TNPSC Thervupettagam

மாற்றுத்திறனாளி உரிமைகள்: சமூக மனமாற்றம் அவசியம்

May 30 , 2024 32 days 91 0
  • 2024 மார்ச் மாதம் ‘சுதா வி.மோகன் எதிர் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி வழக்’கில் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி நாகரேஷ் வழங்கிய தீர்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்க வேண்டிய குறைந்தபட்சப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்ல, அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியச் செய்தி இந்தத் தீர்ப்பில் அடங்கியிருக்கிறது.

வழக்கின் பின்னணி:

  • இவ்வழக்கில் மனுதாரரின் கணவர் ஒரு தொழில்முனைவோர். வங்கியில் ரூ.57 லட்சம் கடனாக வாங்கி, கட்டிடம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார். முறையாகக் கடன் தவணையும் செலுத்திவந்தார். ஆனால், அவருக்குத் தலையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் அறுவைசிகிச்சையால் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். ஏறக்குறைய மூளைச்சாவு நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்.
  • மாதம் ரூ.3 லட்சம் மருத்துவச் செலவு ஆகும் நிலையில், அவரது குடும்பத்தினரால் வங்கிக்குத் தவணை செலுத்த முடியவில்லை. இதையடுத்து, நிதிச் சொத்துக்களைப் பாதுகாத்தல் - அமலாக்கச் சட்டம் (SARFAESI Act 2002) கீழ் கடனுக்காக அவரது சொத்தை எடுக்க, வங்கி நடவடிக்கை எடுத்தது. ஆனால், சொத்தை விற்றுக் கடனை அடைக்க அவரது மனைவி சிறிது காலம் அவகாசம் கேட்டார். வங்கி தர மறுத்துவிட்டது.
  • இதையடுத்து, உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘கோமா நிலையில் உள்ள ஒருவர் மாற்றுத்திறனாளி என்ற நிலையில் உள்ளவர். அவரின் இயலாமைக்கு அரசு உதவ வேண்டும் என்பதால், அரசின் சார்பாகப் பாதிக்கப்பட்டவரின் சொத்தை விற்பனை செய்ய கோட்டாட்சியர் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
  • சொத்தை விற்று நோயாளியின் மனைவி வங்கிக் கடனை அடைப்பார்; அதற்காக வங்கி இரண்டு மாதங்களுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது’ எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு, நீதிமன்றத்தின் கருணைக்கும் அப்பால் இந்தக் கோரிக்கையை வைக்க மாற்றுத்திறனாளிக்குச் சட்டரீதியான உரிமை உண்டு என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள்:

  • கடந்த 2011ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் குறித்த ஐ.நா-வின் அறிக்கையானது, உலக மக்கள்தொகையில் 15% பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளதாகக் குறிப்பிட்டது. கடைசியாக, நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி (2011) இந்தியாவில் 2.68 கோடி பேர் மாற்றுத்திறனாளிகள்.
  • இது நாட்டின் மக்கள்தொகையில் 2.21%. ஆனால், உலக வங்கி இந்த எண்ணிக்கை 4 கோடியிலிருந்து 8 கோடி வரை இருக்கலாம் என்கிறது. முரண்பட்ட புள்ளிவிவரங்கள் இருந்தபோதும், உலகில் அதிக மாற்றுத்திறனாளிகள் வாழும் நாடு இந்தியா என்பதில் சந்தேகமில்லை.
  • கர்ப்பிணிகளுக்குப் போதிய பராமரிப்பு, பாதுகாப்பு, உணவு, மருத்துவம் உள்ளிட்டவை முறையாகச் சென்றடையாத நிலையில், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளில் சிலர் மாற்றுத்திறனாளிகள் ஆகின்றனர். மற்றொரு பிரிவினர், விபத்து உள்ளிட்ட பிற பாதிப்புகளால் மாற்றுத்திறனாளிகள் ஆகின்றனர்.
  • இவர்களில் 20% பேர் நடக்க இயலாதவர்கள், 19% பேர் பார்வைத் திறனற்றவர்கள், 19% பேர் கேட்கும் திறனற்றவர்கள், 8% பேர் பல்வேறு பாதிப்புகளை உடையவர்கள். இவர்களில் 10 வயதிலிருந்து 19 வயது வரை உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகம்.

மாறிய பார்வை:

  • கடந்த காலத்தில் சமூக வளர்ச்சியில் பின்தங்கியிருந்த மாற்றுத்திறனாளிகள் சமூக, பொருளாதார நிலைகளில் புறக்கணிப்பு நிலைக்கு ஆளாகியிருந்தனர். பின்னர், அவர்களுக்கு உதவும் நோக்கில் அரசு பல செயல்திட்டங்களை வடிவமைத்தது. எனினும், இந்தப் பார்வையானது அம்மக்களுக்குச் சமத்துவத்தையும் சுயமரியாதையையும் உறுதிப்படுத்தவில்லை.
  • அது மற்றவர்களுக்கு இணையாக நடத்தப்படுவதற்குப் பதிலாக ஒரு தாழ்வான நிலையில் மாற்றுத்திறனாளிகள் நடத்தப்படுவதாக உணரப்பட்டது. எனவே ‘உதவுதல்’ என்ற பார்வைக்கு மாற்றாக ‘உரிமையை அங்கீகரித்தல்’ என்னும் முழக்கத்தை மாற்றுத்திறனாளிகள் முன்வைத்தனர்.
  • இதன் தொடர்ச்சியாக, ஐ.நா. அவையானது மாற்றுத்திறனாளிகள் குறித்த சர்வதேச மாநாட்டில் மாற்றுத்திறனாளிகளின் சமத்துவ உரிமையை உலக நாடுகள் அங்கீகரிக்கும் நோக்கில், சட்டங்களையும் செயல்திட்டங்களையும் வகுக்க வேண்டிய கடமையை நிறைவேற்றியது.
  • இந்தியாவைப் பொறுத்தவரை 2016ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் உரிமையை அங்கீகரிக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. அதேவேளையில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் உரிமையை அனுபவிக்க ஏதுவாக அந்தச் சட்டத்தின் பிரிவு 14இன்படி குறைந்தபட்சப் பாதுகாப்பை (limited guardianship) அரசு வழங்க வேண்டும்.
  • இது சமத்துவத்தைப் பெற அவர்கள் நடத்தும் போராட்டப் பாதையில் ஒரு வெளிச்சம் தரும் விளக்கு அல்லது ஊன்றுகோல்போல இருக்க வேண்டும். ஆனால், இந்த உறுதிமொழி நடைமுறையில் செயல்படுத்தப்படாத ஒன்று. மாற்றுத்திறனாளிகள் தங்கள் போராட்டத்தைத் தாங்களே நடத்த வேண்டும் என்கிற நிலைதான் தொடர்கிறது.
  • அவர்கள் வாழ்க்கையில் அரசு எப்போதும் உடன் நிற்காது. அது போன்ற கடப்பாடு அரசுக்கு இருப்பதை, எப்போதும் அது உணர்ந்ததும் இல்லை. நீதிமன்றங்கள்கூட வெகு அரிதாகவே இந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகின்றன. மேலே சொன்ன கேரள உயர் நீதிமன்றத் தீர்ப்பு சமீபத்திய உதாரணம்.

அரசின் பாராமுகம்:

  • மாற்றுத்திறனாளிகளின் உரிமையை அங்கீகரிக்கும் சட்டம், 2016இன் கீழ் இந்தக் குறைந்தபட்சப் பாதுகாப்பைப் பெற மாவட்ட நீதிமன்றத்தையோ அல்லது மாவட்டக் கோட்டாட்சியரையோ அணுக வேண்டும்.
  • 2023 நவம்பர் மாதம் கேரள உயர் நீதிமன்றத்தில் ‘கே.ஏ.அபோட்டி எதிர் கொல்லங்கோட்டில் பதுமா மற்றும் சிலர்’ என்கிற வழக்கில், மனநலம் பாதிக்கப்பட்டவரின் சொத்து தொடர்பாகக் குறைந்தபட்சப் பாதுகாப்பு வழங்கக் கோரி, மாற்றுத்திறனாளியின் சகோதரர் வயநாடு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
  • ஆனால், அந்தக் குறைந்தபட்சப் பாதுகாப்பை வழங்கும் அதிகாரியாகக் கோட்டாட்சியரை அரசு நியமித்துள்ளதால், அவரிடம் மனுத் தாக்கல் செய்யுமாறு நீதிமன்ற மனுவை ஏற்காமல் நீதிமன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.
  • இந்த வழக்கு நீதிபதி வசந்த் பாலாஜியின் முன் வந்தபோது, “மாவட்ட நீதிமன்றம் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்தது சரியல்ல, மாற்றுத்திறனாளிகள் இந்தப் பாதுகாப்பைப் பெற மாவட்ட நீதிமன்றம் முன்போ அல்லது கோட்டாட்சியர் முன்போ மனு செய்ய முடியும். மனுதாரருக்கு இரண்டில் ஏதேனும் ஓர் அமர்வை நாட உரிமை உண்டு” எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
  • மாற்றுத்திறனாளிகளின் உரிமை குறித்து, அரசும் நீதிமன்றமும் கூடுதல் கவனமும் கரிசனமும் கொள்வது அவசியம். ஆனால், இதுபோன்ற கடமைகளை அரசு எப்போதும் உணர்ந்து செயல்படுவதில்லை. மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பைத் தனது தலையீடு மூலம் அரசு உறுதிசெய்யும்போதுதான், அம்மக்கள் சமத்துவத்தைப் பெறும் நிலை உருவாகும்.
  • தனது குடும்பம் தொடங்கி சமூகம் வரை சொத்து, வேலைவாய்ப்பு என எல்லா நிலைகளிலும் அவர்களுக்கு இந்தக் குறைந்தபட்சப் பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும். பொதுச் சமூகத்தில் நிலவும் அக்கறையின்மை, அறியாமை, உரிமைகள் சார்ந்த பார்வையின்மை, மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைக்கும் மற்றவர்களுக்கும் தொடர்பில்லை என்கிற நிலை ஆகியவை பொதுச் சமூகத்தை முழுதாக முடமாக்குகின்றன. இந்நிலை மாற வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரச்சினை எல்லோரின் பிரச்சினைதான் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (30 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்