TNPSC Thervupettagam

மாற்றம் காணும் சமையல் உப்பு

February 7 , 2025 28 days 126 0

மாற்றம் காணும் சமையல் உப்பு

  • சமையல் உப்பு குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை உலக சுகாதார நிறுவனம் மறுபடியும் கையில் எடுத்திருக்கிறது. 1950களில் இந்தியர்களிடம் அயோடின் குறைபாடு அதிகம் காணப்பட்டது. ‘முன்கழுத்துக்கழலை’ (Goitre), ‘குறை தைராய்டு’ (Hypothyroidism) ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அப்போது அதிகம்.
  • குறிப்பாக, குழந்தைகள் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சிக் குறைபாடுகளால் (Cretinism) பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண 1962இல் இந்தியாவில் அயோடின் செறிவூட்டப்பட்ட சமையல் உப்பு (Iodised salt) அறிமுகம் செய்யப்பட்டது.
  • அது பயன்பாட்டுக்கு வந்த பிறகு இந்தியாவில் அயோடின் குறைபாடு ஏறத்தாழ நீங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து இப்போது இந்தி​யர்​களின் ஆரோக்​கி​யத்தை மேம்படுத்த உப்பு மீண்டும் ஒரு முதன்மை ஆயுதமாகப் புறப்​பட்​டிருக்​கிறது. காரணம், நாம் உணவில் சேர்த்​துக்​கொள்ளும் உப்பின் அளவுக்கும் உயர் ரத்தஅழுத்தப் பிரச்சினை ஏற்படு​வதற்கும் அதிகம் தொடர்பு இருக்​கிறது என்பது​தான்.
  • அளவுக்கு அதிகமாக உப்பைச் சேர்த்​துக்​கொள்​வ​தாலேயே உலக அளவில் ஆண்டு​தோறும் 20 லட்சம் பேர் உயிரிழக்​கிறார்கள் என்கிறது ஒரு சர்வதேசப் புள்ளி​விவரம். இப்படி, ஒவ்வொரு நாட்டின் பொதுச் சுகாதா​ரத்​துக்கு ‘வெடி’வைக்கும் பொருளாகச் சமையல் உப்பு மாறி வருவதைத் தொடர்ந்து, உப்பின் பயன்பாடு குறித்த புதிய வழிகாட்டுதலை உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் பரிந்​துரைத்​துள்ளது.

உப்பு எவ்வளவு தேவை?

  • ஒரு நபர் தினமும் 5 கிராமுக்கும் குறைவாகவே உப்பை உணவில் எடுத்​துக்​கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் இதுவரை அறிவுறுத்தி வந்தது. ஆனால், இந்தி​யர்கள் தினமும் 10 கிராமுக்கும் அதிகமாகவே எடுத்​துக்​கொள்​கின்​றனர்.
  • இந்நிலை​யில், பல கட்ட ஆராய்ச்​சிகளுக்குப் பிறகு, ஒரு நபர் தினமும் 2 கிராமுக்கும் குறைவாகவே உப்பை எடுத்​துக்​கொள்ள வேண்டும் என்று அந்நிறு​வனத்தின் உலகளாவிய நிலைக்குழு (International body) சமீபத்தில் தீவிர​மாகப் பரிந்​துரைத்​துள்ளது. ஆகவே, உலக சுகாதார நிறுவனமும் உப்புப் பயன்பாடு தொடர்பான தன்னுடைய நிலைப்​பாட்டை மாற்றிக்​கொண்​டுள்ளது.

சமையல் உப்பு ஏன் முக்கியம்?

  • நம் உடலில் ரத்த அழுத்தம், ரத்தச் சுழற்சி ஆகிய இரண்டு அம்சங்​களும் இயல்பாக இருக்க வேண்டும் என்றால், உடல் செல்களின் உட்புறத்​திலும் வெளிப்பு​றத்​திலும் இருக்கிற திரவங்​களின் அளவுகள் சரியாக இருக்க வேண்டும். சோடியம், பொட்டாசியம் போன்ற அயனிகளின் அளவுகள்தான் நம் உடல் திரவங்​களின் அளவுகளைத் தீர்மானிக்​கின்றன.
  • இந்த இரண்டு அயனிகளுக்கும் ஏதாவது ஒரு விதத்தில் இயல்புநிலை மாறினால் அது இதயத்தைப் பாதிக்​கும். எப்படி? சமையல் உப்பு என்பது சோடியம் குளோரைடு (Sodium Chloride) கலந்த ஒரு ரசாயனம். பொதுவாகவே, சோடியத்​துக்கு உடலில் திரவச் சத்தைத் தேக்கி வைக்கிற குணம் உண்டு.
  • நாம் அளவுக்கு அதிகமாகச் சமையல் உப்பைப் பயன்படுத்​தும்​போது, சோடியத்தின் அளவு அதிகரிக்​கும். அப்போது ரத்தத்தில் திரவ அளவு அதிகரிக்​கும். சோடியத்தின் வழியாகத் திரவச் சத்தைச் ‘சுமை’​யாகப் பெற்ற ரத்தத்தில் ரத்த அழுத்தம் அதிகரித்துவிட, ரத்தச் சுழற்சி சிரமப்​படும். அதைத் தொடர்ந்து ரத்தக்​குழாய்​களில் உள்கா​யங்கள் (Inflammation) ஏற்படும். இந்தக் காயங்​களில் கொலஸ்​டிரால் கூடாரம் போடும்.
  • அது ரத்த ஓட்டத்தைத் தடைசெய்து, மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்பட வழிவகுக்​கும். மேலும், நாள்பட்ட உயர் ரத்தஅழுத்தம் சிறுநீரகத்​தையும் பாதிக்​கும். அப்போது சிறுநீரகச் செயலிழப்பு (Kidney failure) ஏற்படும். இந்தியாவில் உயர் ரத்தஅழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோய், இரைப்பைப் புற்றுநோய் போன்ற தொற்றாநோய்கள் அதிகரித்து​வரு​வதற்குச் சமையல் உப்பு முக்கியக் காரணமாகக் கருதப்​படுவது இதனால்​தான்.
  • அதேவேளையில் தினமும் 2 கிராம் அளவுக்கு சோடியத்தை எடுத்​துக்​கொள்​ளும்​போது, ரத்த அழுத்தம் 4 மி.மீ. வரைக்கும் குறைந்​து​விடு​கிறது. இதன் பலனால், உயர் ரத்த அழுத்தம் கட்டுப்​படு​கிறது; இதய ஆரோக்​கியம் மேம்படு​கிறது; சிறுநீரகம் பாதுகாக்​கப்​படு​கிறது. இவற்றின் மொத்தப் பலனாக, நாட்டில் தொற்றாநோய்க் கூட்டத்தின் சுமை குறைய வாய்ப்​பிருக்​கிறது.
  • இது இந்தியப் பொருளா​தாரச் சுமையைக் குறைக்​கவும் உதவுகிறது. இதனாலேயே உலக சுகாதார நிறுவனம் இந்தியாவில் சமையல் உப்புப் பயன்பாடு தொடர்​பாகப் புதிய வழிகாட்டு​தலைத் தந்துள்ளது.

மாற்று உப்பு உதவும்:

  • உலக சுகாதார நிறுவனம், ‘உணவில் உப்பைக் குறையுங்கள்’ என்று சமூகத்​துக்கு அறிவுறுத்த ஆரம்பித்து மூன்று தசாப்​தங்கள் முடிந்​து​விட்டன. இதுவரை அது விரும்பிய பலன் கிடைக்க​வில்லை. காரணம், மாறிவிட்ட உணவுப் பழக்கத்தால் உப்பு அதிகம் சேர்க்​கப்பட்ட துரித உணவு வகைகளையும் பதப்படுத்​தப்பட்ட உணவு வகைகளை​யும்தான் மக்கள் அதிகம் விரும்புகின்றனர்.
  • ஆகவே, அயோடின் செறிவூட்​டப்பட்ட சமையல் உப்பைப் பயன்படுத்து​வது​போல், சோடியம் மிகவும் குறைவாக​வும், பொட்டாசியம் தேவையான அளவுக்கும் கலக்கப்பட்ட மாற்று உப்பை (Lower-sodium salt sub-stitutes - LSSS) மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்​தி​யுள்ளது அந்நிறுவனம். முக்கியமாக, தேசியக் கொள்கை வகுப்​பாளர்கள், திட்ட மேலாளர்கள், சுகாதார வல்லுநர்கள் ஆகியோ​ருக்கு சோடியம் குறைவான உப்பு மாற்றீடு​களைத் தயாரித்துப் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதலை வழங்கி​யுள்ளது.
  • மாற்றம் காணும் இந்தப் புதிய உப்பின் தேவையை​யும், இது அறிமுகம் செய்யப்​படுவதன் நோக்கத்​தை​யும், பலன்களையும் மக்களுக்கு எடுத்​துச்​செல்ல வேண்டிய கடமை இவர்களுக்கு இருக்​கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்​திருக்​கிறது. இதன் மூலம் நாட்டின் பொதுச் சுகாதா​ரத்​தையும் மேம்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் நம்பு​கிறது.

பொட்டாசியம் ஏன் அவசியம்?

  • உயர் ரத்த அழுத்தம் ஏற்படு​வதைத் தடுக்க சோடியத்தைக் குறைவாக எடுத்​துக்​கொள்ள வேண்டும் என்று சொல்வது சரி. பொட்டாசியம் ஏன் அவசியம்? ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க ரத்தக் குழாய்​களுக்கு நெகிழ்வுத்​தன்மை அவசியம். அந்த நெகிழ்வுத்​தன்​மைக்கு பொட்டாசியம் அவசியம். ஆகவே, ரத்தத்தில் பொட்டாசி​யத்தின் அளவைச் சரியாக வைத்துக்​கொண்​டால், ரத்த அழுத்தம் கட்டுப்​படும். பொட்டாசியம் என்பது காய்கறி/பழங்​களில் இருந்து கிடைக்கும் ஒரு தாதுச் சத்து.
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் தேசிய ஊட்டச்​சத்து நிறுவனமும் இணைந்து சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டு​தல்படி, இந்தி​யர்கள் தினமும் குறைந்தது 500 கிராம் வரைக்கும் காய்கறி/பழங்களை எடுத்​துக்​கொள்ள வேண்டும். ஆனால், நடைமுறையில் அதிகபட்சம் 200 கிராம் வரைக்​கும்தான் இந்தி​யர்கள் எடுத்​துக்​கொள்​கிறார்கள் என்பதால், புதிதாக வர இருக்கும் மாற்று உப்பில் பொட்டாசி​யத்​தையும் கலப்ப​தற்கு உலக சுகாதார நிறுவனம் பரிந்​துரைத்​துள்ளது. புதிய வகை உப்பின் மூலம் ரத்தத்தில் சோடியத்தின் அளவும் கட்டுப்​படும்; உடலுக்குத் தேவையான பொட்டாசி​யமும் கிடைத்து​விடும்.
  • ஆக, மொத்தத்தில் உயர் ரத்தஅழுத்தப் பிரச்சினை கட்டுக்குள் அடங்கும். அதேவேளையில் பொட்டாசியம் அளவுக்கு மீறினால், அது சிறுநீரகத்​துக்கு ஆகாது. ஆகையால், ஏற்கெனவே சிறுநீரக நோய் உள்ளவர்​களுக்கும் கர்ப்​பிணி​களுக்கும் குழந்தை​களுக்கும் இந்த வழிகாட்டுதல் பொருந்தாது என்றும் அந்நிறுவனம் தெரிவித்​துள்ளது. இந்தப் பரிந்​துரையின் சாதக பாதகங்களை மத்திய அரசு பகுத்​தா​ராய்ந்து இந்தியாவில் இது அமல்படுத்​தப்​படுமா என்பது விரைவில் தெரிய​வரும்.

குறைந்​தாலும் ஆபத்து!

  • ரத்தத்தில் சோடியம் அல்லது பொட்டாசி​யத்தின் அளவு மிகவும் குறைந்​தாலும் ஆபத்து​தான். மனக் குழப்பம், பேச்சு குழறுதல், தொடர்​பின்றிப் பேசுதல், நடை தள்ளாட்டம், கிறுகிறுப்பு, மயக்கம் போன்றவை சோடியம் குறைந்துபோனதை வெளிக்​காட்டும் அறிகுறிகள்.
  • உடலில் ஊசி குத்துகிற உணர்வு, மதமதப்பு, களைப்பு, தசைப்​பிடிப்பு, படபடப்பு போன்றவை பொட்டாசியம் குறைந்​து ​போனதை வெளிக்​காட்டும் அறிகுறிகள். இந்த நிலைமை​களில் தேவையான அளவுக்கு, சோடியமும் பொட்டாசி​யமும் கிடைப்​பதுபோல சிகிச்சை எடுத்​துக்​கொள்ள வேண்டும்; உணவுமுறையைச் சரிசெய்​து​கொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (07 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்