TNPSC Thervupettagam

மாற்று எரிசக்திகள் இருக்கும்போது அணு உலைகள் எதற்கு?

March 19 , 2020 1764 days 848 0
  • அமெரிக்க அணு உலைகளை வாங்கிக்கொள்வோம்; 2008-ல் இந்தியா அளித்த வாக்குறுதி இது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர், அமெரிக்க அதிபர் சந்திக்கும்போதெல்லாம் இந்த வாக்குறுதியை அமெரிக்கா நினைவுபடுத்தாமல் இருந்ததே இல்லை.
  • சமீபத்தில் இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதன்முறையாக வந்தபோதும் கூட்டறிக்கையில் இது இடம்பெற்றது. இந்தியாவில் ஆறு அணு உலைகளைக் கட்டித்தருவதற்குத் தொழில்நுட்ப-வணிக பேரத்தை விரைந்து முடிப்பதற்காக இந்திய அணு சக்தி கார்ப்பரேஷன், வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனம் ஆகியவற்றை இரு தலைவர்களும் ஊக்குவித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்க அணு உலைகள் பாதுகாப்பானவையும் அல்ல, விலை நியாயமானதும் அல்ல. எனவே, இந்த பேரத்தை இறுதிசெய்யாமல் அப்படியே கைவிட்டுவிட வேண்டும். பிற நாடுகளின் அணு உலைகளைவிட அமெரிக்க அணு உலை மூலம் தயாரிப்பது அதிகச் செலவு பிடிப்பது. இதனால், மின்சாரத்தையும் அதிக விலைக்கே விற்றாக வேண்டும்.
  • அணு உலைகளில் சாதாரண பழுதுகள் முதல் மிகப் பெரிய விபத்துகள் வரை நடக்கும் வாய்ப்புகள் அதிகம். ஜப்பானின் புகுஷிமா அணு மின் நிலையத்தில் 2011-ல் ஏற்பட்ட விபத்து ஓர் உதாரணம்.

சிவப்புக் கொடி காட்டுங்கள்

  • ‘அணு உலைகளால் விபத்து நடந்தால் அதற்கு எங்களைப் பொறுப்பாக்கக் கூடாது’ என்று முதலில் நிபந்தனை விதித்துவிட்டுத்தான் பேரத்தைத் தொடங்கியிருக்கிறது வெஸ்டிங்ஹவுஸ். அணு உலைகள் பத்திரமானவை என்று தங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதைத்தான் இப்படிக் கூறியிருக்கிறது.
  • அமெரிக்காவிடமிருந்து அணு உலைகளை இறக்குமதிசெய்வதால் முக்கியமாகப் பலனடையப்போவது வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனமும் இந்திய அணு சக்தி நிறுவனமும்தான். காற்றாலை மின்னுற்பத்தி, சூரிய ஒளி மின்னுற்பத்தி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுவது அதிகரித்துவருகிறது. எனவே, இந்திய அணு சக்தி நிறுவனம் முக்கியத்துவம் இழந்துவிட்டது.
  • அணு உலை பேரத்தை அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்துவதற்குத் தனிப்பட்ட காரணமும் இருக்கிறது. வரும் நவம்பரில் அதிபர் தேர்தலைச் சந்திக்கும் ட்ரம்ப், ‘அமெரிக்காவின் உற்பத்தித் துறையை மீட்சிபெற வைப்பேன்’ என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்துவருகிறார்.
  • வெஸ்டிங்ஹவுஸ் உட்பட பல அணு சக்தி நிறுவனங்கள் தங்களுக்குச் சலுகை காட்டுமாறு ட்ரம்பை நெருக்கிவருகின்றன; அமெரிக்க அணு உலைகளைப் பிற நாடுகள் வாங்கினால்தான் தங்களுக்கு வருமானம், லாபம் என்று ட்ரம்புக்கு அழுத்தம் தருகின்றன. அதுவுமின்றி அவருக்குத் தனிப்பட்ட நலனும் இதில் இருக்கிறது. அவருடைய மருமகனும் ஆலோசகருமான ஜேரட் குஷ்னர், வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனத்துடன் ஒருவகையில் சம்பந்தப்பட்டிருக்கிறார். சமீபத்திய பயணத்தின்போது அவரும் இந்தியா வந்திருந்தது நினைவுகூரத்தக்கது.
  • குஷ்னரின் குடும்பம் மனை வணிக விற்பனையில் ஈடுபட்டுவருகிறது. நியூயார்க் நகரில் குஷ்னர் குடும்பத்துக்குச் சொந்தமான பலமாடிக் கட்டிடத்தில், கனடா நாட்டு நிறுவனம் 100 கோடி டாலர்களுக்கும் மேல் 2018-ல் முதலீடுசெய்தது.
  • அந்த முதலீட்டில் அந்நிறுவனத்துக்கு லாபமே இல்லை. ஆண்டின் தொடக்கத்தில் கனடா நிறுவனத்தின் சார்பு நிறுவனமான புரூக்ஃபீல்ட் பிஸினஸ் பார்ட்னர்ஸ் நிறுவனம், வெஸ்டிங்ஹவுஸ் எலக்ட்ரிக் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இந்தியாவுடன் அணு உலை உடன்பாடு ஏற்பட்டால் புரூக்ஃபீல்ட் நிறுவனத்துக்குப் பல நூறு கோடி டாலர்கள் லாபம் கிடைக்கும். எனவே, ட்ரம்புடன் குஷ்னரும் வந்தது தார்மீக அடிப்படையில் முற்றிலும் முரணானது.

நுகர்வோர் மீது சுமை ஏறும்

  • அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் கட்டப்பட்டுவரும் இரண்டு அணு மின் உற்பத்தி அலகுகளின் மதிப்பு சுமார் ரூ.96,000 கோடி. வெஸ்டிங்ஹவுஸ் இந்தியாவுக்கு விற்க விரும்பும் ஆறு அணு மின் உலைகளின் மொத்த மதிப்பு ரூ.6 லட்சம் கோடி. இந்தியா இவற்றை வாங்கினால் இந்தச் செலவை நுகர்வோர்களும் வரிசெலுத்துவோரும்தான் சுமக்க நேரும்.
  • இவற்றின் விலையில் அந்நிறுவனம் 30% குறைத்தால்கூட, முதல் ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.25 என்ற விலையில் விற்றால்தான் கட்டுப்படியாகும். சூரிய ஒளி மின் நிறுவனங்கள், யூனிட் ரூ.3-க்கு மின்சாரம் விற்கத் தயாராக உள்ளன.
  • கடந்த 10 ஆண்டுகளில் காற்றாலை, சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்கள் உற்பத்திச் செலவை 70% முதல் 90% வரையில் குறைத்துவிட்டன. எதிர்காலத்தில் இது மேலும் குறையும்.
  • அணு உலைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதால் உற்பத்திக்காகும் செலவு மட்டுமல்லாமல், வேறு செலவுகளும் ஆண்டுக்கணக்கில் தொடரும். செர்னோபில் என்ற ஒரு நிலையில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு ஏற்பட்ட கதிரியக்க விளைவால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் பரப்பளவுள்ள பகுதி குடியிருக்கவும் முடியாமல் விவசாயத்துக்கும் பயன்படாமல் வீணானது. அந்தப் பகுதியில் மனிதர்களே வாழக் கூடாது என்று அரசால் தடைவிதிக்கப்பட்டது. ஜப்பானின் புகுஷிமா அணு மின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்துக்குப் பிறகு கதிரியக்கக் கழிவுகளை அகற்ற ரூ.14-42 லட்சம் கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
  • புகுஷிமா விபத்துக்குக் காரணம் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் தயாரித்த ‘மார்க்-1’ அணு உலை வடிவமைப்பில் ஏற்பட்ட கோளாறு. விபத்துக்குப் பிறகு கழிவுகளை அகற்றவும், மக்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் இழப்பீடு எதையும் அந்த நிறுவனம் தரவேயில்லை. அந்நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற ஜப்பானியச் சட்டத்தில் இடமில்லாமல் இருக்கிறது. இதே போன்ற ஏற்பாட்டைத்தான் இந்தியாவுடனும் செய்துகொள்ள விரும்புகிறது வெஸ்டிங்ஹவுஸ்.
  • அணு உலையில் பழுது ஏற்பட்டு விபத்து நேரிட்டால் இந்தியாவுக்கு ஒரு டாலரைக்கூட அந்நிறுவனம் தராது. இந்தியச் சட்டங்கள் ஏற்கெனவே உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாகத்தான் இருக்கின்றன என்றாலும் இழப்பீடு கோராமலேயே விட்டுவிட அனுமதிப்பதில்லை. இந்தியாவுக்கு அணு உலைகளை விற்க விரும்பும் வெளிநாட்டு நிறுவனங்கள் விபத்துக்கு தாங்கள் ஜவாப்தாரியல்ல என்பதையே முதல் நிபந்தனையாக்குகின்றன. இந்திய அரசும் மறைமுகமாக இதை ஆதரிக்கிறது.

எப்போதோ கைவிட்டிருக்க வேண்டும்

  • மஹாராஷ்டிரத்தின் தாராப்பூரில் உள்ள முதலாம், இரண்டாம் அணு உலைகள் தொடங்கி இறக்குமதியாகும் அனைத்து அணு உலைகள் தொடர்பாக நமக்கு மோசமான அனுபவங்களே மிஞ்சியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இறக்குமதிசெய்யப்பட்டு உற்பத்தியைத் தொடங்கியது கூடங்குளத்தில் உள்ள முதலாவது, இரண்டாவது அணு உலைகள்தான். 2018-19-ல் இவற்றில் 32%, 38% அளவுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தியானது. கடுமையான செலவுக்குப் பிறகு உற்பத்தியும் முழுக் கொள்ளளவை எட்டுவதில்லை.
  • கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உற்பத்தியான மொத்த மின்சாரத்தில் அணு மின்சாரத்தின் பங்கு வெறும் 3%. அணு உலைகள் பாதுகாப்பானவை அல்ல, அணு மின்சாரத் தயாரிப்புக்குப் பல மடங்கு செலவு பிடிக்கிறது, அணு மின்சார உற்பத்தியும் அபரிமிதமாக இல்லை என்ற நிலையில் தொடர்ந்து அணு உலைகளை இறக்குமதிசெய்வதென்று அரசுகள் தீர்மானிப்பது எதனால் என்று புரியவில்லை.
  • தெளிவான சிந்தனை உள்ளவர்கள் என்றால் இதை எப்போதோ கைவிட்டிருக்க வேண்டும். குஜராத்தின் மித்தி விர்டி என்ற இடத்தில் அணு உலைகளை நிறுவ அரசு திட்டமிட்டபோது மக்கள் கடுமையாக எதிர்த்தனர். இந்த அணு உலைகள் குஜராத்துக்கு இனி வரவே வராது என்று பாஜக முதல்வர் விஜய் ரூபானி 2018-ல் அறிவித்தார்.
  • தன்னுடைய மாநிலத்தின் முடிவிலிருந்து பிரதமர் ஒரு பாடம் கற்று, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இனி அணு மின் உற்பத்தி கிடையாது என்று அறிவிக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (19-03-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்