- ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் இசை நிகழ்ச்சி நடக்கவிருந்த அரங்கத்தில் மார்ச் 22 அன்று நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. இஸ்லாமிக் ஸ்டேட்-குராசான் (ஐஎஸ்-கே) என்னும் அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது. அரங்கத்துக்குள் புகுந்து பார்வையாளர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 11 பேரில், தஜிகிஸ்தானைச் சேர்ந்த நால்வரை ரஷ்ய காவல் துறை கைதுசெய்துள்ளது.
- ஆப்கனிஸ்தானின் நங்கரஹார் மாகாணத்தில் 2015இல் தொடங்கப்பட்டது ஐஎஸ்-கே. 2021 ஆகஸ்ட் மாதம் ஆப்கனில் மீண்டும் தாலிபான் ஆட்சி அமைத்த பிறகு தாலிபான் பஷ்டூன் அரசு மீது அதிருப்தியில் உள்ள இளைஞர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு இந்த அமைப்பில் சேர்க்கப்படுகின்றனர்.
- இவர்கள் மத்திய ஆசியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் சிறுபான்மை இஸ்லாமியப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். ஆப்கனில் சிறுபான்மையினரான ஷியா இஸ்லாமிய பிரிவினர் மீதும் ஐஎஸ்-கே அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
- அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட ஈரானின் ராணுவத் தளபதி காசிம் சுலைமானிக்கு ஜனவரி மாதம் நடத்தப்பட்ட நினைவஞ்சலிக் கூட்டத்தில், ஐஎஸ்-கே இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலை நிகழ்த்தியது; இதில் 80 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துருக்கி, சிரியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் இப்போது ரஷ்யாவிலும் தாக்குதல் நிகழ்த்தியுள்ளது. ஐஎஸ் அமைப்பின் பயங்கரவாதக் கொடுங்கரம் மீண்டும் வலிமை பெற்றுவருவதையே இந்தத் தாக்குதல்கள் உணர்த்துகின்றன.
- இராக்கிலும் சிரியாவிலும் மையம்கொண்டிருந்த இஸ்லாமிக் ஸ்டேட் (ஐஎஸ்) தீவிரவாத அமைப்பு ஆறு ஆண்டுகளுக்கு முன் அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய தொடர் தீவிரவாதத் தாக்குதல்கள், அந்த அமைப்பு புத்துயிர்பெற்றுவிட்டது அல்லது பழைய வேகத்தில் தாக்குதல்களை நிகழ்த்தத் தொடங்கிவிட்டது என்கிற அச்சத்தையே எழுப்புகின்றன.
- சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத் ஆட்சியைக் கவிழ்க்க ஐஎஸ் முயன்றுவந்தது. இதனால் விளைந்த உள்நாட்டுப் போரில் 2015இல் தலையிட்டதால் அசாத்தின் அரசு தப்பியது. இப்போது ரஷ்யா, அதன் அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருக்கு எதிரான பிரச்சாரக் காணொளிகளை ஐஎஸ்-குராசான் வெளியிட்டுவருகிறது. ஆப்கனிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ‘இஸ்லாமியர்கள் ரத்த வெள்ளம் ஓடுவதற்கு’ ரஷ்யாவே காரணம் என்று இந்தக் காணொளிகளில் கூறப்படுகிறது.
- ஒருகாலத்தில் இராக்கிலும் சிரியாவிலும் குறிப்பிட்ட பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு இயங்கிவந்த ஐஎஸ் அமைப்பு, இப்போது உள்நாட்டுக் குழப்பம் நிறைந்த நாடுகளில் ரகசியமாக இயங்கியபடி தாக்குதல்களை நடத்தும் வழக்கமான தீவிரவாத அமைப்பாக உருமாறியுள்ளது. 1990களின் பிற்பகுதியில் தீவிரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டிருந்த ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வாக்குறுதியுடன் விளாடிமிர் புடின் பதவிக்கு வந்தார்.
- கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, இரும்புக்கரம் கொண்டு ரஷ்யாவின் பாதுகாப்பை அவர் பலப்படுத்திவருகிறார். ஆனாலும் ரஷ்யாவில் கடந்த இருபது ஆண்டுகளில் மிக மோசமானது என்று சொல்லப்படும் தீவிரவாதத் தாக்குதல், அவர் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாள்களில் நிகழ்ந்திருப்பது கவலை அளிக்கிறது.
- ரஷ்யாவில் பாதுகாப்பு ஏற்பாட்டில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்தியிருக்கிறது. அதே நேரம் ஐஎஸ் போன்ற அமைப்புகள் வலிமைபெறுவதற்கும் மீண்டும் ஒன்றுகூடி தாக்குதல்களை நடத்துவதற்கும் வித்திடும் மேற்கு ஆசிய புவிசார் அரசியல் சூழல் மாற்றப்பட்டாக வேண்டும். இதற்குப் பல நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமாகிறது. அது நிகழ்வதைப் பொறுத்தே மாற்றங்கள் சாத்தியப்படும்.
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 03 – 2024)