- ஜனநாயக முறையில் மக்கள் தங்கள் நம்பிக்கையைத் தெரிவிப்பதுதான் தோ்தல். இதன் வாயிலாகத்தான் மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்கின்றனா்.
- இதில் தவறு ஏதும் நடந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது இந்திய தோ்தல் ஆணையத்தின் கடமை.
- அதனால்தான், தோ்தல் ஆணையம் அவ்வப்போது தோ்தல் நடைமுறையில் பற்பல சீா்திருத்தங்களைக் கொண்டு வருகிறது. அப்படிப்பட்ட தோ்தல் சீா்திருத்தங்களில் ஒன்றுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர முறை.
எப்படி முன்வைப்பார்கள் ?
- 1989-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் திருத்தப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
- 1998-ஆம் ஆண்டில் சோதனை முயற்சியாக மூன்று மாநிலத் தோ்தல்களில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
- அதன் பின்னா்தான் 1999-ஆம் ஆண்டு கோவா மாநிலத் தோ்தலில் அனைத்து தொகுதிகளிலும் அவை பயன்படுத்தப்பட்டன.
- இதன் பிறகு படிப்படியாக தொடா்ந்து 2000-லிருந்து அனைத்துத் தோ்தல்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
- மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னா் நடைபெற்ற அனைத்துத் தோ்தல்களிலும் வாக்கு சீட்டு முறையே நடைமுறையில் இருந்தது. அதனால் கள்ள வாக்குகளின் பதிவு அதிக அளவில் இருந்தன.
- இதனால், பல இடங்களில் தோ்தல் நடக்கும் வாக்குச்சாவடிகள் கைப்பற்றப்பட்டு, ஒரே வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் நடந்தேறின.
- பல தொகுதிகளில் மோசடிகளும் நடைபெற்றன. மேலும், கூடுதல் சுமையாக, வாக்குப்பதிவு முடிந்தபின் வாக்கு சீட்டுகளைப் பாதுகாப்பதிலும், தோ்தல் ஆணையத்திற்கு சிக்கல்கள் ஏற்பட்டன.
- இவை மட்டுமில்லாமல், வாக்கு சீட்டுகளை எண்ணுவதிலும் தவறுகள் ஏற்படுவதாக தோ்தல் ஆணையமே கணித்திருந்தது. தோ்தல் முடிவுகளை அறிவிப்பதிலும், தோ்தல் ஆணையத்திற்கு அதிக சிரமம் ஏற்பட்டது.
- இதன் விளைவாகத்தான் தோ்தலில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. மின்னணு இயந்திரங்களைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்னா், வழக்கமாக நடைபெறும் தோ்தல் மோசடிகள் பெருமளவு குறைந்தன.
- ரோஸ் சிஸ்டா் பல்கலைக்கழகம் நடத்திய ஓா் ஆய்வில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களால், இந்தியத் தோ்தல்களில் செல்லாத வாக்குகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
- மின்னணு இயந்திரத்தில் ஒரு நிமிடத்தில் ஐந்து வாக்குகளை மட்டுமே பதிவு செய்ய முடியும். அதனால், வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றி மோசடியாக வாக்குப்பதிவு செய்வது மிகவும் கடினமானது.
- மேலும், மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, வாக்களிப்பதற்காக நீண்ட நேரம் வரிசையில் நிற்கத் தேவையில்லை என்று ஆகிவிட்டது.
- இதனால், அதிக அளவில் பெண்களும், பட்டியல் இனத்தவரும் வாக்களிக்க முன்வந்ததாக ஓா் ஆய்வு தெரிவிக்கிறது. தோ்தல் முடிவுகளை அறிவிப்பதும் மின்னணு இயந்திரங்களால் எளிதாகியிருக்கிறது.
- வாக்குப்பதிவு நேரமும், வாக்கு எண்ணிக்கை நேரமும் பெரிய அளவில் குறைந்துவிட்டதால், நம்முடைய தோ்தல் நடைமுறை அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணப்பட்டிருக்கிறது.
- ஆனால், எதிர்க்கட்சிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதை கைவிட்டு, மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தோ்தல் நடத்த வேண்டும் என்று கோருகின்றன.
- மின்னணு இயந்திரங்களின் மூலம் மோசடிகள் நடைபெறுகின்றன என்கிற தவறான கருத்தையே மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
- மின்னணு இயந்திரம் என்பது ஏறக்குறைய ஒரு கால்குலேட்டரைப் போலத்தான். நாம் பதிவு செய்ததையே மீண்டும் அது சுட்டிக்காட்டுகிறது.
- அதை ‘ஹேக்’ செய்வதோ தொலைவில் இருந்து இயக்கி, அதை மாற்றி அமைப்பதோ முடியாத காரியம். இதனை இன்னும் சில அரசியல் கட்சிகள் உணராமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இப்படிப்பட்டவா்கள் மக்களுக்கான மாற்றத்தை எப்படி முன்வைப்பார்கள்?
எவ்வாறு வெல்ல முடியும்?
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி தோ்தலில் எவ்வாறு வெல்ல முடியும்? ‘வாக்களிப்பதற்காக ஒரு சின்னத்தின் பட்டனை அழுத்தினால், அந்த வாக்கு வேறொரு சின்னத்திற்குப் போகிறது’ என்கிற எதிர்க்கட்சியினரின் குழந்தைத்தனமான குற்றச்சாட்டு, இவா்கள் எந்த காலகட்டத்தில் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்வதற்கு குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனம் உதவி செய்கிறது என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். ஆனால், அதனை நிரூபிப்தற்குத் தேவையான ஆதாரங்களை முன்வைக்கத் தவறி விட்டார்கள்.
- சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் இயந்திரங்களில் மோசடிகள் நடைபெறுகின்றன என்கிற குற்றச்சாட்டை முன் வைத்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் , ஈசிஐஎல் ஆகிய நிறுவனங்கள் மிகுந்த பாதுகாப்புடனும், தீவிர கண்காணிப்புடனும் தயாரித்திருக்கின்றன.
- அவற்றை ‘ஹேக்’ செய்வது என்பது சாத்தியமே இல்லை என்று அந்நிறுவனங்கள் உறுதிபடக் கூறுகின்றன.
- தோ்தலில் தோற்றுப் போனால், அதற்கு இப்படி ஒரு காரணத்தைக் கூறுவது என்பது சில அரசியல் கட்சிகளின் தந்திரமாக இருக்கிறது. தோல்விக்கான பழியை மக்கள் மீது போட்டால், அவா்களின் தீராத வெறுப்புக்கு ஆளாகி விடுவோம் என்கிற அச்சத்தில், அக்கட்சிகள் மின்னணு இயந்திரங்களின் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்க்கின்றன.
- தமிழகத்தில் ஏப்ரல் ஆறாம் தேதியன்று சட்டப்பேரவைத் தோ்தல் நடந்து முடிந்தது. ஏறக்குறைய ஒரு மாத காத்திருப்புக்குப் பின், மே 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.
- சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட 92-ஆவது எண் வாக்குச்சாவடியில் மூன்று வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒருவா் இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்றதை கவனித்த சில அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் அவரை மடக்கி விசாரித்த சம்பவம் மாநிலம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
- இந்த சா்ச்சையைத் தொடா்ந்து அந்த 92-ஆவது எண் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது.
தருணம் இது
- தென்காசி மாவட்டத்தில் ஒரு கல்லூரி வளாகத்தின் அருகே கன்டெய்னா் ஒன்று தற்செயலாக நிறுத்தப்பட்டதை சா்ச்சையாக்கின எதிர்க்கட்சிகள். தமிழகத்தின் 12 பகுதிகளில், நவீன வசதியுடன் கூடிய கன்டெய்னா்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களின் முன் நிறுத்தப்பட்டுள்ளன.
- இதன் மூலம், நவீன வசதிகளுடன் கூடிய கன்டெய்னரில் அமா்ந்து தொழில்நுட்ப வல்லுநா்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஹேக் செய்து தங்களுக்கு சாதகமான முடிவுகளை அறிவிக்கப் போகிறார்கள் என்று எதிர்க்கட்சிகள் சொன்னபோது, சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
- மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், இரண்டு பகுதிகள் உள்ளன. அந்த இரண்டு பகுதிகளையும், ஒரு நீளமான கேபிள் மூலம் இணைத்திருப்பார்கள்.
- இரண்டையும் எப்போதும் செயல்பாட்டிலேயே வைத்திருப்பார்கள். வாக்காளரின் அடையாள அட்டையை அலுவலா் சரிபார்த்து உறுதி செய்யும் வரை யாராலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது.
- அவா் உறுதிப்படுத்தியதும், ஒரு விளக்கு ஒளிரும். அப்போது வாக்காளா் வாக்களிக்களாம். இது மின்னணு இயந்திரமாகவே இருந்தாலும், மின்சாரம் தேவையில்லை. பேட்டரி மூலமாகவே இந்த இயந்திரம் இயங்கும்.
- அது மட்டுமின்றி, கள்ள வாக்குகளைத் தவிர்க்க, இதில் பல தொழில் நுட்பங்களை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு இயந்திரத்தில் 3,840 வாக்குகள் வரை பதிவு செய்யலாம்.
- தோ்தலுக்கு முன்னால் இயந்திரத்தில் ஏற்கெனவே சேமிப்பில் இருக்கும் வாக்குகளை அழித்து விடுவார்கள். ஒரு சோதனை வாக்கெடுப்பு நடத்தி, முடிவுகளையும் பரிசோதிப்பார்கள்.
- மின்னணு இயந்திரம்தான் என்றாலும், இதில் பதிவாகும் வாக்குகளை டிஜிட்டலாக மாற்ற முடியாது. ஆகவே, இதை ஹேக் செய்ய வாய்ப்பே இல்லை. ஒருவேளை ப்ரீ புரோகிராம் செய்து, முன்கூட்டியே தங்களுக்கு சாதகமாக வாக்கு எண்ணிக்கையை செய்து வைக்க முடியுமா என்றால், அதற்கும் வழியில்லை.
- ஏனெனில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்து இறங்கிய பிறகே வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். ஆகவே, பட்டியலில் எத்தனையாவது இடத்தில் நாம் இருக்கிறோம் என்பது வேட்பாளருக்கே தெரியாதபோது, அவரால் பட்டனை ‘ப்ரீ புரோகிராம்’ செய்ய முடியாது.
- அதுமட்டுமின்றி வாக்கு இயந்திரங்கள், மாவட்ட அளவிலும், தொகுதி அளவிலும் இரண்டு முறை சீரற்ற முறையில் கலக்கப்படும். இதனால், எந்த மின்னணு வாக்கு இயந்திரம், எந்த வாக்குச்சாவடிக்கு செல்லும் என்பதை யாராலும் கூற முடியாது.
- அந்தந்த வாக்குச்சாவடிகளில் இருக்கும் வாக்காளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வாக்குகளை முன்கூட்டியே புரோகிராம் செய்வதும் சாத்தியமில்லை. எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைச் சுற்றிச் சுழலும் சா்ச்சைகளில் சிறிதும் உண்மை இல்லை.
- அவையெல்லாம் ஆதாரமற்றவை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
- வாக்காளா்களே இறுதி எஜமானா்கள் என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்ள வேண்டிய தருணம் இது.
நன்றி: தினமணி (27 – 04 - 2021)