- மாசு ஏற்படுத்தாத மற்றொரு ஆற்றல், காற்றாலை மின்னாற்றல். ஆண்டில் பெரும்பான்மைக் காலத்தில் காற்று வீசும் திறந்த வெளிகள் காற்றாலை அமைப்பதற்கு ஏற்ற இடங்கள். காற்றாலை மின் உற்பத்திக்கான வசதி என்று எடுத்துக்கொண்டால், உள்ளூரிலேயே மின்னாற்றல் உற்பத்தி செய்து, விநியோகம் செய்துகொள்ளும் வசதி இதில் உண்டு.
- வேளாண்மை உள்ளிட்ட பல்தொழில் நிலப்பரப்புகளில் காற்றாலைகளை நிறுவிக்கொள்ள வாய்ப்பு உண்டு. வேறு வகையான ஆற்றல் உற்பத்திக்கு வாய்ப்பற்ற தொலைவான இடங்களிலும் தீவுகளிலும் காற்றாலைகள் சிறந்த மாற்று. மின் பொறியாளர்களுக்கும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் நிறைய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திவரும் துறை இது.
- பொருளாதார அளவில் காற்றாலை நிறுவும் செலவும் பராமரிப்புச் செலவும் மிகுந்த ஒன்றே. ஒரு காற்றாலை அமைப்பதற்குக் குறைந்தபட்சம் ஓர் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. மிகச் சிறிய உற்பத்தி அலகான 250 கிலோவாட் ஆலையை நிறுவுவதற்கு 3 முதல் 15 கோடி ரூபாய்வரை செலவாகும்.
- பத்து டன் எடை கொண்ட உற்பத்தி அலகு 20 டன் எடை கொண்ட தூணில் நிறுவப்படுகிறது. அடித்தளக் கட்டுமானத்தின் ஆயுள் உத்தரவாதம் 20 ஆண்டுகள்தான். அதற்குப் பிறகு அலகைப் பிரித்து மற்றோரிடத்தில் மீளநிறுவ வேண்டியிருக்கும்.
- சூழலியல் பார்வையில், காற்றாலைகள் வனவுயிர்களுக்கும் பறவைகளுக்கும் பாதகமானவை. பறவைகள் காற்றாடியில் அடிபட்டு இறப்பது வெகு இயல்பாகிவிட்டது. இயந்திரங்கள் ஏற்படுத்தும் இரைச்சல் விலங்குகளின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கிறது.
கடலில் காற்றாலைகள்:
- தமிழகத்தைச் சார்ந்த உள்கடல்களில் காற்றாலைகளை நிறுவுவதற்கு மாநில அரசு அனுமதி அளித்திருப்பதாகத் தெரிகிறது. உள்கடலில் காற்றாலைகளை நிறுவினால் உற்பத்தித்திறனை அதிகரிக்கலாம் என்கிற பார்வை, ஆற்றல் வல்லுநர் களிடம் இருக்கிறது. நிலத்தைவிட கடலில் காற்று அதிகமாகவும் சீராகவும் வீசிக்கொண்டிருக்கும். மணிக்கு 19 கி.மீ. வேகத்தில் வீசும் காற்றினால் உற்பத்தி ஆவதை விட, 24 கி.மீ. வேகக் காற்றினால் இரண்டு மடங்கு ஆற்றலை உற்பத்தி செய்யலாம்.
- காற்றாலைகளைக் கடலில் 60 மீட்டருக்கு மேல் ஆழமுள்ள பகுதிகளில் நிறுவுவதும் பராமரிப்பதும் கடினமானது, செலவு மிகுந்தது. கடலில் மிதக்கும் காற்றாலைகள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பரிசீலனையில் உள்ளன. எனினும் அலைகள், பலத்த காற்று, புயல் போன்றவற்றால் காற்றாடிகள் பழுதாகும் அபாயம் உண்டு.
- ஆழ்கடல் காற்றாலைகளில் உற்பத்தியாகும் மின்னாற்றலைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்ப்பதற்கான கடலடி மின்வடங்களை உற்பத்திசெய்வதும் செலவு மிகுந்தது. காற்றாலைகள் கடலுயிர்களுக்கும் கடல் சூழலியலுக்கு என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்த ஆழமான ஆய்வுப் படிப்புகள் இன்றுவரை பெரிதாக இல்லை.
- ஆனால், ஆழ்கடலில் நிறுவப்படும் எந்தவொரு கட்டுமானம் ஆயினும், வலசை உயிரினங்களையும் மெல்லுடலிகள் போன்ற விலங்கு களையும் பாதிக்கும் என்பது அடிப்படை அறிவியல் உண்மை. அது போலவே, மீனவர்கள் வழமையாகப் புழங்கும் கடல்களில் காற்றாலைகள் நிறுவப்பட்டால், அவர்களது வாழ்வாதாரமும் பாதிப்புக்கு உள்ளாகும்.
ஹைட்ரஜன் செல்:
- நீர்மக் கலன் (ஹைட்ரஜன் செல்) மற்றொரு பசுமை ஆற்றல் மாற்று. உள்ளெரி இயந்திரங்களில் (Internal Combustion Engines) புதைபடிவ எரிபொருளுக்குப் பதிலாக நீர்ம வளியைப் பயன்படுத்திக் கரிமவளி உமிழாமல் மின்னாற்றலும் வெப்ப ஆற்றலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- ஹைட்ரஜன் உயிர் வளியுடன் சேரும்போது வெப்பமும் நீரும் வெளியேறுகிறது. ஹைட்ரஜன் மிகச்சிறந்த ஆற்றல் தேக்கி. இதனை ஒரு எரிபொருள் கலனில் செலுத்தி மின்சாரத்தையும், வெப்பத்தையும் உருவாக்கலாம்; அல்லது, எரித்து உள்ளெரி பொறியை இயக்கலாம்.
- இந்த இரண்டு முறைகளிலும் ஹைட்ரஜன் உயிர் வளியுடன் இணைந்து, நீர் மூலக்கூறுகளை வெளியேற்றும். நீரிலிருந்து மின்னாற்பகுப்பு மூலம் தூய்மையான ஹைட்ரஜன் வளியையும் உயிர் வளியையும் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட ஹைட்ரஜன் வளியை எரிபொருள் கலனில் எரிபொருளாகவும் பயன்படுத்தலாம்.
- புதைபடிவ எரிபொருளுடன் ஹைட்ரஜன் வளியைக் கலந்து எரித்துவருகின்றனர். பிற்காலத்தில் முழுக்க முழுக்க ஹைட்ரஜன் வளியை எரிக்கும் இயந்திரங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கலாம். ஹைட்ரஜன் வளி உயர் வெப்பநிலையில் எளிதில் தீப்பிடித்துவிடும் என்பது அதைச் சேமித்துப் பயன்படுத்துவதிலுள்ள அடிப்படையான சிக்கல். இப்போது ஹைட்ரஜன் வளியைப் பாதுகாப்பாகக் கையாளும் தொழில்நுட்பங்கள் வந்தாயிற்று.
மின்சார கார் ஒரு மாயமான்:
- புதைபடிவ எரிபொருள் பயன் பாட்டைக் குறைக்கும் உபாயமாக கார்களுக்கு ‘மின்கலம்’ பரிந்துரைக்கப் படுகிறது. மின்கலத்தைப் பயன்படுத்தும் இரண்டு, நான்கு சக்கர வண்டிகள் சாலைகளில் ஓடத் தொடங்கிவிட்டன. மின்சார கார் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க வளப் பயன்பாடு, வரும் ஆண்டுகளில் ஏழு மடங்கு உயரும் என்கிறார்கள். ஆனால், உலகம் ‘பசுமை மாற்று’ என்னும் குருட்டு நம்பிக்கையில் ஆழ்ந்திருக்கிறது என்கிறார் நிலவியலாளர் சைமன் மிகாக்ஸ்.
- மின்கலம் தயாரிப்பதற்கான மின்சக்தியை உற்பத்தி செய்ய புதைபடிவ எரிபொருள் தேவை; மின்கலங்களை உண்டாக்க லித்தியம், கோபால்ட், நிக்கல், வெண்கலம் தவிர, மேலும் சில அரிய வகைத் தனிமங்களும் தேவைப்படும். அவை கிடைக்கும் நிலப்பகுதிகளை அகழ்ந்துதான் பெற முடியும்.
- அதற்காகப் புதிதாகச் சுரங்கங்கள் தோண்ட வேண்டியிருக்கும். ஏற்கெனவே சுரங்க அகழ்வுக்காக உலகின் மலை, வனப் பகுதிகளைக் கணிசமாக அழித்துவிட்டோம். பசுமைப் போர்வையைக் குறைத்தால் புவி வெப்பநிலை மேலும் உயரும் என்கிற உண்மை இன்னும் உலகுக்கு உறைக்கவில்லை.
மாற்றுக்கு விலை என்ன?
- ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் சுரங்கங்களின் சுற்றுச்சூழல் தாக்கங்களை ஆய்வுசெய்துவரும் லாரா சோன்டர், ‘சுரங்கங்களின் சூழலியல் தாக்கம் உலகின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பரப்புக்கு விரிவடைந்திருக்கிறது’ என்கிறார். அதாவது ஐந்து கோடி சதுர கிலோமீட்டர் பரப்பு! ‘புதிய சூழலியல் பாதிப்புகள் இல்லாமல் மாற்று ஆற்றலை சாத்தியப்படுத்தவே முடியாது’ என்கிறார் சூழலியல் பொருளாதார ஆராய்ச்சியாளர் ஸ்டெஃபான் கில்ஜம்.
- அப்படியென்றால், ஆற்றல் தேவைக்குத் தீர்வுதான் என்ன? ஆற்றல் பயன்பாட்டைக் குறைத்து கொள்வதுதான். மாற்றம் வந்தே தீரும். ஒன்று- நம் வாழ்க்கைமுறையில் அது இயல்பாக நிகழ வேண்டும், அல்லது இயற்கை அதிரடியாக அதை நிகழ்த்திக்காட்டிவிடும்!
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 08 – 2024)