TNPSC Thervupettagam

மின்சார சீர்திருத்த மசோதா

August 21 , 2021 1077 days 593 0
  • மின் விநியோக நிறுவனங்களின் மோசமான நிதிநிலை காரணமாக அவை மின் உற்பத்தி - பகிர்மான நிறுவனங்களுக்கும், வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கும் பணம் செலுத்த இயலாமல் தத்தளித்து வருகின்றன.
  • நுகர்வோரிடமிருந்து வருவாய் பெற்று விநியோகச் சங்கிலியினை தக்கவைக்க மின் விநியோக நிறுவனங்கள் எதிர்நீச்சல் போடுகின்ற போதும் தங்கள் செலவுகளை மீட்டெடுக்க இயலாமல் திணறி வருகின்றன. இந்நிறுவனங்களின் செலவுகளில் கிட்டத்தட்ட 75-80 சதவிகிதம் மின் கொள்முதல் செலவுகள்.
  • மொத்த தொழில்நுட்ப, வணிக இழப்புகள் பன்னிரண்டு மாநிலங்களில் 25 சதவீதத்திற்கு அதிகமாகவும், ஆறு மாநிலங்களில் 15 முதல் 25 சதவிகிதத்திற்குள்ளாகவும் இருப்பதாக 2020- ஆம் ஆண்டில் வெளியான மின் விநியோக பயன்பாட்டு மன்றம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
  • இச்சூழ்நிலையில் ஒரு முழுமையான மாற்று அணுகுமுறையே இத்துறையினை மீண்டும் சிறப்புற செயல்படவைக்கும் என்பதனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மின்சார திருத்த மசோதாவை நிறைவேற்ற ஆயத்தமாகி உள்ளது.

மின்சார திருத்த மசோதா

  • இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் நுகர்வோர் தங்களுக்குத் தேவையான மின்சார விநியோக நிறுவனத்தை தாங்களே தேர்வு செய்யும் உரிமையைப் பெறுவர்.
  • முன்கூட்டியே சேவைக் கட்டணம் செலுத்தும் மின் இணைப்பிற்கு மின்மானி பொருத்தப்படும் போது வசூலிக்கப்படும் வைப்புக் கட்டணம் தேவையில்லை.
  • இந்த மசோதா அரசே நிர்வகிக்கும் உலக சேவை நிதியத்தினை உருவாக்கவும் வழிவகை செய்கிறது. இந்த நிதியம் மானியங்கள் வழங்கப்படும்போது ஏற்படும் பற்றாக்குறையினை சமாளிக்க உதவும்.
  • தேசிய காலநிலை மாற்ற இலக்குகளைக் கருத்தில் கொண்டு, புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்முதலை நிர்ணயிக்கும் பொறுப்பு, மாநில ஆணையங்களிலிருந்து மத்திய அரசுக்கு மாற்றப்படுகிறது.
  • புதுப்பிக்கத்தக்க மின்தோற்றிகளை (ஜெனரேட்டர்) இணைப்பதனால் மின் கட்டமைப்பு சிக்கலாகி வரும் இக்காலகட்டத்தில் மின் பகிர்மான மையங்களின் செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இம்மசோதா மின் பகிர்மான மையங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
  • இம்மசோதா மின்சார மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையினை அதிகரித்து அதன்மூலம் தீர்ப்பாயத்தினை பலப்படுத்த ஆவன செய்யும்.
  • மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் தலைவர், உறுப்பினர்களின் பணிகளும் தெளிவாக இம்மசோதாவில் விவரிக்கப்பட்டுள்ளன.
  • திருத்த மசோதா மூலம் மத்திய - மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களில் நான்காவது உறுப்பினர் சேர்க்கப்படுகிறார். அந்த உறுப்பினர் பொருளாதாரம், வணிகம், பொதுக் கொள்கை / பொது நிர்வாகம் அல்லது மேலாண்மைத் துறையில் தகுதியும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
  • முன்பு "பல் இல்லா புலிகள்' என்று அழைக்கப்பட்ட ஒழுங்குமுறை ஆணையங்கள் தற்போது இம்மசோதா மூலம் சொத்து பறிமுதல், கைது, சிறையில் அடைத்தல் உள்ளிட்ட தீர்ப்பினை வழங்க இயலும்.
  • ஆணையத்தின் சட்டம் சார்ந்த உறுப்பினரின் வழிகாட்டுதலில் இந்த அதிகாரங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் சிறந்த முறையில் இவ்வாணையம் தனது செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த இயலும்.
  • நிதிப் பற்றாக்குறை காரணமாக தற்போது இருக்கும் மின் பகிர்மான நிறுவனங்கள் நலிவடைந்த சூழலில் இம்மசோதா புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குகிறது. இது நுகர்வோருக்கான மின்நுகர்வில் கடுமையாக பாதிப்பினை ஏற்படுத்தும்.
  • நுகர்வோர் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொறுப்பு மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களின் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
  • இதனால் நுகர்வோர் பாதுகாப்பு வழிமுறைகள் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் வாய்ப்பு உள்ளது. வீட்டு மின் இணைப்பு, விவசாயம் போன்ற சில நுகர்வோர் பிரிவினருக்கும் சில நேரங்களில் தொழில் பிரிவினருக்கும் மாநில அரசுகள் வழங்கும் மின் கட்டணக் குறைப்பு பற்றி, இத்திருத்த மசோதாவில் எவ்வித வழிகாட்டு நெறிமுறைகளும் இல்லை.
  • சமீபத்தில் 'மின் கட்டண கட்டுப்பாட்டாளர் மன்றம்' மின் கட்டண விலை கூறுகள் பற்றிய அதன் அறிக்கையில் மின் விநியோக செலவினைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளது.
  • அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட நிலக்கரி கொள்முதல் செலவுகள், இருப்புப் பாதை சரக்குக் கட்டணம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கான எவ்வித பரிந்துரையும் இம்மசோதாவில் இல்லை.
  • இந்தக் கொள்முதல் செலவுகள் மொத்த - சில்லறை விலைக் குறியீட்டெண்களின் சராசரி மதிப்புடன் ஒப்பிடும்போது கடுமையாக அதிகரித்துள்ளது.
  • மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தாத, பயன்படுத்தப்படாத மின்சக்தியின் மாறாச் செலவு மின் விநியோக நிறுவனங்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பினை குறைக்க எந்தத் தீர்வும் இந்த மின் திருத்த மசோதாவில் இல்லை.
  • மின் விநியோக ஒப்பந்தங்களுக்கான தகுதி மத்திய அரசாலும் ஒப்பந்தங்களுக்கான பதிவு நிபந்தனைகள் மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களாலும் நிர்ணயிக்கப் படுகின்றன.
  • இம்மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள இது போன்ற முரண்பட்ட அம்சங்கள் மின் விநியோகத்தில் அரசின் கட்டுப்பாடுகளை நீர்த்துப் போகச் செய்யும்.
  • மின்சார விநியோக நிறுவனங்கள் மற்றும் மாநில மின்சார வாரியங்களுக்கு தொழில்நுட்ப - வணிக இழப்புகள் குறித்த அளவீடுகளின் கீழ் மானியம் வழங்குதல், இடர் மேலாண் குழுவினை மின் விநியோக நிறுவனங்களில் ஏற்படுத்துதல் போன்ற மின்துறை சீர்திருத்தங்களுக்கான நடவடிக்கைகளை எடுக்க இம்மசோதாவில் எவ்வித வழிமுறையும் இல்லை.
  • பதினான்கு வருடங்களுக்குப் பிறகு திருத்தப்படும் மின்சாரச் சட்டத்தினை முன்னெடுத்துச் செல்லும் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் மக்கள் நலனை போற்றி பாதுகாக்கும் என நம்புவோம். விரைவில் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் வலுவாகக் கட்டமைக்கப் பட்டு எவ்வித தலையீடுமின்றி சுயமாக செயல்பட வேண்டும்.

நன்றி: தினமணி  (21 – 08 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்