TNPSC Thervupettagam

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

April 24 , 2024 262 days 350 0
  • மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) இந்தியாவில் பரவலான பயன்பாட்டுக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. எனினும், ஒவ்வொரு தேர்தலின்போதும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து விவாதங்கள் எழுகின்றன.
  • வளர்ச்சியடைந்த நாடுகளே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தத் தயங்கிய நிலையில், உலகின் மிகப் பெரிய ஜனநாயகத் தேர்தல் நடைமுறையைக் கொண்டிருக்கும் இந்தியாவில், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னணியில் சவால்களும் சர்ச்சைகளும் நிறைந்திருக்கின்றன.
  • வாக்குச்சீட்டில் சிக்கல்: மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை 2004 தேர்தலில்தான் வாக்குப்பதிவு இயந்திரம் முதல் முறையாகப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு முன்புவரை வாக்குச்சீட்டு நடைமுறைதான் கடைப்பிடிக்கப்பட்டது. தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையைத் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன. அதில் முதன்மையானது, காகிதங்கள் அச்சிடுவதற்கான செலவு; இரண்டாவது, வாக்கு எண்ணிக்கை வரை வாக்குச்சீட்டுகளைப் பாதுகாப்பாக வைத்திருத்தல்.
  • வாக்கு எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஒவ்வொரு சீட்டாக எண்ணுவது மிகவும் சிக்கலான பணி. சில மாநிலங்களில் வாக்குச்சீட்டைப் பயன்படுத்தி கள்ள வாக்குகளும் அதிகம் போடப்பட்டன. கட்சி ஆதரவாளர்கள் வாக்குச்சாவடிகளுக்குள் புகுந்து வாக்குப்பெட்டிகளைக் களவாடிச் சென்ற சம்பவங்களும் நடந்தேறின. இந்தச் சிக்கல்களைத் தீர்க்கும் பொருட்டே வாக்குச்சீட்டு முறைக்கு மாற்றாக வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இவிஎம் வரலாறு: முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.எல்.ஷாக்தர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான யோசனையை முன்மொழிந்தார். இதைத் தொடர்ந்து, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், இந்திய மின்னணுக் கழகத்துடன் இணைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும் பணியில் இறங்கியது.
  • 1982இல் கேரளத்தின் பரவூர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல் முதலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. எனினும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பயன்பாடு சட்டரீதியான சவாலை எதிர்கொண்டது.
  • இந்நிலையில், ‘தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தக் கூடாது; அதனைப் பயன்படுத்த அரசமைப்புச் சட்டத்தில் இடமில்லை’ என உச்ச நீதிமன்றம் கூறியது; 1984இல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரப் பயன்பாட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
  • சட்டத்திருத்தம்: 1989இல், ராஜிவ் காந்தி அரசு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 வரைவில் திருத்தம் செய்து, தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்த அனுமதி அளித்தது. ஐஐடி மும்பை தொழிற்சாலை வடிவமைப்புத் துறையினரால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தேர்தல்களில் பயன்பாட்டுக்கு வந்தது.
  • 1998இல் பரிசோதனை முயற்சியாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி உட்பட 25 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 2001இல் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. 2004 மக்களவைத் தேர்தலில்தான் நாடு முழுவதும் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது.
  • குற்றச்சாட்டுகளும் விவிபாட் அறிமுகமும்: வாக்குப்பதிவு இயந்திரம் மீது நம்பகத்தன்மை இல்லை; வாக்குச் சீட்டு முறைக்கே மீண்டும் திரும்ப வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர்.
  • வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இதன் பின்னணியில், உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் ஒப்புகைச் சீட்டை (VVPAT) தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது. VVPAT (Voter Verifiable Paper Audit Trail) எனப்படும் ஒப்புகைச் சீட்டின் மூலம், வாக்காளர்கள் வாக்கைச் செலுத்தியவுடன் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்கள் வாக்கு பதிவாகியுள்ளதா என்பதைச் சரிபார்க்க முடியும்.
  • பிற நாடுகளில்: நமீபியா, நேபாளம், ஆர்மீனியா, வங்கதேசம், பூடான், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பல்கேரியா,இத்தாலி, சுவிட்சர்லாந்து, கனடா, மெக்சிகோ, அர்ஜென்டினா, பிரேசில், சிலி, பெரு, வெனிசுவேலா ஆகிய நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு முறையைப் பயன்படுத்துகின்றன. இதில் 2014இல் நடந்த அதிபர் தேர்தலுக்கு நமீபியா, இந்தியாவின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தங்கள் நாட்டின் தேர்தலுக்காகப் பயன்படுத்தியது.
  • ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா (பரவலாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் சில தேர்தல்களில் பயன்படுகிறது) உள்ளிட்ட பல நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தேர்தல்களில் பயன்படுத்துவதில்லை. வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் இவிஎம் முறையில் வாக்களிப்பது ஜனநாயகத்துக்கு விரோத மானது என்கின்றன.
  • கணினிகளை நம்ப முடியாது என்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை மின்னணு முறையில் ஹேக்கிங் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்நாடுகள் கருதுகின்றன.
  • இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் இவிஎம் முறை பயன்பாட்டில் இல்லை; வங்கதேசம் இவிஎம் பரிசோதனைகளில் இறங்கி, அதன் மீது உடன்பாடில்லாமல் மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
  • ஜனநாயகத் தேர்தலில் மக்கள் செலுத்தும் வாக்கை உறுதிசெய்துகொள்வதற்கு அனைத்து உரிமையும் உண்டு. அந்த வகையில், ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை (VVPAT) மட்டும் எண்ணாமல், 100% ஒப்புகைச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும் என்னும் கோரிக்கை வலுத்துவருகிறது.
  • 100% ஒப்புகைச் சீட்டுகளைச் சரிபார்ப்பதற்குத் தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (24 – 04 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்