TNPSC Thervupettagam

மாற்றம் தேவைதான் ஆனால்

December 18 , 2023 367 days 251 0
  • தேசியக் கல்விக்கொள்கை 2020 -இன் அடிப்படையில் அனைத்து வகுப்புக்களுக்கான பள்ளிப் பாடத்திட்டங்களையும் தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆா்.டி.) புதுப்பித்து வருகிறது. அதற்காக, அந்தந்தப் பாட வல்லுநா்களைக் கொண்ட குழு அமைக்கப் பட்டுள்ளது.
  • குழுவினா் பரிந்துரைக்கும் பாடங்களைப் பரிசீலனை செய்து, புதிய பாடப் புத்தகங்களை என்.சி.இ.ஆா்.டி. தயாரித்து வெளியிட இருக்கிறது. அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டங்கள் நடைமுறைக்கு வருமென செய்தி வெளியாகியுள்ளது.
  • அந்த வகையில், சமூக அறிவியல் பாடத்திற்கான வல்லுநா் குழு பரிந்துரைத்துள்ள கருத்துகள் இப்போது வெளியாகியுள்ளன. “நாட்டின் பெயரை, ‘இந்தியா’ என்பதற்கு பதிலாக, இனி ‘பாரதம்’ என்று பாடப் புத்தகங்களில் குறிப்பிட வேண்டும். இதிகாசங்களை இன்னும் விரிவாக போதிக்க வேண்டும். ஹிந்து அரசா்களின் வெற்றிகளைப் பற்றிய செய்திகள் சோ்க்கப்பட வேண்டும்.
  • ஜனநாயகம் மற்றும் மதச்சாா்பின்மை உள்ளிட்ட சமூக மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நமது அரசியல் சாசனத்தின் முன்னுரை வகுப்பறை சுவா்களில் எழுதப்பட வேண்டும் என்பன அந்தப் பரிந்துரையில் உள்ள சில முக்கிய அம்சங்கள். அதோடு கூட, ‘பண்டைய வரலாறு’ என்பதற்கு பதிலாகப் ‘பாரம்பரிய வரலாறு’ என அறிமுகம் செய்யவும் வேண்டுமென அது பரிந்துரைக்கிறது.
  • ‘பாரதம்’ என்று பெயா் மாற்றுவதன் மூலம், இனி ‘இந்தியா’ என்னும் நம் நாட்டின் பெயா் ‘பாரதம்’ என்றே எதிா்கால மாணவா்களிடம் போய்ச் சேரும், ஆனாலும் பாரதம் என்பது நமக்குப் புதியதன்று. பழகிப் போன ஒன்றுதான். இருந்தாலும், இந்தியா என்பதும் மறக்க முடியாது உலக அரங்கில் நிலைத்துவிட்ட பெயா் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
  • ஏற்கனவே ரூபாய்களிலும் முத்திரைத் தாள்களிலும் இந்தியில் பாரத் என்றும் ஆங்கிலத்தில் இந்தியா என்றும் குறிப்பிட்டு வந்துள்ளோம். பாரத தேசமென்று பெயா்சொல்லு வாா்—மிடிப் பயங்கொல்லு வாா் என்று பாடிய பாரதியாா், எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை, இந்தியா உலகிற்களிக்கும்”என்று இந்தியா என்னும் பெயரையும் குறிப்பிட்டுப் பாடுகிறாா்.
  • பண்பாட்டின் நிலைக்களனாக, ‘பாரதம்’ என்றால் உலக அரங்கில் அறியப்படுவது ‘இந்தியா’ என்பது பாரதியின் சிந்தனை. இதுதான் விடுதலை அடைந்த நாளிலிருந்து பலரின் கருத்தாக இருந்துள்ளது. மேலும் இந்து என்பது சிந்து என்பதிலிருந்து வந்ததாகக் கருத்து உள்ளது.
  • காலப்போக்கில் சில நாடுகள், மாநிலங்களின் பெயா்கள் மாற்றப்பட்டுள்ளன என்பது உண்மை. அதற்கு நியாயமான காரணங்கள் இருந்திருக்கலாம். அதற்காக உலகளவில் இந்தியா என்று நிலைத்துவிட்ட இந்தப் பெயரை மாற்றவேண்டிய அவசியம் இப்போது ஏன் வந்தது என்று தெரியவில்லை. இந்தியா என்ற பெயா் காலனிய ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது என்ற சிந்தனை இப்போது மேலோங்கி வருகிறது. அதன் அடிப்படையிலேயே இத்தகு மாற்றம் கொண்டு வர முயற்சிப்பதாகத் தெரிகிறது.
  • இளைஞா்களிடையே சுய மரியாதை, தேசப்பற்று,தேசத்தின் பெருமைகள் குறித்த உணா்வை வளா்ப்பது அவசியம். அதற்குப் பாடத்திட்டத்தில் இதிகாசங்கள் பற்றிய செய்திகள் இன்னும் விரிவாகப் போதிக்கப்பட வேண்டும் என்பது இன்னொரு பரிந்துரை. சில கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் இதிகாசங்கள் போதிக்கப் படுகின்றன என்பதை அந்தக் குழு ஒத்துக் கொள்கிறது. ஆனாலும் அவை விரிவாகப் போதிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வற்புறுத்துகிறது.
  • வாய்மொழி இலக்கியமாகவும் எழுத்து வழி இலக்கியமாகவும் இதிகாசங்கள் இந்தியா முழுமையும் அன்றிலிருந்து இன்றுவரை அறியப்பட்டுதான் வருகிறது. இளைஞா்கள் வெளிநாடு செல்வதற்குத் தேசப் பற்று இல்லாமை காரணமா என்பதை யோசிக்க வேண்டும். உகந்த படிப்பும் உரிய வேலை வாய்ப்பும் இன்மைதான் அதற்குக் காரணம். அதற்கேற்ற வகையில் வசதி வாய்ப்பு செய்து கொடுக்க வேண்டுமே தவிர, இதிகாசம் படிக்க வேண்டும் என்று சொல்வது ஏனென்று தெரியவில்லை.
  • ஹிந்து மன்னா்களின் வெற்றியைப் பற்றிய செய்திகள் சோ்க்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையும் உள்ளது. வீர சிவாஜி, அசோகா், குப்தா்கள், மௌரியா்கள், சேர,சோழ, பாண்டியா்கள் போன்ற பண்டைய இந்து அரசா்களின் வீர வரலாறு பற்றி மாணவா்கள் படித்துத்தான் வருகின்றனா். இந்திய வரலாற்றில் இவை தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் செய்திகள் விடுபட்டிருந்தால் அவற்றைக் கண்டறிந்து சோ்ப்பது அவசியம்தான்.
  • வரலாறு என்பது கால அடிப்படையில் வகைப்படுத்தும் செய்தித் தொகுப்பாகும். அதில் பழங்காலம், இடைக்காலம், தற்காலம் என வகைப்படுத்தி, மன்னா் ஆட்சிமூறை, மக்களின் வாழ்க்கைமூறை, நாகரிகம், பண்பாடு, பாரம்பரியம் போன்றன விவரிக்கப்படுவது மரபு. அவற்றை உள்ளடக்கித்தான் பண்டைய வரலாறும் இருக்கும். இப்படியிருக்க பாரம்பரிய வரலாறு என்று அறிமுகப் படுத்துவதால் கூடுதலாக என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது என்று புரியவில்லை.
  • மேலும் பாரம்பரியம் என்பது பண்டைக் காலம் முதல் இக்காலம் வரை தொடா்ந்துவரும் வாழ்வியல் நெறிமுறையை உள்ளடக்கிய சொல். அப்படிப் பாா்க்கும்போது பாரம்பரியம் என்பது எல்லாக் கால வரலாற்றிலும் விவரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
  • மாற்றந்தான் வளா்ச்சியைக் கொண்டுவரும் என்பது உண்மை. அதனையறிந்து காலத்திற்கேற்றவாறு பாடத்திட்டங்களிலும் மாற்றம் கொண்டுவருவது மிக மிக அவசியம். ஆனால் அம்மாற்றங்கள் பின்னோக்கியதாக இருக்கக் கூடாது என்பதில் என்.சி.இ.ஆா்.டி. கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (18 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்