- உறுப்பு தானம் குறித்த ஆய்வு ஒன்று சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. "எக்ஸ்பிரிமென்ட்டல் அன்ட் கிளினிக்கல் டிரான்ஸ்பிளான்டேஷன் ஜர்னல்' என்பது உறுப்பு தானம், உறுப்பு தான மாற்று சிகிச்சை குறித்த விவரங்களுக்காகவே வெளியாகும் மருத்துவ இதழ். அந்த இதழில் வெளியாகி இருக்கும் ஆய்வுக் கட்டுரை, உறுப்பு தானம் குறித்து மீண்டும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது.
- 1995 முதல் 2020 வரையிலான கால் நூற்றாண்டுகால உறுப்பு தானம் குறித்த புள்ளிவிவரம் அந்த ஆய்வுக் கட்டுரையில் தரப்பட்டிருக்கிறது. அதன்படி, இந்தியாவில் நான்கு ஆண்களுக்கு உறுப்பு தான சிகிச்சை நடைபெறும்போது, உறுப்பு தானம் பெறும் பெண் நோயாளியின் எண்ணிக்கை ஒன்று மட்டுமே. மொத்தம் நடைபெற்ற 36,640 உறுப்பு மாற்று சிகிச்சைகளால் பயனடைந்தவர்களில் 29,000-க்கும் அதிகமானவர்கள் ஆண்கள். பெண்களின் எண்ணிக்கை வெறும் 6,940 மட்டுமே.
- உறுப்பு தானம் வழங்கிய உயிரிழந்த ஆண் நன்கொடையாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், உயிரோடு வாழும் உறுப்பு தான நன்கொடையாளர்களில் பெண்களின் எண்ணிக்கைதான் அதிகம். இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலான உறுப்பு தான நன்கொடையாளர்கள் உயிர் வாழ்பவர்கள். மொத்த உறுப்பு தானத்தில் அவர்களின் பங்கு 93% எனும்போது, அதில் பெரும்பங்கு வகிப்பவர்கள் பெண்கள் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
- உறுப்பு தானம் வழங்கும் உயிர் வாழும் நன்கொடையாளர்களில் ஏறத்தாழ 80% அளவில் பெண்கள் இருக்கிறார்கள். அதாவது, உறுப்பு தானம் பெற்ற ஆண்கள் அதே அளவிலானவர்கள். உறுப்பு தானம் வழங்கிய பெண்களில் பெரும்பாலோர் மனைவியாகவோ, தாயாகவோ இருப்பவர்கள். அடுத்தபடியாக பெண் குழந்தைகளோ, சகோதரிகளோ இருக்கக் கூடும். பொருளாதார ரீதியிலான நிர்பந்தம் காரணமாக பெண்கள் தங்கள் குடும்பத்தில் ஆண் உறுப்பினர்களுக்கு உறுப்பு தானம் செய்கிறார்கள் என்று கருத இடமிருக்கிறது.
- உலகில் மிகக் குறைந்த அளவில் உறுப்பு தானம் நடைபெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவின் தேவைக்கும், உறுப்பு தான நன்கொடைக்கும் இடையேயான இடைவெளி மிக மிக அதிகம். அமெரிக்கா போன்ற நாடுகளில் 10 லட்சம் பேருக்கு 40 உறுப்பு தான நன்கொடையாளர்கள் காணப்படுகிறார்கள் என்றால், இந்தியாவில் ஒருவர் என்கிற அளவில்கூட அந்த விகிதம் இல்லை.
- ஒருகாலத்தில் ரத்த தானம் வழங்குவதற்குக்கூட அச்சப்பட்ட நிலை மாறி, இப்போது ரத்ததானம் வழங்குவதை பெரும்பாலோர் கடமையாகவும் பெருமையாகவும் கருதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், உறுப்பு தானத்தில் அதுபோன்ற சமூக ரீதியிலான மனமாற்றம் இன்னும் ஏற்படவில்லை.
- அரசு புள்ளிவிவரத்தின்படி கடந்த ஆண்டில் இந்தியாவில் 15,561 உறுப்பு மாற்று சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. 2013-இல் 4,990-ஆக இருந்த இந்த எண்ணிக்கை, ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது என்பது சற்று ஆறுதல். உறுப்பு மாற்று சிகிச்சையில் பெரும்பாலானவை சிறுநீரகம் தொடர்பானவை. 2022-இல் 11,423 சிறுநீரக மாற்று சிகிச்சைகள் நடந்திருக்கின்றன.
- மாற்று சிகிச்சையின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது என்று மகிழ்ச்சி அடைந்துவிட முடியாது. ஆண்டுதோறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான சிறுநீரகச் செயலிழப்புகள் நடக்கும்போது, 11,423 மாற்று சிகிச்சைக்குத்தான் சிறுநீரக தானம் கிடைத்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இதேநிலைதான் கல்லீரல், கணையம், இதயம் ஆகியவற்றின் மாற்று சிகிச்சையிலும் காணப்படுகிறது. கல்லீரல், கணையம், நுரையீரல், இதயம் உள்ளிட்ட பாதிப்புகளால் இந்தியாவில் ஆண்டுதோறும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கிறார்கள்.
- தவறான புரிதல்களும் நம்பிக்கைகளும் போதுமான அளவு உறுப்பு தானம் இல்லாமல் இருப்பதற்குக் காரணங்கள். தங்களது உடல்நிலை பாதிக்கப்படும் என்கிற தவறான கருத்து பலரையும் சிறுநீரக, கல்லீரல் தானம் வழங்குவதில் தயக்கம் ஏற்படுத்துகிறது. விபத்தாலோ, மூளைச்சாவு காரணமாகவோ உயிரிழந்த உறவினர்களின் உறுப்புகளை தானம் செய்வதில்கூட புரிதலின்மை தடுக்கிறது.
- இந்தப் பின்னணியில்தான் உறுப்பு மாற்று சிகிச்சைகளை ஊக்கப்படுத்த மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் சட்டங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்த முற்பட்டது. இதுவரை 65 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு உறுப்பு தானம் வழங்குவது தடை செய்யப்பட்டிருந்தது. ஆயுள்காலம் அதிகரித்துவிட்ட நிலையில், வயதுவரம்பை அகற்ற முற்பட்டிருக்கிறது அரசின் சட்டத் திருத்தம். உறுப்பு தானத்துக்காக பதிவு செய்பவர்களில் 40% பேர் 65 வயதைக் கடந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
- வாழும்போதும் சரி, மரணத்துக்குப் பிறகும் சரி உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது. கடந்த ஆண்டு உறுப்பு மாற்று சிகிச்சை நடத்தப்பட்டவர்கள் 15,561 பேர். தானம் கிடைத்த 12,796 உறுப்புகள் உறவினர்கள், நண்பர்கள் அல்லது அவர்களுடையதாகவே இருந்தன. உயிரிழப்புக்குப் பிறகு தங்களது உறுப்புகளை தானம் செய்தவர்கள் 2,765 பேர் மட்டுமே.
- உறுப்பு மாற்று சிகிச்சையிலும் உறுப்பு தானத்திலும் இந்தியாவுக்கு முன்னுதாரணமாகத் தமிழகம் இருக்கிறது என்பது பெருமைப்படக்கூடிய செய்தி. உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு என்கிற தமிழக அரசின் முடிவை ஏனைய மாநிலங்களும் பின்பற்றத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது!
நன்றி: தினமணி (24 – 11 – 2023)