TNPSC Thervupettagam

மின் கட்டண உயர்வு: தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கை

July 22 , 2024 174 days 190 0
  • தமிழ்நாட்டில் ஜூலை 1 முதல் மின் கட்டணத்தை முன் தேதியிட்டு அரசு உயர்த்தியிருப்பது மக்களைக் கவலை அடையச் செய்துள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது அனைத்துத் தரப்பினரையும் பாதிக்கும் என்பதை அரசு உணராதது ஏன் என்னும் கேள்வியும் எழுகிறது.
  • மின் எரிபொருள் - மின்சாரக் கொள்முதல் விலை உயர்வால் மின் வாரியத்துக்கு ஏற்படும் சுமையைக் குறைக்க, 2022-23 தொடங்கி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை வாரியம் அறிவித்திருந்தது.
  • அதன்படி, ஒவ்வொரு ஜூலை முதல் தேதியும் மின் கட்டணத்தை உயர்த்தும் நடைமுறை அமலானது. 2022இல் 26.73% மின் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது. 2023இல் வீட்டு உபயோக மின் கட்டணம் 2.18% அதிகரிக்கப்பட்டாலும், அரசே அதை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அறிவித்தது. எனவே, சிறு, குறு தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் - இதரப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் மட்டுமே அதிகரித்தது.
  • தற்போது அனைத்துப் பயனாளிகளுக்கும் 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு மின்உற்பத்தி - பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு 20 முதல் 55 காசுகள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இலவச - மின்சார மானியத் திட்டங்கள் தொடரும் என்று அரசு தெரிவித்துள்ளது.
  • இதன்படி 100 யூனிட்டுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் ஒரு கோடி வீடுகள் - குடிசைகளுக்குக் கட்டண உயர்வு இல்லை என்றும் எஞ்சிய 1.47 கோடி வீடுகளுக்குக் குறைந்த அளவே கட்டணம் அதிகரிக்கும் என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது. எனினும், ஏற்கெனவே அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், இந்த உயர்வு ஏழை, நடுத்தரக் குடும்பத்தினரின் பொருளாதாரச் சுமையை அதிகரிக்கவே செய்யும்.
  • அடுக்குமாடிக் குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ரூ.8.15-லிருந்து ரூ.8.55 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023 அக்டோபரில் மின்தூக்கி வசதி இல்லாத, 3 மாடிகளுக்குக் குறைவான அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு மின் கட்டணம் குறைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், அந்த அறிவிப்புக்கு மாறாக, மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது விமர்சனத்துக்கு வழிவகுத்துள்ளது.
  • மேலும் தொழில், வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதன் மூலம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும். தொழில் நிறுவனத்தினரின் சுமை, இறுதி நுகர்வோரான மக்களின் தலையிலேயே மறைமுகமாக ஏற்றப்படும் அபாயம் உள்ளது.
  • மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்காக விதிக்கப்பட்ட நிபந்தனையின்படியே மின் கட்டண உயர்வு என்கிற தமிழக அரசின் வாதம் ஏற்கத்தக்கதல்ல. ஒப்பீட்டளவில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவு என்கிற வாதத்தை முன்வைத்து, ஒவ்வொரு ஜூலை முதல் தேதியும் மின் கட்டணத்தை உயர்த்தும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும்.
  • வெளிச் சந்தையிலிருந்து வாங்கப்படும் மின்சாரத்தைக் குறைந்த விலையில் வாங்குவதற்கான வழிமுறைகளை யோசித்து அரசு செயல்படுத்த வேண்டும். 2021 தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, மாதந்தோறும் மின் பயன்பாட்டு அளவைக் கணக்கிடும் முறையை நடைமுறைப்படுத்த ஆளும் திமுக அரசு முன்வர வேண்டும். மக்களின் மின் கட்டணச் சுமை அதிகரிப்பதைத் தடுக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (22 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்