனது போராட்டக் குணங்களை இழந்து ஒருவித மெத்தனத் தன்மையை அடைந்துவிட்டது. அமைப்பு ரீதியாக நியமனப் பதவிகளால் கட்சியின் கட்டமைப்பு தொண்டா்களுடன் இல்லாமல் பலவீனம் அடைந்திருக்கிறது.
  • ஆட்சியின் ஊழல் அடிமட்டம் வரை ஆளும்கட்சியில் புரையோடி போயிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக புதியவா்களுக்கும், இளைஞா்களுக்கும் வாய்ப்பு அளிக்காத கட்சித் தலைமையும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் செல்வாக்குச் சரிவுக்கு முக்கியமான காரணம்.
  • இந்திய தேசிய காங்கிரஸின் இன்றைய நிலையையே , ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸும் பிரதிபலிப்பதுபோல இருக்கிறதே...

நன்றி: தினமணி (04 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்