TNPSC Thervupettagam

மியான்மருக்கு ஆயுதங்களை விற்காதீர்

December 10 , 2019 1815 days 826 0
  • மியான்மருடன் இஸ்ரேல் கொண்டுள்ள உறவின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் வெளியுறவு ரீதியிலான விவகாரம் ஒன்று சமீபத்தில் இஸ்ரேலில் வெடித்துள்ளது. ரோஹிங்கியா முஸ்லிம் சிறுபான்மையினர் படுகொலை செய்யப்படுவது குறித்து, அந்த நாடு தி ஹேக் நகரத்திலுள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணையை எதிர்கொண்டிருக்கும் சூழலில், இப்படிப்பட்ட விவகாரம் வெடித்திருக்கிறது.
  • பல ஆண்டுகளாக மியான்மருக்கு அதிகாரபூர்வமாக ஆயுதங்களை இஸ்ரேல் விற்றுவந்திருக்கிறது. ரோஹிங்கியா முஸ்லிம்கள் கும்பல் கும்பலாகப் படுகொலைகள் செய்யப்படுவது, பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது, ரோஹிங்கியா கிராமங்கள் எரிக்கப்படுவது போன்றவை தொடர்பான குற்றச்சாட்டுகள் வந்த பிறகும், ஆயுத விற்பனையை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்த பிறகும், மியான்மர் மீது பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்த பிறகும் இந்த விற்பனை தொடர்ந்திருக்கிறது.
  • வழக்கறிஞர் எய்தாய் மாக்கின் தலைமையில் இஸ்ரேலின் மனித உரிமை செயல்பாட்டாளர்களின் சிறு குழுவொன்றின் தீவிரமான போராட்டத்துக்குப் பிறகே ஆயுத விற்பனைக்கு அதிகாரபூர்வமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

ஆயுத விற்பனை

  • ஆயுத விற்பனை நிறுத்தப்பட்டதாகத் தோன்றினாலும் இஸ்ரேலுக்கும் மியான்மருக்கும் இடையில் குடிமக்கள் தொடர்பான துறைகளில் நெருக்கம் அதிகரித்தே வந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, மே 2018-ல் இஸ்ரேலின் வெளியுறவுத் துறை மியான்மருடன் கல்வி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின்போது யூதர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், இனவெறியை எதிர்கொள்வது குறித்தும் மியான்மரின் பாடத்திட்டத்தில் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருப்பதுதான் வேடிக்கை.
  • தி ஹேக் நகரத்தில் தனது நாட்டைப் பிரதிநிதித்துவம் செய்வேன் என்று மியான்மரின் ஆங் சான் சூச்சி அறிவித்திருந்தார். படுகொலைக்காகக் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு மியான்மருக்கான இஸ்ரேல் தூதர் வாழ்த்துகள் அனுப்பியிருந்தார். “அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக் கட்டும்” என்று இரண்டு முறை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ‘ஹாரெட்ஸ்’ இதழ் வலியுறுத்திய பிறகே அவர் தனது ட்விட்டர் பதிவுகளை நீக்கியிருக்கிறார்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள்

  • இந்த ட்விட்டர்களைப் பற்றிய செய்திக்குப் பிறகு மக்களிடமிருந்து கடும் விமர்சனம் எழுந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து, ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக முதன்முறையாக அதிகாரபூர்வமான கண்டனத்தை வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டது. தாமதமாக வந்தாலும் இது குறித்து தெளிவான கண்டனம் வந்திருப்பது நல்லதே.
  • ஆனால், மியான்மர் என்பது இஸ்ரேல் ஆயுதத்தை விற்கும் கொலைகார அரசுகளுள் ஒன்று. இந்த விற்பனையைப் பற்றித் தகவல்கள் வெளிவந்துவிட முடியாத வகையில் தணிக்கையும் கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. தெற்கு சூடானில் இஸ்ரேலால் அதிகாரபூர்வமாக விற்பனை செய்யப்பட்ட துப்பாக்கிகளைக் கொண்டே படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன.
  • பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு ஆயுதம் விற்பனை செய்வதையும் செயல்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர். பிலிப்பைன்ஸில் காவல் துறையினர் மீது கடுமையான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதேபோல் உக்ரைனில் உள்ள புதிய-நாஜிக்கள் இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களை வாங்கியிருக்கிறார்கள். இது குறித்த விவாதங்கள் பொதுவெளியில் நடக்கவிடாமல் செய்திருப்பது இஸ்ரேலின் பெரும் தார்மீகத் தோல்வி. இந்த இழிசெயல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (10-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்