- மின்சக்தியால் இயங்கும் இ-ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட முன்பதிவுகள் செய்யப் பட்டிருப்பது, மின்சக்தியால் இயங்கும் வாகனங்களுக்கான புதிய சந்தை வாய்ப்புகளை மட்டுமின்றி இத்துறையில் தமிழ்நாட்டின் தொழில் துறைக்கு உள்ள புதிய வாய்ப்புகளையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.
- ஸ்கூட்டர் ஒன்றின் விலை ரூ.85 ஆயிரத்திலிருந்து ரூ.1.1 லட்சம் வரையில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- விலையின் மதிப்பில் 70% இன்டர்னெல் கம்பஸ்ட்சன் இன்ஜின் (ஐசிஇ) என்று அழைக்கப் படும் உள் எரி இயந்திரத்துக்கானதாக இருக்கும்.
- இந்தியாவின் ஒட்டுமொத்த இருசக்கர வாகனச் சந்தையில் ஏறக்குறைய சரிபாதியை இலக்காகக் கொண்டே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வாகன உற்பத்தியில் அடியெடுத்து வைத்துள்ளது.
- இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் வருடாந்திர சராசரி விற்பனை 2.1 கோடியாக இருக்கிறது.
- அவற்றில், ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை மட்டும் 65 லட்சம். ஆண்டொன்றுக்கு ஒரு கோடி இ-ஸ்கூட்டர்களைத் தயாரிக்க ஓலா எலெக்ட்ரிக் இலக்காக வைத்துள்ளது.
- விரைவில், இந்தியாவுக்கு வெளியே தெற்காசிய அளவிலும் ஐரோப்பாவிலுமாக உலகளாவிய சந்தையை விரித்தெடுக்கும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.
- மின்சக்தியால் இயங்கும் இருசக்கர வாகனச் சந்தையில் சீன நிறுவனங்களுடனான போட்டி ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்துக்கு ஒரு சவாலாக இருக்கக்கூடும்.
- ஆனால், உலக அளவிலான உற்பத்தி அளவில் ஏறக்குறைய 15% உற்பத்தித் திறன் கொண்ட தயாரிப்பு ஆலைகளைத் தாம் திட்டமிட்டிருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உற்பத்தி ஆலையைத் தொடங்குவதற்குத் தமிழ்நாட்டில் ரூ.2,400 கோடியை ஓலா நிறுவனம் முதற்கட்டமாக முதலீடு செய்துள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பகுதியில் 500 ஏக்கரில் அமையவுள்ள ஓலா நிறுவனத்தின் வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலையானது 2020 டிசம்பரில் அன்றைய முதல்வர் பழனிசாமி மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது.
- இதன் மூலமாகப் படிப்படியாக 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இத்தொழிற்சாலைப் பணிகளில் தமிழ்நாட்டின் மனிதவளத்தைப் பயன்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
- ஓசூரிலிருந்து ஏற்கெனவே மின்சக்தியால் இயங்கும் இருசக்கர வாகனங்களைத் தயாரித்து வரும் ஏதர் எனெர்ஜி நிறுவனமும் தமது உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
- சென்னையை மையம்கொண்டுள்ள கார் உற்பத்தித் தொழிற்சாலைகளைப் போல கிருஷ்ணகிரியில் மின்சக்தியால் இயங்கும் வாகனங்களுக்கான தொழிற்சாலைப் பகுதியைத் திட்டமிட்டு உருவாக்குவதற்கான வாய்ப்பாக இவற்றைக் கொள்ள வேண்டும்.
- வாகன உற்பத்தியில் வளர்ச்சிக்கான சாத்தியங்களைக் கொண்ட புதிய துறை என்பதால், தொடர்ந்து மற்ற மின்வாகன உற்பத்தி நிறுவனங்களின் முதலீடுகளையும் ஈர்த்திட மாநில அரசு முயல வேண்டும்.
- இந்தத் தொழிற்சாலைகளுக்கு யாருடைய ஆட்சிக் காலத்தில் அடித்தளம் உருவாக்கப் பட்டது, யாருடைய ஆட்சிக் காலத்தில் உற்பத்தி தொடங்கியது என்று கட்சி அரசியலை முன்னிறுத்தாமல் தமிழ்நாட்டின் தொழில் துறை வளர்ச்சிக்கான மேலும் புதிய வாய்ப்புகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (22 - 07 – 2021)