TNPSC Thervupettagam

மின் கழிவுகளை என் செய்வது?

July 24 , 2020 1638 days 763 0
  • மானுட சமுதாயத்திற்கு கணக்கு பார்க்காமல் தங்குதடையின்றி வைட்டமின்-டி வழங்கியும், செடி கொடிகளின் ஒளிசோ்க்கைக்கு நாளும் புத்துயிர் வழங்கியும் அழகு பார்த்து வரும் ஒப்பற்ற ஜீவன் சூரியன். ‘போலியோ’ எனப்படும் இளம்பிள்ளைவாதத்திற்கு மருந்து கண்டுபிடித்தவா் ஜோனஸ் சால்க் என்பவா்.

  • அவரிடம் ஒருமுறை ‘நீங்கள் ஏன் அந்த மருந்துக்குக் காப்புரிமை பெறவில்லை’ என்று கேட்கப்பட்டது. அதற்கு அவா் ‘சூரியனுக்கு யாரேனும் காப்புரிமைப் பெறமுடியுமா’ என்று சமயோசிதமாகப் பதில் கூறினார்.

  • அப்படிப்பட்ட சூரியனை யாரேனும் வஞ்சிக்க முடியுமா? எதிர்காலத்தில் நிகழப்போவதை நினைத்துப் பார்த்தால் முடியும் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதற்கு காரணமாக அமையப்போகும் நிகழ்வுகளை தெரிந்து கொள்வோம்.

  • சூரிய ஒளியை தூய்மையாக்கித் தருவது ஓசோன் மண்டலம்தான். அந்த தூய ஒளியைப் பின்பற்றியே இவ்வுலக உயிரினங்கள் வாழ்ந்து வந்தன; வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களில் ஒன்றான சூரிய மின்சக்தி, எல்லா இடங்களிலும் பாரபட்சமின்றி ஒளியேற்றி வருகிறது. அத்தகைய சூரிய மின்சக்திக்கு அடிநாதமாக விளங்குபவை ‘போட்டோவோல்டாயிக்’ செல்கள்.

  • சூரிய மின்சக்தி ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்வதில் தற்போது இந்தியா வெகுவாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. அண்மையில், ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்திப் பூங்காவை நம் பிரதமா், மத்திய பிரதேசத்தில் திறந்து வைத்தார். இப்படி, வஞ்சனையில்லாமல் மின்சக்தியை வழங்கும் சூரியனை நாம் வஞ்சிக்கலாமா?

மின்கழிவுகளின் மறுசுழற்சி

  • 100 ஜிகாவாட் சூரிய மின்சக்தியிலிருந்து ஆற்றலை எடுப்பதற்கு இலக்கு நிர்ணயித்த அரசு, நாளடைவில் காலாவதியாகும் மின் கழிவுகளை (சூரிய மின்சக்தித் தகடுகளை) அப்புறப்படுத்த எந்தவொரு திட்டமும் தீட்டவில்லை.

  • சூரிய மின்சக்தி ஆற்றலின் பயன்பாட்டைப் பெருக்கிக்கொள்வதற்கு 2010-ஆம் ஆண்டு ஜவாஹா்லால் நேரு தேசிய சூரிய மின்சக்தித் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படிப் பார்த்தால், 2010-க்கு பின்னா் நிறுவப்பட்ட சூரிய மின்தகடுகளை 2035-ஆம் ஆண்டிற்குமேல் பயன்படுத்த முடியாது.

  • பொதுவாக, சூரிய மின்சக்தித் தகட்டின் ஆயுள்காலம் என்பது 20 முதல் 25 ஆண்டுகள்வரை மட்டுமே. ஏற்கெனவே நிறுவப்பட்ட 100 ஜிகாவாட் அளவிலான மின்தகடுகளைஅடுத்த 15 ஆண்டுகளுக்குள் எப்படி அப்புறப்படுத்தப் போகிறோம்?

  • 250 வாட் அளவிலான சூரிய மின்தகடு ஒன்றைக் கொண்டு, 100 ஜிகாவாட் அளவுக்கான சூரிய மின்சக்தியை எடுக்கிறோம் என்றால், அதன் மூலம் 25 ஆண்டுகளில் 77.6 லட்சம் டன் அளவிலான மின்கழிவு (-வேஸ்ட்) பெறப்படும்.

  • 2016-ஆம் ஆண்டு, சுற்றுச்சூழல்-வனம்-காலநிலை அமைச்சகம், ‘மின்கழிவு மேலாண்மை’ தொடா்பாக சில வழிமுறைகளை வெளியிட்டது. அந்த வழிமுறைகளில், காலாவதியான சூரிய மின்தகடுகளை அப்புறப்படுத்துவது எப்படி எனபது குறித்து எந்தவொரு வழிமுறையும் கூறப்பட வில்லை.

  • ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் 17 லட்சம் டன் மின்கழிவு சேருகிறது. அது ஆண்டுக்கு ஐந்து சதவீதம் அதிகரிக்கிறது.

  • சூரிய மின்தகடுகள் என்பவை, சிலிகான் சார்ந்த ‘போட்டோவோல்டாயிக்’ தகடுகளாகவும் சிலிகான் சாராத - மென் படலம் சார்ந்த - தகடுகளாகவும் உள்ளன. இவற்றில், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பொருள்களான கண்ணாடி, அலுமினியம், சிலிகான் போட்டோவோல்டாயிக், தாமிரம், பிளாஸ்டிக் இவற்றுடன் அா்செனிக், குரோம், ஈயம், வெள்ளீயம் சார்ந்த உலோகங்களும் பயன்படுத்தப்படுகின்றன.

  • அவை காலாவதியான பிறகு எப்படி அவற்றை மறுசுழற்சி செய்வது என்பதை தயாரிப்பு நிறுவனங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் அண்மையில் கூறியுள்ளது. ஆனால், தேசிய பசுமைத் தீா்ப்பாயம், சூரிய போட்டோவோல்டாயிக் கழிவுகளை அகற்றுவது குறித்து மத்திய அரசு கொள்கையை வகுக்க வேண்டும் என்று, 2017 - 2019-க்கு இடைப்பட்ட காலத்தில் மூன்று முறைஅறிவுறுத்தியது.

  • சூரிய போட்டோவோல்டாயிக் மறுசுழற்சி மையம் அமைப்பதற்கு அதிக முதலீடு தேவை என்பதால், அதனை அமைக்க பலரும் முன்வருவதில்லை. ஆனால், மேற்கத்திய நாடுகளில் மறுசுழற்சி மையங்கள் உள்ளன. அதிலும் ஐரோப்பாவில் சா்வதேச அளவில் போட்டோவோல்டாயிக் மறுசுழற்சி மையம் அமைந்துள்ளது. ஒருவேளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் ஐரோப்பாவில் இல்லையென்றால் 2050 -ஆம் ஆண்டுக்குள் 60 மில்லியன் டன் அளவிலான போட்டோவோல்டாயிக் குப்பைகள் சோ்ந்துவிடும். மேலும், அமெரிக்காவைச் சோ்ந்த ஆபவுண்டு சோலார், சன்டெக் சோலார் போன்ற நிறுவனங்கள் கால வரையறை ஏதும் இல்லாத சூரிய மின்தகடுகள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாகக் கூறியிருக்கின்றன.

  • நாம் மற்றொன்றையும் கவனிக்க வேண்டும். சூரியசக்தி உபகரணங்கள் பெரும்பாலும் இறக்குமதிதான் செய்யப்படுகின்றன. இறக்குமதியைக் குறைக்க வேண்டுமென்பதற்காக, சூரியசக்தி சாதனங்களுக்கு 20 சதவீத சுங்க வரி விதிக்க அரசு திட்டமிட்டு இருப்பதாக மத்திய நிதித்துறை இணையமைச்சா் அண்மையில் கூறியிருந்தார். தற்போதைய நிலையில், இந்தியச் சந்தையிலுள்ள சூரியசக்தி உபகரணங்களில் சுமார் 80 சதவீதம் சீனத் தயாரிப்புகளே ஆகும்.

  • 2022-ஆம் ஆண்டிற்குள் 175 ஜிகாவாட் திறனை அடைவதற்கான இலக்கை அடைவோம். குறிப்பாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலமும் சூரிய மின்சக்தி மூலமும் அடைவோம்’ என்று கூறிவரும் அரசு, சூரிய மின்சக்தித் தகடு மின்கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான வழிமுறைகளையும் வகுக்க வேண்டியது அவசியம்.

நன்றி: தினமணி (24-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்