TNPSC Thervupettagam

மாவோயிஸ்ட்டுகளே, மனம் திருந்துங்களேன்

April 28 , 2021 1367 days 570 0
  • சத்தீஸ்கரில் 22 இந்திய இராணுவ வீரர்கள், ஏப்ரல் 3 அன்று மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர்; மத்திய ரிசர்வ் போலீசின் அதிரடிப்பிரிவைச் சார்ந்த 31 வீரர்கள் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.
  • அன்று மாவோயிஸ்ட்டுகள் ஒரு வஞ்சக வலை விரித்தனர். சுக்மா மாவட்டத்திலுள்ள வனப்பகுதியில் தங்களது பொதுக்குழு கூடுவதாக ஒரு செய்தியை, மத்திய இராணுவப் படைக்கும், ஜார்க்கண்ட் காவல்துறைக்கும் கசியவிட்டனர்.
  • அந்த வஞ்சகம் குறித்துத் தெரியாத இராணுவமும் கோப்ரா படையும் அவர்களைச் சிறைபிடிப்பதற்காக வனப்பகுதியுள் நுழைந்தனர்.
  • மேலும் இராணுவத்தினர் நம்பும்படியாக "ஜீராகான் - டெகுலுகுடா' ஆகிய இரண்டு கிராமங்களையும் காலியாக்கி வைத்தனர்.
  • இராணுவத்தினரை வனப்பகுதியில் நுழையவிட்டுச் சுட்டுத் தள்ளினார்கள். கோப்ரா படையினர் வைத்திருந்த வலிமையான ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும் கவர்ந்து சென்றனர்.
  • மாவோயிஸ்ட்டுகள் படுகொலை நடத்தியது முதன்முறையன்று. 2010-ஆம் ஆண்டு தந்தேவாடா பகுதியிலுள்ள "டெட்மெட்லா' எனுமிடத்தில், 76 சி.ஆர்.பி.எஃப். படை வீரர்களை அநியாயமாகச் சுட்டுக் கொன்றனர்.
  • கோலா யாதவ் என்ற மாவோயிஸ்ட் 2007-ஆம் ஆண்டு, மனித உயிர்களை மிருகங்களைப் போல் வேட்டையாடியிருக்கிறார்.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிரிடி மாவட்டத்தில் சில்காரி கிராமத்தில், கலை நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் அனுப்பையும் 20 கிராமவாசிகளையும், கோலா யாதவ் தலைமையில் வந்த மாவோயிஸ்ட்டுகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொன்றனர்.

நக்சல்பாரிகள்

  • ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் நக்சல்பாரிகளும் மாவோயிஸ்ட்டுகளும் தோன்றுவதற்கு நியாயங்கள் இருந்தன.
  • வட மாநிலங்களில், மேற்கு வங்காளம், பிகார், ஒடிஸா, உத்தர பிரதேசம் ஆகிய இடங்களில் இருந்த விவசாயிகள் கிட்டத்தட்ட கொத்தடிமைகளாகவே நடத்தப்பட்டு வந்தனர்.
  • விவசாயிகளுடைய அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, பண்ணைகளில் வேலை செய்ய மட்டும் நிர்பந்திக்கப்பட்டனர். மறுத்துப்பேசினால் பண்ணைக்குள்ளேயே வெட்டிப் புதைத்துவிடுவார்கள்!
  • வட மாநிலங்களில் பெரும் மிராசுதாரர்களிடமும் பண்ணை முதலாளிகளிடமும் விவசாயிகள் படும் நரக வேதனைகளைப்பார்த்து, மேற்கு வங்காள கம்யூனிஸ்ட்டாகிய சாரு மஜும்தார் கொதித்து எழுந்தார். பொதுவுடமை இயக்கத்தின் தீவிரம் போதாது என்று எண்ணிய சில புரட்சியாளர்கள் "தெபாகா' எனும் இயக்கத்தைத் தோற்றுவித்து ஆயுதம் ஏந்தினர்.
  • கொத்தடிமைகளாக நடத்தப்படும் விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க "தெபாகா' இயக்கத்தைப் பயன்படுத்தத் துணிந்தார் சாரு மஜும்தார்.
  • அந்நேரத்தில் இமயமலையின் அடிவாரத்தில், டார்ஜிலிங் மாவட்டத்தில் இருந்த "நக்சல்பாரி' எனும் கிராமத்தில் விவசாயிகள் குறைந்த கூலி, அடக்குமுறைகள், அதிகார துஷ்பிரயோகங்கள், கடுந்தண்டனை போன்ற சித்ரவதைகளுக்குள்ளாகியிருப்பதை அறிந்து சாரு மஜும்தார் தம் நண்பர் "கானு சன்யால்' துணையோடு நக்சல்பாரிக்கு விரைந்தார்.
  • "அழித்தொழிப்பு நடவடிக்கைகள் மூலமே புரட்சியை ஏற்படுத்த முடியும்' என்ற முடிவுக்கு வந்தார்
  • நக்சல்பாரி விவசாயிகளை ஒன்று திரட்டி, அவர்களிடம், "நாடாளுமன்ற சனநாயகம் நயாபைசாவுக்குப் பிரயோஜனம் இல்லை. பண்ணையார்களிடத்தும் ஜமீன்தார்களிடத்தும் வேலை பார்த்தது போதும். அவர்களிடம் இருக்கும் நிலங்களை நீங்களே பிடுங்கிக் கொள்ளுங்கள். உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் என்பதால், நீங்களே நிலங்களைச் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்.
  • இனிப் பண்ணையார்கள் இருந்து ஆகப்போவது ஒன்றுமில்லை; அவர்களை நீங்கள் கொன்று விடலாம்.
  • உங்கள் படையை நீங்களே உருவாக்குங்கள்! இதுவரையில் உங்கள் உழைப்பைச் சுரண்டித் தின்ற நிலவுடமையாளர்களுக்கு நீங்களே தீர்ப்பு வழங்குங்கள்.
  • அரசாங்க நீதிமன்றங்களை நம்பிப் பலனில்லை; மக்கள் நீதிமன்றங்களை (ஜன் அதாலத்) நிறுவுங்கள்' என முழங்கினார் சாரு மஜும்தார்.
  • சாரு மஜும்தாரின் முழக்கங்கள் கிராமந்தோறும் எதிரொலித்தன. சீன கம்யூனிஸ்ட் கட்சி, சாரு மஜும்தாரின் முழக்கத்தை, "வசந்தத்தின் இடி முழக்கம்' என வருணித்தது.
  • நிலவுடமையாளர்களுக்கு எதிரான யுத்தத்தை நக்சல்பாரி விவசாயிகள் தொடங்கினர். எங்கும் தீவைப்புகள், கொலைகள், மரண ஓலங்கள். பண்ணையாளர்களின் நிலப்பத்திரங்கள் கொளுத்தப்பட்டன.
  • விவசாயிகள் பெற்றிருந்த கடன் பத்திரங்கள் மீட்கப்பட்டுக் கிழித்தெறியப்பட்டன. நில முதலாளிகள் குடும்பத்தோடு கூண்டில் ஏற்றப்பட்டனர். ஊருக்கொரு விதமாகத் தண்டனைகளை வழங்கினார்கள்.
  • பல இடங்களில் மிராசுதாரர்களுக்கு மரணதண்டனை விதித்து, அதனை நிறைவேற்றவும் செய்தனர். இதுதான் நக்சலைட்டுகளின் தொடக்கப்பணி. நக்சல்பாரி எனும் கிராமத்தில் தோன்றியதால், புரட்சியாளர்கள் நக்சல்பாரிகள் என அழைக்கப்பட்டனர்.

ஏன் மனம் திறக்க மறுக்கிறீர்கள்?

  • மேற்கு வங்காளத்தில் நக்சல்பாரிகளின் கொலைவெறி அத்துமீறிப் போகவே மாநில அரசு, கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.
  • நக்சலைட் இயக்கத்தின் பிதாமகராகிய சாரு மஜும்தாரை 16.7.1972 அன்று கைது செய்து, அலிப்பூர் சிறையில் அடைத்தது. சிறையிலே அவரை சித்ரவதைகளுக்கு உள்ளாக்கி, ஜூலை 28 ஆம் நாள் சுட்டுக் கொன்றனர்.
  • 1971-இல் மேற்கு வங்கத்தில் இருந்த குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பயன்படுத்தி, பிரதமர் இந்திராகாந்தி மத்திய இராணுவத்தையும், துணை இராணுவத்தையும், அதிரடிப் படையினரையும் அனுப்பி "ஆப்ரேசன் ஸ்டீபிள் சேஸ்' எனும் திட்டத்தின்கீழ் நக்சலைட்டுகளைக் கண்ட இடத்தில் சுடச் சொன்னார்.
  • அன்றைய பிரதமரின் தீவிர நடவடிக்கை, நக்சலைட்டுகளின் ஆணிவேரை அசைத்தது.
  • சத்தீஸ்கர் மாநிலம் பிரிந்தவுடன், மாவோயிஸ்ட்டுகள் புத்துயிர் பெற்று எழுந்தனர்.
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் 27 மாவட்டங்களில் 14 மாவட்டங்கள் ஆதிவாசிகள் வாழும் காடுகளாக அமைந்துவிட்டன.
  • சத்தீஸ்கர் மாநிலத்தில் 40 விழுக்காட்டுக்கு அதிகமான இடங்கள் அடர்த்தியான, அபாயகரமான காடுகள் நிறைந்தவை.
  • காடுகளுக்கு நடுவேயுள்ள நூற்றுக்கணக்கான குக்கிராமங்களில் என்ன நடக்கிறது, எத்தனை பேர் வசிக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் அரசுக்குக் கூடத் தெரியாது.
  • கிராமங்களுக்கு இடையே சாலைகள் கிடையாது; தொலைத் தொடர்பு சாதனங்கள், மின் விளக்குகள் எதுவும் கிடையாது. இந்தக் காடுகள்தாம் இப்பொழுது மாவோயிஸ்ட்டுகளின் சரணாலயங்கள் ஆகிவிட்டன.
  • வனங்களை ஆக்கிரமித்த மாவோயிஸ்ட்டுகள் தெருக்களை இணைக்கச் சாலைகளையோ, தெரு விளக்குகளையோ வர அனுமதிப்பதில்லை.
  • ஏப்ரல் மூன்றாம் தேதி கொலை வெறிக்குக் காரணமே, நெடுஞ்சாலைத்துறை ஒரு சாலை போட முயன்றதுதான்.
  • சில்ஜரில் இருந்து ஜாகர்குண்டாவுக்கு சாலை போடும் பணியைப் பொதுப்பணித்துறை தொடங்கியபொழுது, அதனை மாவோயிஸ்ட்டுகள் வன்முறையால் தடுத்து நிறுத்தி விட்டனர்.
  • மாநில அரசும், மத்திய அரசும் நிறைவேற்ற நினைக்கும் நலப்பணிளை மாவோயிஸ்ட்டுகள் அனுமதிப்பதில்லை.
  • வனத்துக்குள் வாழும் மக்கள், கிராமவாசிகள் மாவோயிஸ்ட்டுகளின் அடக்குமுறைக்கு பயந்தே வாழ்ந்து வருகின்றனர்.
  • மாவோயிஸ்ட்டுகளுக்குப் பயந்து, இராணுவத்தினரோ, அரசு அதிகாரிகளோ கேட்கும் எந்தக் கேள்விக்கும், வன மக்கள் பதில் தருவதில்லை.
  • வனப்பகுதிகளில் மருத்துவமனைகளோ பள்ளிக்கூடங்களோ கிடையாது. பேருந்துகளையே பார்க்காதவர்கள் ஆதிவாசிகள்; மலைவாழ் மக்கள்.
  • சிறுவர்கள் மாவோயிஸ்ட்டுகள் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்குத்தான் செல்ல முடியுமே தவிர, பள்ளிக்கூடம் செல்வதற்கு வாய்ப்பே இல்லை.
  • இராணுவத்தாலும், அரசாலும் மாவோயிஸ்ட்டுகளின் வன்முறைகளுக்கு முடிவு கட்டாமல் போகவே, தனி நபர்கள் "சல்வா ஜுடும்' எனும் இயக்கத்தைத் தொடங்கினர்.
  • "சல்வா ஜுடும்' என்பதற்குக் கோண்டி மொழியில் "அமைதிப்படை' எனப் பொருள்.
  • மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராகச் சல்வா ஜுடும் இயக்கத்தவர் நடத்தும் பிரச்சாரம், ஆவேச நடவடிக்கைகள் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்தன.
  • மாநில அரசு சல்வா ஜுடுமை அரவணைத்து அங்கீகரித்தது. என்றாலும், ஊர் மக்களுடைய ஒத்துழைப்பு, சல்வாஜுடும் இயக்கத்திற்குக் கிடைக்கவில்லை.
  • இதனால் அரசு மாவோயிஸ்ட்டுகளின் தலைவர்களின் தலைக்கு விலை வைத்தது.
  • மாவோயிஸ்ட்டுகளின் கொலைவெறி அடங்காததால், வட மாநிலங்கள் இப்பொழுது தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
  • சமீபத்தில் நடந்த பீஜப்பூர் சம்பவத்துக்குத் தலைமை வகித்த, "மத்வி ஹித்மா' எனும் மாவோயிஸ்ட் இருக்கின்ற இடம் குறித்துத் தகவல் தந்தாலோ, கைது செய்து ஒப்படைத்தாலோ, அவர்களுக்கு 7 இலட்சம் ரூபாய் வழங்குவதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அறிவித்திருக்கிறது.
  • சத்தீஸ்கர் மாநிலம் அந்தத் தலைவனைப் பற்றித் தகவல் தந்தால், 10 இலட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கிறது.
  • வட மாநிலங்களில் கொலைவெறிச் செயலை நிகழ்த்தும் மாவோயிஸ்ட்டுகளின் தலைவன் பசவராஜு (மற்றொரு பெயர் நம்பாலா கேசவ ராவ்) இருப்பிடம் குறித்துத் தகவல் தந்தால், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிஸா ஆகிய மூன்று மாநிலங்களும் சேர்ந்து 1 கோடியே 85 இலட்சம் ரூபாய் வழங்குவதாக அறிவித்திருக்கின்றன.
  • ஒரு காலத்தில் ஜமீன்தார்களும், பண்ணையார்களும், இனாம்தார்களும் விவசாயிகளைக் கொத்தடிமைகளாக வைத்திருந்ததால், நக்சலைட்டுகள் தோன்ற வேண்டிய அவசியம் இருந்தது.
  • இன்றைக்கு எந்த ஜமீன்தாரும், பண்ணையாரும், விவசாயிகளுடைய நிலங்களை அபகரிப்பதில்லை; அடிமையாக நடத்துவதில்லை.
  • அப்படியிருக்கும்பொழுது மாவோயிஸ்ட்டுகளே, நீங்கள் ஏன் துப்பாக்கி ஏந்துகிறீர்கள்? ஆதிவாசிகளை அடிமைகளாகவே வைத்திருக்கிறீர்கள்? ஒரு தலைமுறை சிறார்களைத் தற்குறிகளாகவே வைத்திருக்கிறீர்கள்.
  • சாலை வசதிகளைத் தடுத்து, மின்வசதி தராமல் செய்து, பாமர மக்களை ஏன் இருட்டறையில் வைத்திருக்கிறீர்கள்?
  • நீங்கள் எப்போது மனந்திருந்தப் போகிறீர்கள்? சம்பல் பள்ளத்தாக்குக் கொள்ளைக்காரர்கள்கூட, கர்மயோகி ஜெயப்பிரகாஷ் நாராயணனால் மனந்திருந்தி விட்டார்களே!

நன்றி: தினமணி  (28 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்